பண்பாடு, பாரம்பரியம், மரபு

பேராசிரியர் ஹேமா
கீழடி பண்பாடு(பண்பாடுபாரம்பரியம்மரபு போன்ற  சொற்களை பல வகைகளில் பயன்படுத்துகின்றனர்தவறாகவும் கையாள்கின்றனர்பாரம்பரியம் என்பதை அறிவியல்ரீதியாக எப்படிப் பார்க்க வேண்டும் உணர்த்துகிறது இந்தக் கட்டுரைருக்மிணி தேவி நினைவாகவரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அமவர்கள் ஆற்றிய உரையை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டது.)
பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விசயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். இதனை மரபு என்றும் குறிப்பிடுகிறோம். இந்தப் பாரம்பரியம்தான் நம்முடைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் உருவாக்குகிறது. ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மரபுகள் பழமையானவையா?:
தற்போது மரபு என்பதற்கு வேறொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விஷயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனால் பாரம்பரியம் என்பதைப் பற்றி நமக்கு பொதுக் கருத்து உருவாகிறது. அல்லது நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பொதுக் கருத்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக உருவாகலாம். சில சடங்குகளையும் மரபுகளையும் மிகப் பழமையானவை என்று நினைக்கிறோம். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் கற்பனையான பாரம்பரியத்தைப் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர்.
பாரம்பரியம் மற்றும் மரபுப் பழக்க வழக்கங்கள் இவற்றைப் பற்றிய விவாதங்கள்,”பண்பாடு நாகரீகம்” போன்ற கருத்துகளைப் பற்றியும் ஆராய்வதற்கு வித்திட்டுள்ளது. மேற்கூறிய கருத்துக்களை எளிதில் விளக்க இயலாது. பண்பாடு, நாகரீகம் என்பதைப் பற்றி கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது ஐரோப்பாவின் அறிவுசார்ந்த மறுமலர்ச்சி இயக்கம் வளர்ந்து வந்தது. அடிப்படைக் கோட்பாடுகள் பலவற்றை புதிய கோணத்தில் ஆராய வேண்டியிருந்தது. இந்தியாவிலும் நாம் இத்தகைய மாற்றங்களைச் சந்திப்பதால், பாரம்பரியம் என்பதைப் பற்றி நாம் புதிய கோணத்தில் ஆராய வேண்டியுள்ளது.
பாரம்பரியம் மாறக்கூடியது:
அண்மைக் காலங்களில் வரலாற்று ஆசிரியர்கள் பாரம்பரியம் என்பது உருவாக்கப்பட்டது, மாறக்கூடியது என்றுதான் பார்க்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் பண்பாடு என்பது கண்களால் பார்க்கக் கூடிய நிகழ்த்துக் கலைகள், இலக்கியம், தத்துவம், கல்வி, கேள்விகளில் புலமை பெற்று மனித குலத்தின் பெருமைகளை மேம்படுத்துதல் போன்ற விசயங்களில் ஒரு சமுதாயம் படைத்த சாதனைகளைக் குறித்ததாகக் கருதப்பட்டது. நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மேற்கூறிய விசயங்கள் மேட்டுக்குடி மக்களின் செயல்பாடுகளோடு தொடர்புடையவையாயிருந்தன. இதனை எளிய மக்களின் பண்பாட்டிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதற்கு இதை உயர் கலாச்சாரம் என்றார்கள். ஆனால் மேற்கூறிய பண்பாட்டின் கூறுகள் பரந்துபட்ட சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவை. பண்பாடு என்று கூறும்போது சமுதாயத்தின் பல்வேறு பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அம் மக்களின் எண்ணங்களுடைய வெளிப்பாடுகள் ஆகியவையும் அடங்கும். பண்பாடு என்று குறிப்பிடும்போது அதில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள், ஆடு – மாடு மேய்க்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழை மக்கள் போன்ற எளிய மக்களின் வாழ்க்கையும் அடங்கும்.
பண்பாடு என்பது மாறக் கூடியது. தாக்கங்களுக்கு உட்பட்டது. பரிமாற்றங்களை அனுமதிப்பது. வரலாற்றை ஆராயும் போது மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன என்று தெரிகிறது. மேலும் பண்பாடு என்பது உற்பத்தி சார்ந்ததென்றும் புலப்படுகிறது. வேட்டையாடி வாழும் சமுதாயத்தில் நிலவும் பண்பாடுகள், ஆடு மாடு மேய்த்து வாழும் சமுதாயத்தின் பண்பாட்டிலிருந்து வேறுபடும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் பண்பாடு முதலாளித்துவ சமுதாயத்தின் பண்பாட்டில் இருந்து மாறுபட்டதாகவே இருக்கும்..
