முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியரும்

     தமிழகத்திலும் ஈழத்திலும் தலைசிறந்த முத்தமிழ் வித்தகராய்த் திகழ்ந்து தவவாழ்வு மேற்க்கொண்டு தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றியவர் சுவாமி விபுலானந்த அடிகள் (1892.03.27 – 1947.07.19). மீன் பாடும் தேன்நாடெனப் போற்றப்படும் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் அருகேயுள்ள காரைதீவு எனும் பழம்பதியினிலே தந்தையார் சாமித்தம்பி தாயார் கண்ணம்மையார் ஆகியோர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட இளமைப் பெயராக மயில்வாகனம் அமைய சுவாமியின் துறவு வாழ்க்கையின் பின் பெற்ற பெயராக விபுலானந்த அடிகள் எனும் பெயர் அமைகிறது.

    சுவாமி விபுலானந்தர் பயிற்சி பெற்ற ஆசிரியராவதோடு மதுரைத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பண்டிதராகவும் விஞ்ஞானமாணி (B.Sc) இவிஞ்ஞான டிப்ளோமா பட்டதாரியாகவும் சிறந்த கலைஞர், ஆரய்ச்சியாளராகவும் சிறந்த விஞ்ஞான ஆசிரியராகவும் கல்லூரி அதிபராகவும் பல்துறை கல்வியலாளராகவும் பல துறைகளிலும் கடமையாற்றிய பெருமையும் உயர்திரு விபுலானந்த அடிகளையே சாரும்.

    ஆறுமுகநாவலர் வட இலங்கையில் தோன்றி யாழ்ப்பாணத்திற் கல்வி நிலையங்களை அமைத்து அவற்றின் மூலமாக சைவமும் தமிழும் தழைத்தோங்க செய்தமை போன்று கிழக்கிலங்கையில் அதற்கு சமாந்தரமான பணிகளை சுவாமி விபுலானந்தர் செய்துள்ளார் என்பதை யாவரும் அறிவர் என்பதோடு அதற்கான எடுத்துக்காட்டுகள் பலவுமுள்ளன.

    சுவாமி விபுலானந்த அடிகளார் தோன்றிய காலம் ஆங்கிலேயர் ஆட்சி வீறு கொண்டிருந்த காலமாகும். ஆங்கிலேயர் ஆட்சி வீறு கொண்டிருந்த காலத்தில் எம் மண்ணின் சமயம், கலாசாரம், கல்வி,  பண்பாடு போன்றவற்றை மேலைநாட்டு மோகத்தில் இருந்து அழிந்தொழியாது அவற்றை பாதுகாத்து புத்துயிரளித்த ஈழத்துத் தேசிய வீரர்களுள் அடிகளாரும் குறிப்பிடத்தக்கவராவார்.

சுவாமி விபுலானந்த அடிகள் தமிழ்நாடு சென்று கரந்தைத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம்,   கலைச்சொல் ஆராய்ச்சிக்  கழகம் என்பன நடாத்திய விழாக்களிலே பல தலைமையுரைகளை ஆற்றியுள்ளார். அவைகளெல்லாம் சிறந்த ஆராய்ச்சியுரைகளாக விளங்குகின்றன.

    யாழ் நூல் எனும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூலையும் மதங்கசூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூலையும் இயற்றிய சுவாமி விபுலானந்த அடிகள் பல செய்யுள் நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்தளித்துள்ளார். கணேசபஞ்சதோத்திர பஞ்சகம், கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை, குமார வேணவமணி மாலை போன்றன சுவாமிகள் இயற்றிய செய்யுள் நூல்களாகவமைகின்றன.

   சுவாமி விவேகானந்தர் சம்பாசணைகள்,  விவேகானந்த ஞானதீபம், கருமயோகம், ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை என்பன சுவாமி விபுலானந்தரின் மொழிபெயர்ப்பு நூல்களாக அமைகின்றன. இவற்றை விட ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். விபுலானந்தரின் கட்டுரைகளின் மொழியழகும் நடையழகும் சங்க இலக்கியங்களிலே பழகியோரால் பெரும்பாலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த மொழிநடையையே காணக்கூடியதாகவுள்ளது. சுவாமி விபுலானந்தரின் கட்டுரை எழுத்துக்களிலும் நூல்களிலும் பொதுவாக மொழியழகையும் நடையழகையும் எளிமையையும் இனிமையையும் வெகுவாகக் காணலாம்.
இலக்கியக்கட்டுரைகளிலும் வரலாற்றுக்கட்டுரைகளிலும் பொதுத் தன்மை தனித் தன்மைகளைக் காட்டும் அடிகளாரின் ஆராய்ச்சி இயல்பு அவரின் கட்டுரையின் வாயிலாக அவதானிக்கத்தக்கதாகவுள்ளது.

    தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுகின்ற யாழ்நூல் என்னும் பொக்கிசத்தைத் தரணிக்குத் தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பெருமைக்குரியவராக விளங்குகின்றார். தமிழ் ஆய்வின் இக்கால(சமகாலம்) விரிவுக்கு வேண்டிய வித்துக்களை விபுலானந்தருடைய புலமை ஈடுபாடுகளிலேயே காணமுடிகின்றது. குறிப்பாக தமிழ் இலக்கியத்திலே வருகின்ற சிந்தனை மரபு பற்றிய ஒரு சிரத்தை விபுலானந்தரிடத்து வெளிப்பட்டுள்ளது. இயற்கை அறிவியல் நோக்கு முறையினை உள்வாங்கிய ஒரு பயில்வாளர் என்கின்ற வகையிலும் அதே வேளை ஆத்மார்த்த அழகியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர் என்ற வகையிலும் தமிழ்ப் பண்பாடு பற்றிய பல விடயங்களையும் பன்முகப் படம் பார்க்கும் ஆற்றலுடையவராக விளங்குகின்றார் என்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

      முத்தமிழ் வித்தகர் எனத் தமிழ் உலகம் வானளாவப் போற்றும் வகையில் சுவாமி விபுலானந்தரின் இலக்கிய ஆளுமை; ஆழ்ந்தும் விரிந்தும் காணப்பட்டது உண்மையே. ஆனால் அந்த இலக்கியப் பணிகளுக்கு மத்தியிலும் சமூகத் தொண்டிற்கு அதுவும் குறிப்பாக கல்வித் தொண்டிற்கு அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதும் அதே அளவிற்குப் பாராட்டத்தக்க விடயமே. இலக்கியப் பணியும் சமூகப் பணியும் அவரது ஆளுமையின் இரு மிகப் பெரிய பரிமாணங்கள் எனலாம். சுவாமிகளின் கல்விச் சிந்தனைகள் மற்றும் கல்வித் தொண்டினைக் குறித்து நாம் பெருமை கொள்ள முடியும் என்று சுவாமி ஆத்மகனாநந்த இயம்பியுள்ளார்.

  தமக்கென வாழாமல் பிறர்குரியவராக வாழ்ந்தவர் சுவாமி விபுலானந்தர். தாம் பெற்ற கற்ற கல்வியறிவைப் பிறருக்கு ஈந்து இன்பம் கண்டவர். தனது ஊர், தனது நாடு, தான் வாழ்ந்த உலகு ஆகியவற்றில் தம் குறுகிய வாழ்நாள் காலத்தில் அறிவு ஒளி பரப்பி உலக மக்களை குறிப்பாக தமிழ் மக்களை தமது கல்விநெறி, கல்வித் தொண்டுகளால் ஒரு புதிய தேசிய நோக்கில் வாழ வைக்க முயன்ற துறவி விபுலானந்த அடிகள். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்வியறிஞர்களில் தேசிய பெருந்தலைவர்களின் வரிசையில் அடிகளும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார் என்றால் மிகையாகாது.

  பன்னெடுங்கால ஆராய்ச்சியின் விளைவாக அடிகள் ஆக்கியளித்திருந்த யாழ்நூல்  அரும்பெரும் பொக்கிசமாகும். தமது புலமை வழி நின்று பண்டைத் தமிழரின் இசைக்கருவிகளைத் துருவித் துருவியாராய்ந்து பண்டைய யாழின் வரலாறு, அமைப்பு முறை போன்ற அரிய விடயங்களையெல்லாம் திரட்டித் தொகுத்துத் தம் ஆராய்ச்சி முடிபுகளை யாழ்நூல் வாயிலாக வெளியிட்டார்.

   யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரவில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் 20 ஆம் நாளில் திருக்கொள்ளம் புத்தூரில் மற்றாஸ் மாநில கல்வி மந்திரி அவிநாசலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையில் சங்ககால சம்பிரதாயங்களுக்கு ஒப்பாக அறிஞர் பேரவையில் மிகச் சிறப்பான முறையில் அரங்கேற்றப்பட்டது. தேவார இசைத்திரட்டும் இசை நாடக சூத்திரங்களும் புறவுறுப்பாக அமைந்த யாழ்நூல் பாயிரவியல் முதலாக ஒழிபியலீறாக ஏழு இயல்களையுடையது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுகாதையில் யாழாசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்ததொரு விரிவுரையாக இந்நூல் அமைந்துள்ளது. வழக்கொழிந்து போன இசைநூல் இலக்கணத்தையும் முளரியாழ், ஆயிர நரம்பு யாழ் போன்ற வழக்கொழிந்த யாழ்களையும் யாழ்நூல் கூறுவதாகவுள்ளது. தேவாரப் பதிகங்கள் முழுமைக்கும் யாப்பமைதி, கட்டளையமதி, சுவையமதி என்பவற்றைத் தந்து ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த கலைச்செல்வத்தை மீண்டும் நாம் பெறுவதற்கு யாழ்நூல் உதவுவதாகவுள்ளது. யாழ்நூலின் இரண்டாம் அதிகாரமாகிய யாழ் உறுப்பியற் பகுதியில் வில்யாழ் அமைப்பு, இசைக்கூட்டு முறை என்பவற்றை ஆராய்வதாகவுள்ளது.

