கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் பிரதிபலிப்புகள்

கலாநிதி அனுசூயா சேனாதிராஜா,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
வரலாற்றுப் பிரிவு,
சமூகவியல் துறை,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
ஒலுவில்.

அறிமுகம்:

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு மிகவும் பிரபல்யமானது. அது ஒரு கிராமிய, புராதன வழிபாடாகும். இக்கண்ணகி அம்மன் வழிபாடானது திராவிட நாகரீகத்தில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே, கிழக்கிலங்கையில் பிரபல்யம் பெற்ற கண்ணகி அம்மன் வழிபாட்டில் காண்கின்றோம். இங்கு காணப்படும் இக்கிராமிய, புராதன வழிபாட்டின் மூலம் கண்ணகி வழிபாடு பற்றி மக்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கைகளை இங்கு காண்கின்றோம். இதன்மூலமாகக் கிழக்கிலங்கையில் சமய வழிபாடு பண்பாட்டு அம்சங்களில் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி அம்மன் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியுள்ளார். இதனடிப்படையில் கண்ணகி வழிபாடு, எவ்வாறு மக்களிடையே போற்றிப் பேணப்படுகின்றதென்பதை ஆராய முடிகின்றது.

பத்தினி வழிபாடு - தோற்றம்:

பத்தினித் தெய்வமாகிய கண்ணகி வழிபாடு, தமிழர் மத்தியில் காணப்பட்ட சக்தி வழிபாட்டின் ஓர் பிரதிபலிப்பேயாகும். புராதன எகிப்திய, மொசப்பத்தேமிய நதிக்கரை நாகரீகங்களை நோக்குவோமாயின் அங்கு வாழ்ந்த மக்கள் இயற்கையின் சீற்றத்திலிருந்தும் (மற்றும் கெட்ட ஆவிகளிலிருந்தும்) தம்மைப் பாதுகாப்பதற்காகவே இறை வழிபாட்டை ஆரம்பித்தனர். இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்தி எல்லாவற்றிற்கும் மேலாகக் காணப்படுகின்றதை உணர்ந்தனர். இதன் அடிப்படையில் தான் இச்சக்தி வழிபாடு இற்றைக்குக் கிறிஸ்துவிற்கு முன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளிற்கு முற்பட்ட திராவிட நாகரீகமான சிந்து வெளி நாகரீக காலத்திலிருந்து தமிழர்களின் முக்கிய வழிபாடாக காலா காலமாக இருந்து வந்துள்ளது. இது தமிழர் சமூகத்தின் முக்கிய நம்பிக்கைக்குரிய சமூக சாதனமாக விளங்குகின்றது. எமது சக்தி வழிபாட்டில் அம்மன், காளி, பராசக்தி, சரஸ்வதி, லச்சுமி, துர்க்கை, என்ற பெண் தெய்வங்களின் வரிசையில் கற்புக்கரசியாக எல்லோராலும் போற்றப்பட்ட கண்ணகியை நாம் வழிபட்டு வருகின்றோம். இத்தெய்வங்களுக்குக் கிழக்கிலங்கையில் கோயில்கள் கட்டி திருவிழாக்கள், குளிர்த்தி சடங்கு போன்ற விசேட நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றோம். இவ்வாறு பயபக்தியுடன் நடாத்தப்பட்டு வரும் நிகழ்வுகளில் மக்கள் பல்வேறு நம்பிக்கைகளையும் வைத்துள்ளனர்.
பத்தினித் தெய்வமான கண்ணகை சோழ நாடான தஞ்சை மாவட்டத்தின் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்து கோவலனுடன் பாண்டிநாடான மதுரைக்குச் சென்று, கோவலன் கொலையுண்டதால் மணியரிச்சிலம்பைக் கையிலேந்தி தென்னவன் கொற்றத்தையும் மதுரையையும் அழித்தாள். தேராமன்னன் எனப் பாண்டியனைத் தட்டிப் பேசி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திப் பத்தினி என்பதை நிரூபித்து மதுரையை எரித்து வைகையாற்றின் தென்கரையை வழியாகக் கொண்டு மேற்கு நோக்கிச் சென்று மங்கல மடந்தை என அழைக்கப்பட கண்ணகி சேரநாட்டிலே தெய்மாகின்றாள்.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு:

தெய்வந் தொழாள் கொழுநற் றெழுவாளை
தெய்வந் தோழுந் தகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து