ஆதிக்கப் பண்பாடும் – எளிய மக்கள் பண்பாடும்:
கடந்த காலங்களில் சமுதாயம் ஒரே மாதிரியான ஒற்றைத் தன்மையுடைய கலாசாரத்தைப் பின்பற்றியதில்லை. எல்லாச் சமுதாயத்திலும் இருந்ததைப் போலவே இந்தச் சமூகத்திலும் மேல் தட்டுப் பண்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் இந்த மேல்தட்டுப் பண்பாடுகளைத் தாங்கி நின்றது எளிய மக்களின் பண்பாடு. இது தான் முக்கியமானதாகும்.
இந்த நிலையில் பல கேள்விகள் எழுகின்றன. “ இந்தப் பண்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்தனவா? அல்லது சாதி, மொழி, சமையம் இவற்றின் அடிப்படையில் பிரிந்து இருந்தனவா? இப்போது இந்தக் கலாச்சாரங்களை ஒன்றிணைக்க முயலும்போது நாம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறோமா? “ என்பவைதான் இந்தக் கேள்விகள். இந்த ஒன்றுபடுத்தும் முயற்சி “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற முழக்கத்தோடு நின்றுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், “இந்த ஒற்றுமை என்றால் என்ன? வேற்றுமை என்றால் என்ன?” என்பதெல்லாம் தெளிவுபடுத்தப்படவில்லை. இவற்றோரு கூட மேலோட்டமாகப் பார்க்கும்போது மாற்றமே இல்லாமல் தோன்றும் ஒரு விசயத்தை ஆராய்ந்து பார்த்தால் அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணம், சாதி – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வு வெவ்வேறு விதமாக காணப்படுகிறது. உயர் சாதியாகக் கருதப்படும் ஒரு சாதி எல்லா இடங்களிலும் உயர் சாதியென்று கருதப்படுவதில்லை. குறிப்பாக பஞ்சாபில் ‘கத்ரி’ என்ற சாதி உயர்வாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் பிராமணர்களும், சில இடங்களில் ‘ஷத்ரியர்கள்’ என்று தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வோரும் உயர் சாதியாகக் கருதப்படுகின்றனர்.
பண்பாட்டை புரிந்துகொள்ளல்:
அனைத்து சமுதாயங்களிலும் ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற பிரிவுகள் உண்டு. இதில் அதிகாரப் பிரிவினர், அடக்கப்படுவது யார் என்பது காலத்தை ஒட்டி மாறும். அவ்வாரே, அவர்கள் ஆதரிக்கும் கலாசாராம் எது என்பதிலும் மாற்றம் ஏற்படலாம். அண்மைக் காலங்கள் வரையில் ஆளும் வர்க்கங்கள் தங்கள் பண்பாட்டுத் தடயங்களையும், ஆவணங்களையும் பாதுகாத்து வைப்பதற்கு ஏற்ற சூழல் நிலவியது. ஆனால் தங்கள் பண்பாட்டை எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாதவர்களைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தொல் பொருள் ஆய்வுகள் நமக்குச் சில தகவல்களை அளிக்கின்றன. மேல் தட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொண்டவர்களை ஒரு தனிப்பட்ட பகுதியினராகப் பார்க்காமல், அவர்கள் சமுதாயத்தின் ஏனைய பகுதிகளோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள், இதர பகுதியினரோடு எவ்வாறு பழகினார்கள் என்பதை ஆராய்வது அவர்களது பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.
சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் தற்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன. நாடுகளின் அழிவு, தட்ப வெட்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் – இவை கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தின் நலிவிற்கு இந்த மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என தற்போது கருதப்படுகிறது.
தொழில் நுட்பத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள், சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள், இவையும் கவனிக்கத் தகுந்தவை.
