கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்கள் - 1992 இல் இடம் பெற்ற ஆற்றுகை

- பேராசிரியர் சி.மௌனகுரு -
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை  1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. மண்சார்ந்த கலைகளை (Indeginous Arts ) மீளுருவாக்குவதையும்  அவற்றை  மாணவர்  மத்தியிலும்   மக்கள் மத்தியிலும் கொண்டு  செல்வதையும் தன் தூர நோக்கங்களுள் ஒன்றாக  அது கொண்டிருந்தது  1992 இல் அதாவது இற்றைக்கு 28 வருடங்களுக்கு முன்  அது   இந்த நோக்கை  செயல்படுத்த  ஆரம்பித்தது அதன் தொடர்ச்சியாகப் பல விடயங்களை அது அன்று தொடர்ந்து செய்தது.  இன்றும்  அது தொடர்கிறது. அப்போது கிழக்குபல்கலைகழக கலைப் பீடமும் நுண்கலைத் துறையும் மட்டக்களப்பு நகரில் இன்று மருத்துவபீடம் இயங்கும் இடத்தில் மிகச்சிறிய கட்டிடத்தில் இயங்கியது. அந்தச் சிறிய கட்டிடம் 50 நியூ றோட் கல்முனை வீதியில் அமைந்திருந்தது. அன்று அது பலராலும் உதயா மோட்டோர்ஸ் என அழைக்கப்பட்டது, ஆம் அது உதயா மோட்டொர் ஸிலிருந்து வாங்கப்பட்ட கட்டிடம் அதனாலேயே அப்பெயர் பெற்றது. 1992 இல் நாம் இதனை அங்கு முன்னெடுக்கும் போது நுண்கலைத் துறையில் இரண்டே இரண்டு உதவி விரிவுரையாளர்கள் இருந்தனர். ஒருவர் பாலசுகுமார் அடுத்தவர் அருந்ததி கண்ணகி குளுர்த்திக்கான யோசனையை வழங்கியதுடன் எனக்கு உதவியாளராயும் பணி புரிந்தார் பாலசுகுமார். அவரும் இவ்வாற்றுகையில் மாணவருடன் இணைந்து பாடினார். முழுக்க முழுக்க மாணவர் பங்கு கொண்ட இந்நிகழ்வில் வெளியிலிருந்து கோவிலில் குளுர்த்திப்பாடும் கலைஞர்களின்  உதவிகளையும் பெற்றுக்கொண்டோம். அதில் முக்கியமானவர்  பெரியவர்   தில்லையம்பலம் கன்னன்குடாவின்  பெரும் கூத்துகலைஞர்  இவர், சாரங்கரூபன், சாம்பேந்திரன்   அர்ஜுன் பாத்திரங்களில் தோன்றி  கன்னகுடா மக்கள் உள்ளத்தைத் தன் குரலால் கொள்ளை கொண்ட  கலைஞர் ஊரில் அவர்    கண்ணகை  அம்மன் கோவிலில்  குளுர்த்திப்பாடல்   பாடிய அனுபவம்  உடையவர். அவரும்  எமக்கும்  மாணவருக்கும்  இவ்விசையைப் பயிற்றுவித்தார். பாலசுகுமாரும்  பயிற்றுவிப்பதற்கு   மிகவும் உதவினார். ஆற்றுகை   என்ற படியினால்  நாம் சில மாற்றங்களை செய்தோம்.  உடுக்குடன்  மத்தளம்  வயலின் ஆகிய இசைக்கருவிகளையும் சேர்த்துக்கொண்டோம். மேடைக்கேற்ப உடையலங்காரம்  இருக்கும் முறைகள் என்பன மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்கு கொண்டோர்  அன்று கலைப்பீடத்தில் பயின்ற  மட்ட்க்களப்பு, திருகோணமலை,  முல்லைத்தீவு  பிரதேசங்களைச்  சேர்ந்த மாணவமாணவியர். இவர்கள் யாவருக்கும்  அன்று 20-  24  வயதிருக்கும். இன்று    அனைவரும் ஐம்பது வயதைத் தாண்டியிருப்பர் பேரன் பேர்த்திகூடக்  கண்டிருக்கவும் கூடும் பிரதான  பாடகர்களுள் ஒருவரான சியாமளாங்கி  சுனாமிப்பேரலையில் சிக்கி  குடும்பத்தோடு மரணமடைந்தார் அவரை  இங்கு பார்க்கையில்அவளது துடிப்பும் அர்ப்பணமும் ஞாபகம் வருகிறது. இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருப்பாள். தில்லையம்பலமும் நம்மோடு இல்லை.  காலமாகிவிட்டர்  ஆனால்  அவரது வெண்கலக்குரலும்  சியாமளாங்கியின்  மெல்லிய குரலும் இன்றும் காதில் ஒலிக்கின்றன. சுகுமாரின்    இனிய  குரலையும்   அவரது ஆற்றுகையையும்  இதில் நீங்கள் ரசிக்கலாம். பங்கு கொண்டோர் இதனை கேள்விப்பட்ட இலங்கை  ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சிப்  பொறுப்பாளார்  நண்பர்  விஸ்வநாதன்  இதனை அங்கு வரவழைத்து  ஒளிப்பதிவு செய்து  இலங்கை வாழ் மக்கள்  அனைவரும் காணச் செய்தார். அதற்கு என்னை ஒரு அறிமுக உரையும் வழங்கும்படி கூறினார். அவருக்கு  எமது நன்றிகள்


பிரதான பாடகர்கள்
------------------------------------
பாலசுகுமார்- விரிவுரையாளர்
தில்லையம்பலம்
சியாமளா
சதாகரன்
ரஞ்சிதமலர்
வயலின்
---------------------  
சரஸ்வதிசுப்பிரமணியம்-  விரிவுரையாளர்
பிற்பாடல்  இசைத்த  மாணவியர்
-----------------  
வானதி  ( சுருதிபெட்டி)
சாந்தமலர்
சுகன்யா
மல்லிகா
கலாவதி
லதாகுமாரி
சாருமதி
மாணவர்
------------------------------
சீவரத்தினம்
உதயகுமார்
உதயதாஸ்
சந்திரலிங்கம்
அன்பழகன்
தபேலா
-----------------------  
குகன்
உடுக்கு
-------------- 
ரமேஸ்கான்
மத்தளம்
----------------------------
தர்மராஜா
மேடை உதவி
----------------------
தயாகாந்தன்
வனிதா
புஸ்பராணி