சேரன் செங்குட்டுவன் கி.பி. 123 – 135 ஆண்டளவில் மண்ணகத்திலிருந்து விண்ணக மாந்தர்க்கு விருந்தாகச் சோதியுட் கலந்த பத்தினி அம்மனிற்கு திருச்செங்கோட்டையில் கோட்டம் அமைத்துப் பிரதிஸ்டை செய்யும்போது இலங்கை வேந்தன் கஜபாகுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்திய பூசை செய்யும்படி கட்டளையிட்டான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி நின்றான். அப்போது அங்கு வந்த கஜவாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி இச்செங்குட்டுவனைப் போல் எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையில் நீ எழுந்தருளி அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தேன் என்று ஓர் அசரீரி ஒலி உண்டாயிற்று. கஜவாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தண மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தண மரப்பலகையால் செய்து பேளையில் வைத்த கஜவாகு மன்னனிற்குச் செங்குட்டுவன் கொடுத்தான். அதைப் பாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானைமேல் சந்தண மரப்பலகையால் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான். அங்கிருந்து கப்பலில் ஏறி, காரைநகரிற்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள திருவடி நிலையில் இறங்கினார்கள். யானைப் பவனிக்கென்று அலங்கரிக்கப்பட்ட யானைகள் அங்கிருந்தன. திருவடி நிலையிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாய் அங்கரைமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடத்தப்பட்டு வேலம்பறை என்றுமிடத்திற்கு வைகாசிப் பூரணையன்று வந்து சேர்ந்தது. அங்கிருந்து கரம்பகம் கோவிற்குளம் நாகர்கோவில் வன்னிப்புட்டுக்குளம் விழாங்குளம் முள்ளியளை பற்றாப்பளை சாம்பல்தீவு திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு நீலாப்பளை வரையும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தாவளமாட்டின் மூலமாக (மாட்டுவண்டி) கோராவெளி கொக்கட்டிமூலை தாண்டவன்வெளி வந்தாறுமூலை ஈச்சந்தீவு கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகிழடித்தீவு மண்முனை புகுக்குடியிருப்பு செட்டிபாளையும் எருவில் மகிழூர் கல்லாறு கல்முனை ஊர்முனை காரைதீவு பட்டிமேடு தம்பிலுவில் பாணமை கதிர்காமம் கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது. கண்டியில் ஓர் கோவில் கட்டி சந்தனப் பலகையால் செய்த பெட்டியும் அம்மனும் சேமிக்கப்பட்டது. கண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. பத்தினித்தேவி தாயொருத்தியின்றி மாங்கனியின் நின்றும் உற்பத்தியானாள் என்றும் கொள்கை சிங்கள மக்களுள் வழங்குவதுபோல மட்டக்களப்பு தமிழரும் அதே கொள்கையுடையவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட வேளையில் அம்மனின் விருப்பு இருக்கை பட்டிமேடு அமைந்தது என காணக்கிடக்கின்றது. பட்டிமேடு அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கின்ற அம்மன் ஐம்பொன்னாலான கன்னக் கொண்டையுடன் அமைந்திருப்பது பெரும்பேறாகும். இலங்கை நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அம்மன் ஆலயங்களுக்குத் தனித்தனியாகக் காவியங்கள் பாடப்பட்டுள்ளதுடன் பத்ததி முறையிலான பூசை வழிபாடுகள் நடாத்தப்படுவது மரபு ஆக உள்ளது. பட்டிமேடு அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மன் பட்டிமேட்டுக் காவியம் பொற்புறாக்காவியம், மழைக்காவியம் என முக்காவியப் புகழ் பூத்த புராந்ததி என அழைக்கப்படுகின்றது. பெருமைக்குரியதாகும். இவ்வாலயம் அமைந்துள்ள இடம் அப்போது காடும் காடு சார்ந்த இடமும் மலையும் மலை சார்ந்த நிலமும் வயலும் வயல் சார்ந்த இடமுமாகக் காட்சியளிப்பது மட்டுமல்லாமல் நீர் நிலைகளைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் இவ்வாலயத்துக்குப் பக்கத்தில் மெருகூட்டுகின்றது ஓர் சிறப்பம்சமாகும். இவ்வாலயத்தில் நடைபெறும் சடங்கு பத்தாதி முறையில் நடாத்தப்படுவது மரபு முறையாகும். இங்கு பூசை செய்யும் குருவானவரை கப்புகனார் என அழைக்கப்படுவர். சீரணியும் மழுவரசராசன் வகுத்துவார் செல்வனென வாழும் மங்கலப் போடிதானும் ஆரமுலையே நமக்கான பூசை புரிவன் அங்கவனை இங்களைப் பேனென உரைக்க என்ற பாடல் அடிகளின் மூலம் இவ்வாலய முதலாவது கப்புகனாக மங்கலப்போடி என்பவர் கடமை புரிந்துள்ளார். இவ்வாலயத்தில் எழுந்தருயிருக்கும் அம்மனுடைய பேரருளைக் கூறுமிடத்து அப்போது இலங்கையை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரச அதிகாரி இவ்வாலயத்துக்கு வருகைதந்து காலமில்லா அம்மன் கதவைத் திறக்குமாறு வற்புறுத்தி கப்புகனாரால் கதவு திறக்கப்பட்டதும் அம்மன் பொற்புறாவாக வடிவெடுத்து வெள்ளையரின் (அதிகாரியின்) கண்களைக் கொத்தி குருடாக்கியதாகவும் அதிகாரி தவறையுணர்ந்து வேண்டிக் கொண்டதற் கிணங்க கப்புகனார் அம்மனிடம் மன்றாட்டம் கேட்டு மீறவும் கண் சரி வந்ததாகவும் அதன் பயனாகப் பொற்புறாக் காவியம் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாம் ஆலயத்தைப் பராமரிப்பதற்குரிய வயல் விளைநிலங்கள் வெள்ளையரினால் அம்மனுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது என்று கூறப்படுகின்றது.