புதுமைக் கலப்பு:
வணிகத்தின் மூலமும், குடி பெயர்ந்து வரும் மக்களோடு ஏற்படும் தொடர்புகளாலும் பிற நாட்டை வெற்றி கொள்வதால் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் இவற்றால் சமுதாய வாழ்வில் புதுமைகள் புகலாம். பிற நாட்டை வெற்றி கொள்ளும் போது புதிய அரசியல் அமைப்பு என்பது மிகத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. வணிகக் குடிபெயர்தலால் வலுவான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவை பரந்த நிலப்பரப்பில் மிக அதிகமான மக்களிடையே பாதிப்பை எற்படுத்துகின்றன. ஆனால் நாம் படையெடுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். நாம் நாட்டின் வட மேற்குப் பகுதியில் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் கிரேக்க சிற்ப வடிவமைப்புகளின் தாக்கத்தால் உருவான காந்தார சிற்பக் கலையைக் குடிபெயர்தலினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
இதே காலகட்டத்தில் பெளத்த சிற்பக் கலை, மதுரா, மத்திய இந்தியா மற்றும் தெற்கே அமராவதி போன்ற இடங்களில் வளர்ந்திருந்தது. காந்தார சிற்பக் கலை வடிவங்களுக்கும் பெளத்த சிற்பக் கலை வடிவங்களுக்கும் இடையே பல வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தக் கலை வடிவங்களைப் பற்றிக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அறிஞர்களிடையே கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக் கலை வரலாற்று அறிஞர்கள் தங்கள் சம காலத்து சிற்பக் கலைஞர்களிடம் இதைப் பற்றி கருத்துக் கேட்கவில்லை. இந்த காந்தாரப் பகுதியில் பேசப்பட்ட மொழிகள் தனித்து விளங்கின. கிரேக்கம், சம்ஸ்கிருதம் இரண்டும் தனித்தனி மொழிகளாகவெ விளங்கின.
அதே காந்தாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் போன்றோர் குடியேறினர். இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் மேற்கு ஆசியாவிலிருந்தும் வந்தவர்கள். இந்த நிகழ்வுகளை நாம் படையெடுப்பு என்று கூறி விட்டுவிடுகிறோம். படையெடுப்பினால் வணிகத் தொடர்புகள் அதிகரிகமாகின்றன. புலம் பெயர்ந்து வசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. துருக்கியர், ஆப்கானியர் ஆகியோரின் வருகையால் மொழி மத நம்பிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டது. இங்கு இஸ்லாமிய மதம் அறிமுகமானது மட்டுமின்றி புதிய சிந்தனைகள் உருவாகின. சூபிக்கள் என்ற பிரிவினர் எளிய மக்களிடையே பழகித் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். இதன் விளைவாகப் பஞ்சாபி போன்ற மொழிகள், பல புதிய சொற்கள் அறிமுகமாயின, குருநானக் வாரிஸ் ஷா போன்ற சமயப் பெரியோர்களின் கவிதைகள் பொதுவாக மக்கள் பேசும் மொழியிலேயே இயற்றப்பட்டன. இவ்வாறு மொழி பயன்பாட்டின் பிற கூறுகளுக்கும் பரவியது.
நீண்டகாலம் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்:
பல நூல்களின் காலத்தைக் கண்டறிய மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் உதவுகின்றன. நீண்ட காலம் தொடர்ந்து எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘அர்த்த சாஸ்திரம்’. இந்த நூலின் மொழி நடையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இந்த நூலின் வெவ்வேறு பகுதிகளும் எப்போது எழுதப்பட்டன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு மொழிக்கு வேறு மொழிகளோடு தொடர்பு ஏற்படும்போது சில புதிய சொற்கள் கடன் வாங்கப்படும் அல்லது பரிமாற்றம் செய்யப்படும். இத்தகைய பரிமாற்றம் இந்த இரு மொழிகளைப் பேசும் மக்களிடையே நிலவிய உறவுகளையும் தெளிவுபடுத்தும். வேத கால சமஸ்கிருதத்தில் ‘லாங்கல’ (langala) என்ற சொல் ஏர் என்பதைக் குறிக்கிறது. அந்தச் சொல் திராவிட மொழியிலிருந்து பெறப்பட்டது என்று தெரிகிறது.
குடிபெயர்தல் மூலமாக பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் வணிகத்தின் பொருட்டும் மக்கள் புதிய இடங்களில் குடியேறுவார்கள். வணிகம் நடைபெறுவதற்காக புதிய பாதைகள் போடப்படும். புதிய குடியிருப்புகள் தோன்றும். இதன் விளைவாகப் புதிய பண்பாட்டு வடிவங்கள் தோன்றும். ஹூனா, துரானி போன்ற சாதிப் பெயர்கள் இந்தப் போக்கைக் குறிக்கின்றன.
பிரிட்டிசாரின் வருகை முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவின் செல்வத்தை உறிஞ்சுவது தான் அவர்களுடைய நோக்கம். இருப்பினும், இந்தியாவின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். இவ்வாறு அவர்களுக்குக் கிடைத்த விவரங்களும் நம்முடைய  பாரம்பரியத்தை உருவாக்குவதில் பங்காற்றின.