வாழ்வுபெறு கலியுத மூவாயிர முந்நூறில்
வழமைபெற வன்னியர்கள் ஆண்டுவருநாளில்
தாள்வற விளங்குசிற்றரசர்கள் இருவருந்
தன்னிலங்காபுரி தனைப்புரந்திடுநாள்
காழமுகில் தவளகர மாடமணி வாசலுறு
கமலமலர் வாவியிற் கனகமதருந்தி
ஏழுலகமுந்துதி செய் நாமங்கலையம்மன்
எழில்கொள் பொற்புறாவாயொழுந்து வந்தனனே 

என்னும் பாடல் மூலம் பட்டிமேட்டு கண்ணகி அம்மன் பொற்புறாவாக தோன்றிகாட்சி கொடுத்ததாக இருக்கின்றது. இவ்வாலயத்தில் வருடம் ஒருமுறை வரும் வைகாசிப் பூரணயில் சடங்குநடந்து வந்துள்ளது.

அத்தோடு இங்கு நடைபெறும் பூசைவேளைகளில் பட்டிமேட்டுக் காவியம், பொற்புறாக் காவியம், மழைக்காவியம், அம்மன் வழக்குரைக் காவியம், ஊர்சுற்றுக் காவியம் என்று அழைக்கப்படுகின்ற உடுக்குச் சிந்து, அம்மன் பிரார்த்தனை, மன்றாட்டு கும்மி, தாலாட்டு என்பன கப்புகனரால் இசையோடு பாடப்படும். முக்கியமாக அம்மன் சடங்கு வேளைகளிலே அம்மனுக்கு விருப்பமான இசையாகிய பறைமேளம், உடுக்குச் சத்தம், மணி ஓசை, சிலம்பு ஓசை, அம்மானை ஓசை என்பன இசைக்கப்படும். இவ்விழாக்காலங்களில் பக்தர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகைதந்து அம்மன் அருள்பெற்றுச் செல்வர்.

கோளாவிற் கிராமத்தில் கண்ணகி அம்மன் வழிபாடும் பிரதிபலிப்புகளும்:

கண்ணகி அம்மன் ஆலயத்தின் சடங்கு காலங்களில் பலவிதமான வேண்டுதல்களை மக்களை வைத்து நேர்த்திக் கடன்களை மக்கள் நிறைவேற்றுவர். அவற்றில் கொம்பு விளையாட்டு கற்பூரச்சட்டி ஏந்தல், தீச்சட்டி ஏந்தல், மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், பிள்ளை விற்றல், அடையாளம் கொடுத்தல் எனப் பலவிதமாய் அமையும்.

பிரதிபலிப்புகளை மேலும் நோக்குமிடத்து கிராமிய வழிபாடான இச்சக்தி வழிபாட்டில் ஆழமான நம்பிக்கை வைத்து பத்தினி வழிபாடு செய்துவரும் திரு. சு. பூபாலபிள்ளை எனப்படும் குணம் கப்புகனார், கோளாவில் கண்ணகை அம்மன் கோவிலிற்கும் பட்டிமேட்டு கண்ணகி அம்மன் கோவிலிற்கும் 35, 40 வருடங்களாகப் பூசை செய்து வருபவர். அவரிடமிருந்து கண்ணகி அம்மனின் பல்வேறு அற்புதங்களை அறியக் கூடியதாக இருந்தது. ஆரம்பத்தில் மக்கள் காட்டுப்பேய் என்று அஞ்சினராம். 

இவர் பூசை செய்ய ஆரம்பித்த காலங்களில் முதல் இரு நாட்களும் மன அமைதி இருக்கவில்லை. பின்பு மடை வைத்துப் பூசை செய்யும்போது சந்தோசமும் திருப்தியும் ஏற்பட்டது. அடுத்த நாள் மூலஸ்தானத்தில் ஒரு தோடம்பழம் இருக்கக் கண்டு அதிசயித்தார். 

ஒரு தடவை குருக்கள் ஒருவர் அம்மனிற்குரிய சட்டையைக் கொடுத்து அணிவித்தார். ஆனால், அடுத்த நாள் அச்சட்டை கீழே விழுந்ததுடன், அம்மனில் புதிதாக அழகாகப் உடை உடுத்தப்பட்டு இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். 

இவருக்கு ஆண் மகன் வேண்டி குளிர்த்தி பாடி இறுதிப் பூப் போட்டுவிட்டு வந்தார். உனது விருப்பம் நிறைவேறும் என்று பத்தினி அம்மன் அவர் கனவில் தோன்றி வாக்களித்தார். அதன்படியே அவருக்கும் ஆண் மகவு கிடைத்தது.

1990 இனக் கலவரத்தில் இங்குள்ள மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றபோது இவர் மட்டும் ஊரில் பாதுகாப்பாக இருந்தார். ஒரு தடவை மழை இல்லாமல் நெற்பயிர் குடலை வரும் தறுவாயில் வாடிச் செத்துக் கொண்டிருந்தன. அத்தருணத்தில் மக்கள் மழை வேண்டி வருந்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது பட்டிமேட்டம் மன்கோயிலின் மதிய பூசையின்போது மழைக்காவியம் குணம் கப்புகனாரினால் பாடப்பட்டது. உடனே மழை பெய்தது. ஆனால், கப்புகனாரிற்கு வெளியில் மழை பெய்தது தெரியாது. வெளியில் வந்து மழை பெய்ததா என்று கேட்டார். அவரின் உறவு முறையான அடியார் அவரின் காலில் விழுந்து அழுது வணங்கினார்.

இக்கிராமியக் கலை மற்றக் கலைகளிலிருந்தும் வேறுபட்டது. கோளாவிலில் ஒரு சமயம் இலுப்பை மரத்தின் கீழ் வெள்ளைச் சேலை உடுத்திய வயதான பெண் இருந்தார். அங்கு சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்விடத்தில் பிள்ளைகளின் சத்தம் கேட்டபடியால் அப்பெண் விலகிச் சென்று அமைதியான காட்டுப் பகுதியான பட்டிமேடு என்ற இடத்தில் அமர்ந்தார். அங்கு கோயில் எழுப்பப்பட்டது என்பது பூர்வீக வரலாறு.

இவரின் கடைசித் தங்கை நான்கு வயதாக இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு இறந்ததாக எண்ணி கால்மாடு, தலைமாடுகளில் குத்து விளக்கேற்றி சாவீடு நடந்தது. ஆனால், அவரின் பெரியப்பா முறையானவர் வாழைக்குலை வாங்கி வீட்டு அம்மனுக்கு நேர்ந்து வைத்ததன் பின்பு அச்சிறுமியின் கைவிரல்கள் அசையத் தொடங்கியது. பின்பு அச்சிறுமி எழுந்து சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது. இதுவே கண்ணகி அம்பாளின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