பாரபட்சமான நோக்கு:
செல்வ வளம் மிக்க மேல் தட்டு மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் சுவடிகளும் சான்றுகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். எளிய மக்களுடைய பண்பாட்டைப் பற்றிய  இத்தகைய அடையாளங்கள் கிடையாது. அவர்கள் மேல் தட்டு சமுதாயத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கான அனைத்து உழைப்பையும் அளித்தனர். ஆனால் மேல் தட்டுப் பண்பாட்டில் அவர்களுக்குப் பங்கில்லை. அடித்தட்டு மக்களுடைய பண்பாடு வேறு விதமானது. அவர்களுடைய பண்பாட்டைப் புரிந்து கொள்ள மேல்தட்டு மக்கள் இவர்களை எப்படிப் பார்த்தார்கள் என்று கவனித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
மேல்தட்டு மக்களின் பார்வையிலிருந்து தான் நாம் அடித்தட்டு மக்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நோக்கு பாரபட்சமற்றதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த மக்களின் திறமையும் அழகுணர்வும் மேல் தட்டினரின் பண்பாட்டை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.
பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. அதுவொரு பொருளாக இருந்தாலும் கருத்தாக இருந்தாலும், நிகழ்காலத்தில் இருந்ததைப் போலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒரு பூர்வீகத்தை ஏற்படுத்துவதன் மூலம், கடந்த காலத்தை நிகழ் காலத்திற்குக் கொண்டு வருகிறோம். இவ்வாறு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துகிறோம். “மாறாமல் தொடருகிறது என்று நாம் நினைக்கும் பாண்பாட்டுக் கூறுகளில் நாம் தக்கவைத்துக் கொண்டவை எவை? வேண்டாமென விலக்கியவை எவை? என்று ஆராய வேண்டும்.
நியாயம் கற்பித்தல்:
நம் முன்னோர் காலந் தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விசயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு கூறுவது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் அடையாளமாக இருக்கலாம். இவ்வாறு கூறுவது அவர்கள் சமுதாய வாழ்வில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ளப் பயன்படும் அல்லது ஒரு குழுவின் சமூக நிலையை மற்ற சிலர் ஏற்றுக்கொள்ளச் செய்யப் பயன்படும். வேறு சிலர் அது பற்றி கேள்வி எழுப்பலாம்.
இத்தகைய கேள்விகளைத் தவிர்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம். பண்பாட்டின் ஒரு பகுதிக்கு பூர்வீகம் இதுதான் என்று கற்பிக்க முயற்சிக்கும்போது அந்தப் பகுதி வேறொரு பூர்வீகத்திலிருந்து பிறந்திருக்கலாம் என்பதை மறுக்கிறோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். துவக்கத்தில் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள், பின்னர் இதனைப் பலர் ஏற்க மறுத்திருப்பார்கள். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், ஒன்று நாம் பாரம்பரியத்தைத் திரிக்கிறோம் அல்லது நாமாக எதையாவது கண்டு பிடிக்கிறோம் என்று தான் கூற வேண்டும்.
புறச் சூழல் முக்கியம்:
கலைகளைப் பற்றி, அதுவும் பண்பாட்டின் ஒரு அம்சமாக கருதப்படுகின்ற சங்கீதம் நாட்டியம் போன்ற நிகழ்த்துக்கலைகள் பற்றிப் பேசுபோது அவற்றைப் பற்றிக் குறிப்பிடும் நூல்களைப் பற்றியும் அவற்றில் காணப்படும் குறிப்புகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானதா?. இந்தக் கலை வளர்ந்த புறச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கலைகளைப் பொருத்தவரையில் பெண்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது அவர்கள் ஒரு தொழிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தத் தொழில் சமுதாயக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட தங்களுக்கே உரித்தான ஒரு சமூகத்தின் கருவை உருவாக்கிக் கொண்டார்கள். பெளத்த, சமணப் பெண் துறவிகளின் குழுக்கள் மேற்கூறிய தேவதாசிகளின் குழுக்களில் இருந்து மாறுபட்டவை. இவர்களும் தங்களுக்கென்ற ஒரு வாழ்வை நடத்தினர். இத்தகைய பெண்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த சமூகத்தோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பவை ஆராயப்பட வேண்டியவை.
மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் பண்பாடு, மரபு என்பவற்றைப் பற்றி விரிவாக ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பண்பாடு எனபது நிலைத்து நிற்பதல்ல, மாறிக் கொண்டேயிருப்பது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

full-width