குணம் ஐயாவிற்குக் கடுமையான வருத்தம் மட்டக்களப்பு பு.ஏ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்கச் சென்ற நண்பர் ஒருவர், நீர் கண்ணகி அம்பாளின் கோயிலின் கதவு திறக்கவும் நீர் சுகமாகி வந்துவிடுவீர் எனக் கூறினார். அவரும் அப்படியே சுகமாகி வீடு வந்து சேர்ந்தார். இந்நிகழ்ச்சியும் முக்கிய நம்பிக்கையாகக் கருதப்படுகின்றது. காரைதீவுக் கண்ணகி அம்மன் கோவில், பட்டிமேடு அம்மன் கோயிலடியிற்கு வெள்ளிக் கிழமைகளில் மாலை 5 – 6 மணிக்கு கோயிலடிக்குப் போக இயலாது. 

இன்னோர் சம்பவம், அம்பாளிற்கு மடை வைத்துவிட்டு வந்த பின்பு அதை ஒருவர் எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அதன் பின்பு கோயிற் பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் இவர் நிலத்தில் வீழ்ந்து விட்டார். காரணம் அம்பாளின் மடையில் ஆசைப்பட்டதுதான்.

இங்கு மரபுவழி நம்பிக்கைகள் அதிகம். ஒருவருக்கு நோய் கண்டால் அவ்வீட்டு மண்ணெடுத்து கண்ணகி அம்மனில் நேர்ந்து எறிவார்கள். அந்நோய் குணமடைந்து விடும்.

பெண்களுக்குப் பெயர் வைக்கும்போதே கண்ணகி அம்மன் என்றே வைக்கின்றார்கள்.

பெண் பிள்ளைகள் பிறந்தவுடனே கண்ணகி அம்மன் பெயரில் ஆரார்த்தி எடுப்பார்கள்.

வெப்பத்தைப் போக்குவதற்கு மஞ்சள் பூசிக்கொள்வார்கள்.

திருப்பரந்துறை கண்ணகி அம்மன் கோயிலில் நான்கு ஊர் மக்களும் கூடி விழா நடாத்துவார்கள். பெரிய மடை வைத்து வேப்பிலை கட்டி விடுவார்கள். இங்கு நடைபெறும் அம்மன் ஊர்வலம் சாதி முறை ஒழிப்பதற்கான ஒரு வழிபாட்டு முறையாகக் காணப்படும். இங்கு நடைபெறும் குளிர்த்தி விழா எல்லா மக்களும் ஒன்றிணைந்து விமர்சையாகக் கொண்டாடப்படும்.

கண்ணகி அம்பாள் நல்ல பாம்பு அவதாரமாக வருவதாக ஐதீகம். சடங்கு முறைகள் அம்மனிற்கு ஒழுங்காகவும் பக்தியோடும் செய்யப்படுகின்றது. இவ்வழிபாட்டில் மிகவும் முக்கியமானது நம்பிக்கைதான்.

தம்பிலுவிலில் கண்ணகி அம்மன் வழிபாடு:

கிழக்கிலங்கையின் தென்பகுதியில் பழமை வாய்ந்த கிராமமாகத் தம்பிலுவில் விளங்குகின்றது. இம்மக்கள் நெடுங்காலமாக தமிழ்ச் சைவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்கள் வீரப் பெண்ணை, கற்புக்கரசியான கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக 'தாயார்' என்று உள்ளம் உருக வழிபட்டு வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் கண்ணகி வழிபாடு பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.

வருடாந்த உற்சவம் வைகாசிப் பௌர்ணமியை முன்னிட்டு ஏழு நாட்கள் தொடரும். இங்கு 'கண்ணகி வழக்குனர்', 'கல்யாணக்கால் நடுதல்' போன்ற சிறப்புச் சடங்குகள் நடைபெறும்.
கொம்பு விளையாட்டு:

கண்ணகி வழிபாட்டில் தம்பிலுவில் மக்களிடையே கொம்பு விளையாட்டு நெடுங் காலந்தொட்டுக் காணப்படும் ஒன்றாகும். கோடை காலத்தில் வரட்சியின் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களினால் துன்பப்படும் வேளையில் கண்ணகி அம்மனை வேண்டி கொம்பு நேர்ந்துவைப்பர். பின்பு மழை பெய்து நோய்கள் தீர்ந்தபின் கொம்பு விளையாட்டு நடைபெறும்.

கண்ணகி வழிபாட்டின் ஒரு அங்கமாகச் சிறப்புடன் விளங்கி வந்த கொம்பு விளையாடலானது இவ்வூரில் நெடுங்காலம் தொட்டு இருந்து வருகின்றதென்பதைச் செவிவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கண்டி மன்னர் காலத்தில் இவ்வூரில் கொம்பு விளையாட்டு உன்னத நிலையில் இருந்துள்ளது. கொம்பு விளையாடலின் போது படிக்கப்படும் 'கண்ணகை அம்மன் பள்ளு' இதனை உறுதி செய்கின்றது. இதனை தம்பிலுவில் புலவர் ஒருவர் இயற்றியுள்ளார். கண்டி மன்னனான ஸ்ரீ வீரநரேந்திர சிங்கன் (1706 – 1739) காலத்தில் தோன்றிய இக்கிராமிய இலக்கியம் இருமன்னனையும் புகழ்ந்துரைக்கின்றது.

இதனை, 
'பார்வாழி தென்திருக்கோயில் குமரன் வாழி
கண்டிபார்த்தீபன் நரேந்திர சிங்க மூர்த்தியும் வாழி
ஊர்வாழி தம்பிலுவில் ஊர்வாழ்க வரந்தரும்
பத்தினி கண்ணகை நீடூழி வாழ்கவே!
என்ற பாடல் வரிகள் (பாடல்: 24, வரி: 1 – 4) தெளிவுறுத்துகின்றன. 

அக்காலம் தொடக்கம் இக்கிராமிய இலக்கியம் கொம்பு விளையாட்டு நடக்கும் வேளையில் படிக்கப்பட்டு வருவதாகச் செவிவழிச் செய்திகள் உண்டு. இதனை இவ்வூரில் வாழ்ந்துவரும் முதியவர்கள் சிலரும் குறிப்பிடுகின்றனர். (தகவல்: திரு. அ. கணபதிப்பிள்ளை (வயது 82) இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) இப்பள்ளுப் பாடல்கள் குறிப்பாக ஆலயத்திலிருந்து ஏடகம் புறப்படும் சமயத்திலும் ஏடகங்கள் இரண்டும் கொம்புச் சந்தியில் சந்திக்கும் வேளைகளிலும் ஊர்வலம் தொடங்கிய ஏடகம் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து திரும்பும் வேளைகளிலும் பாடப்பட்டு வந்தன. அத்துடன் ஏடகம் ஆலயத்தை வந்தடைந்த வேளையிலும் இப்பாடல்களைப் பாடுவதுண்டு.

இப்பள்ளுப் பாடல்களைப் பாடும்போது ஏடகத்தின் முன்னால் தென்னை ஓலையால் கட்டப்பட்டு நெருப்புப் பந்தம் ஒன்றைப் போட்டு அதனைப் பலர் ஒன்று சேர்ந்து சுற்றி வந்து பாடி ஆடுவது மரபாகும். இது இன்றும் நிலவி வருகின்றது. வைகாசிப் பொங்கல் உற்சவ காலங்களில் அழகிய சித்திரத் தேர்மீது (சிறிய ஏடகம்) கண்ணகை அம்மன் ஊர்வலம் வரும் வேளையில் இப்பள்ளுப் பாடல்களும் பாடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

அம்மன் அருளால் மழை பொழியச் செய்த கண்ணப்பர்:

இவைபோன்று நமது முன்னோர்கள் தமிழ்ப் பாடல்கள் மூலமாகச் செய்த அற்புதங்கள் ஏராளம் எனலாம். இவ்வாறு அற்புதங்கள் புரிந்தவர்களில் இவ்வூரைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவரும் ஒருவராவர். இவ்வூரிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் கற்புகனாராகக் கடமை புரிந்து வந்த இவர் கண்ணகை அம்மன் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கையையும் கொண்டிருந்தார். அக்காலத்தில் ஒரு சமயம் இவ்வூரில் கொடிய வரட்சி நிலவியிருந்த வேளையில் அம்மன் அருளினால் பதினாலு தமிழ்ப் பாடல்களைப் பாடி இவர் மழை பொழியச் செய்துள்ளார். இச்சம்பவம் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இவ்வூரில் நடந்ததென்பதை அறியமுடிகின்றது.

கண்டி மன்னர் காலத்தில் நடந்த இச்சம்பவம் பற்றி நோக்குமிடத்து பல வரலாற்று உண்மைகளையும் அறிய முடிகின்றது. கண்டியை இரண்டாம் இராசசிங்கன் (கி.பி. 1635 – 1687) என்ற மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில் மட்டக்களப்புத் தமிழகம் கண்டி மன்னரின் மேலாதிக்கத்தை ஏற்றியிருந்தது. ஆயினும் மட்டக்களப்பை ஆட்சிபுரிந்து வந்த தமிழ்ச் சிற்றரசர்கள் சுதந்திரமுள்ள சிற்றரசர்களாகவே இப்பிரதேசத்தில் செயற்பட்டு வந்தனர். நீர் வளமும் நில வளமும் பொருந்திய மட்டக்களப்புத் தமிழகத்தில் கண்ணகி வழிபாடு சிறந்திருந்தது. அக்காலத்தில் வேண்டிய வரமளிக்கும் பெண் தெய்வமாகக் கண்ணகை அம்மன் விளங்கி வந்தார்.

அக்காலத்தில் ஒரு சமயம் மட்டக்களப்புத் தமிழகத்தில் மாரி மழை குறைந்து கடும் வரட்சி நிலவியது. இதன் பயனாக நெற்செய்கையானது முற்றாகப் பாதிக்கப்படுமளவுக்கு நெற்பயிர்கள் கருகத் தொடங்கின. இவ்வாறு நெற்செய்கை பாதிக்கப்படுமேயானால் கொடிய பஞ்சம் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்ட மட்டக்களப்புச் சிற்றரசர்கள் கண்டி மன்னனான இராசசிங்கனுக்கு இந்நிலைபற்றி அறிவித்தனர். இதனைக் கேள்வியுற்ற கண்டி மன்னன் கண்ணகை அம்மன் ஆலயங்களில் விசேட பூசைகள் செய்து மழை வேண்டி அம்மனை வழிபாடு செய்யுமாறு ஆலோசனை கூறினான். கண்டி மன்னனது ஆலோசனைப்படி மட்டக்களப்பிலுள்ள எல்லாக் கண்ணகை அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வந்தன.

இதேபோன்று இவ்வூரிலுள்ள கண்ணகையம்மன் ஆலயத்திலும் விசேட பூசைகள் இடம் பெற்றுவந்தன. ஆயினும் மழை பொழியவில்லை. இதேவேளை இவ்வூர் மக்களின் பூர்வீக சொத்தாகியிருந்து வந்த 'ஊரக்கை வெளி' என்னும் நெல்வயலில் நிறைந்திருந்த நெற்பயிர்கள் வரட்சி காரணமாகப் பூவுடன் வாடிக் கொண்டிருந்தன. இக்காணியில் விளைந்து வந்த நெல்லே இவ்வூரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்ததெனலாம். நல்ல விளைச்சலைத் தருகின்ற இவ்வயலில் நிறைந்திருந்த நெற்பயிர்கள் வரட்சியினால் முற்றாகப் பாதிக்கப்படின் ஊரில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதை உணர்ந்த மக்கள் பெரிதும் கலங்கினர்.
இதற்கு முந்திய காலத்தில் இவ்வாறு மழையின்றி நெற்பயிர்கள் வாடிய போதெல்லாம் வயலின் ஓரிடத்திலுள்ள மருதமர நிழலில் அம்மனைப் பிரதிஸ்டை செய்து வேண்டுதல் செய்தால் மழை பொழியும் வழக்கம் இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்ட இவ்வூர் மக்கள் இம்முறையும் ஒன்று கூடி அம்மனை எடுத்துச் சென்று ஊரக்கை ஆற்றுக்கு அருகாமையில் வயலில் நின்றிருந்த மருதமரத்து நிழலில் அம்மனைப் பிரதிஸ்டை செய்து வேண்டுதல் செய்தனர். இவ்வாறு செய்தபோதும் மழை பெய்யவில்லை. இதனால் ஊர் மக்கள் மனதில் பெருங்கவலை குடிகொண்டது. இதனையுணர்ந்த அம்மன் ஆலயக் கப்புகனாரான கண்ணப்பரும் மனம் வருந்தினார்.

இவ்வூரில் வாழ்ந்து வருபவரும் தமிழ்ப்பற்று மிகுந்தவருமான இவர் தம்பிலுவில் மக்களின் துயரினைப் போக்க நினைத்தார். ஒரு நாள் பூசையின்போது ஊரக்கை வெளியில் குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து பச்சைக் களிமண்ணை இவர் எடுத்து வந்து ஒரு பானை செய்து அதில் பொங்கலிட்டு அம்மனுக்குப் படைத்தார். பின்பு கண்களை மூடிக்கொண்டு (அம்மனைத் தியானித்துக் கொண்டு) பாட ஆரம்பித்தார். பதினாலு பாடல்கள் பாடிமுடிந்ததும் சற்றும் எதிர்பாராத வகையல் வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கியது. இவ்வதிசயத்தைக் கண்டவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக் கெடுத்தோராய் கப்புகனாரைத் தொழுது பாராட்டினார். ஊரக்கை ஆற்றுக்கு அருகாக இருந்த மருதமரத்தடியில் அன்று கண்ணப்பரால் பாடப்பட்ட பாடல்களே இன்று 'தம்பிலுவில் மழைக்காவியம்' என்ற இலக்கிய வடிவமாக விளங்குகின்றது.

இக்காவியத்திலுள்ள ஒரு பாடலில் கப்புகனாரான கண்ணப்பர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பத்தினித்தெய்வமே உன்னருள் கிடைப்பின் நட்ட நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் கூட கூரையை வந்து சேரும். பிணம் கூட உயிர்பெறும். உப்பு நிலத்தில் நெல்விளையும். பிறவியிலேயே ஊமையானவனும் பேசமுடியும். குருடன் பார்வை பெறுவான். கடலில் விளையும் முத்துக்கள் நதியிலும் விளையும் இவ்வகையான வல்லமையினைப் பெற்ற கண்ணகைத் தாயே இவ்வூரில் வாழ்ந்து வரும் ஏழைகளின் இதயங்களைக் குளிரச்  செய்ய மழையைப் பொழியச் செய்வாய் என்று இறைஞ்சுகின்றார்.

மேலும் இவர் தனது காவியத்தில் கண்டி மன்னனான இரண்டாம் இராசசிங்கனையும் புகழ்ந்துரைக்கத் தவறவில்லை. 'நீதி செறி கண்டி மகாராசசிங்கன் வாழி' என்று கண்டி மன்னனை இவர் குறிப்பிடுகின்றார்.

முடிவுரை:

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் மூலம் மக்களின் சமய, சமூக, பண்பாட்டு இயல்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கணவன் - மனைவி எவ்வாறு ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்பதைச் சுட்டி நிற்கின்றது. மனைவி கணவனுக்கு மந்திரியாகவும் அறிவுரை கூறும் ஆலோசகராகவும் சிறப்பான முறையில் செயற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது. குடும்பத்தில் சமூகத்திலும் சகல வயது மக்களுடனும் புரிந்துணர்வை ஏற்படுத்த வழிவகுக்கின்றது. எனவே, கிராம மக்களின் வாழ்க்கையில் இவ்வழிபாடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் காணப்படுகிறது.


உசாத்துணை நூல்கள்:

  1. நவநாயக மூர்த்தி, நா., (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, வானதி வெளியீடு, அக்கரைப்பற்று.
  2. கலாபூசணம், க. மகேஸ்வரலிங்கம் கட்டுரைகள், தொகுப்பு க. இரகுபரன், (2008), மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும், கொழும்பு தமிழ்ச்சங்கம், கொழும்பு.
  3. தங்கேஸ்வரி, க., (2008), கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
  4. கண்ணகி கலை இலக்கிய விழா மலர், 2012; பரல் – 1, கண்ணகி கலை இலக்கியக் கூடல், மட்டக்களப்பு.
  5. கணபதிப்பிள்ளை, சி., (1971), மகாமாரித்தேவி திவ்யகரணி, விவேகானந்த அச்சகம், யாழ்ப்பாணம்.
  6. கதையா, ஏ.ஊ., (1968), கண்ணகி வழக்குரை, காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம், மட்டக்களப்பு.
  7. பூபாலபிள்ளை, தி., கப்புகனார் நேர்காணல் 03.06.2013
  8. நவநாயக மூர்த்தி, நா., நேர்காணல் 04.06.2013
  9. நன்றி – பி. புவனேந்திரன், தொழில்நுட்பவியலாளர், கோளாவில், அக்கரைப்பற்று.