     ஒருகால் தமிழர்கள் பலவகைக் கலைகளும் உடையவராய் உலகத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வணிகத்தில் மேம்பாடுற்று விளங்கியதோடு பல நாடுகளிலும் சென்று குடியேறியவர்கள் என்னும் வரலாறுகளை நூல் வடிவில் வெளிவரச்செய்ய வேண்டும். இங்ஙனம் செய்யாவிடில் நமது வரலாறு பிறநாட்டவர்களுக்குத் தெரியாமற் போய்விட அது அழிந்து விடுகிறது. பழைய காலத்திலே தமிழ் அடைந்திருந்த சிறப்பை எதிர்காலத்தவர்களும் அறிய வைப்பதற்கும் மற்றைய நாட்டவர் அறிவதற்குமாக வரலாற்று நூல்களை எழுதுவது பிரதான பணியாக அமைகிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒன்றோடொன்று தொடர்புபட்டனவாகையால் ஒவ்வொன்றில் வல்லோர் மற்றையவற்றையும் அறிவதோடு தமிழறிவு பெற்றவர்களே தமிழ்த் தொண்டு செய்தற்கு உரியவர்கள் என்ற செய்தியை இயலிசை நாடகம் என்ற இலக்கிய கட்டுரை ஊடாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் கலைமகளாகிய சரஸ்வதியை வாணி என அழைப்பர்.அதனை ஆதாரமாகக் கொண்டு ஆங்கில இலக்கியங்களுக்கு ஆங்கிலவாணி என நாமமிட்டு ஆங்கிலக் கவிஞர்களாகிய சேக்ஸ்பியர், மில்றன், கீத்ஸ், ஏழைகள் கவிஞரான ஷெல்லி, தெனிசன்,  றெபேட் பிறெளணிங் என்பவர்களது Áல்களாகிய ஜூலியட் சீசர், பறடைஸ் லொஸ்ற் எண்டிமியோன், கட்டுநீங்கிய பிரமதேயன், கையறுநிலைச் செய்யுள், த றிங் அன் த புக் என்னும் காப்பியங்களின் வரலாறுகளையும் ஆங்கிலப் புலவர்களையும் ஆங்கில இலக்கியங்களையும் அறிமுகஞ் செய்து அவ்விலக்கியங்களிலிருந்து சில சுவையான செய்யுட் பகுதிகளைத் தமிழிலே செய்யுளாக மொழிபெயர்த்து யாத்து ஆங்கில இலக்கியங்களை அறியாதவர்கள் ஆங்கில இலக்கிய நயத்தைச் சுவைக்க செய்துள்ளார். இக்கட்டுரை ஒப்பியற் கல்வித் துறைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

  பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாநாடகத்தை மையமாகக் கொண்டு ஈழத்துத் வழக்குத் தமிழ் ஆராயப்படுகிறது. தமிழ் மொழி ஒலியியல் பற்றி ஆராய்கிறது. மட்டக்களப்பு, யாழ்ப்பாண வழக்கு மொழி பற்றிய ஆராய்ச்சி நாநாடக நூலில் வரும் கொடுந்தமிழ் வழக்கு அறநூல் , பொருநூல், இன்பநூல் வீட்டு நூல் என்பன செந்தமிழில் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் என்பவற்றை சோழ மண்டலத்துத் தமிழும் ஈழ மண்டலத்துத் தமிழும் எனும் கட்டுரையின் வாயிலாக தமிழ்மொழியின் ஒழிபியல் பற்றி ஆராய்வதாகவுள்ளது.

 கடல்வாய்ப்பட்டனவும் காலத்தின் மாறுதலினாற் சிதைந்து அழிந்தனவுமான இலக்கிய சமய நூல்களாகிய கலைச்செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு முயலும் எண்ணத்தோடு அயராது உழைத்தவர் அடிகளார். அவரது நுட்பமான ஆராய்ச்சியின் பயனாக யாழ்நூல், இமதங்கசூளாமணி போன்ற அரிய நூல்கள் தோன்றி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவுகள் வளம்பெற்றன. இந்நூற்றாண்டிலெழுந்த தமிழிசை இயக்கத்தின் முன்னோடியும் விபுலானந்தரே ஆவார்.

   மேலும் ஆங்கில மொழியிலுள்ள இலக்கியங்களை சுவை குன்றாது மொழிபெயர்த்தார். ஆங்கில இலக்கிய வளத்தைத் தமிழர்கள் நுகர வழி செய்வதோடு ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளருக்கும் வழிகாட்டி நிற்கின்றன. மதங்கசூளாமணி ஆங்கில வாணி என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அவற்றுள் அடிகளார் கூறிய கருத்துக்களும் ஆக்கவேலை நெறிகளும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணைசெய்கின்றன.
  
  புழந்தமிழ் இலக்கியச் சிறப்புக்களையும் சேக்ஸ்பியரின் திறத்தையும் பாராட்டி பழந்தமிழ் இலக்கியம் போன்று கடின சொற்களால் கவிதை யாத்த அடிகளார் அதே சமயம் புதுமைக் கவிஞர் பாரதியாரையும் போற்றி அவரைப் போல் எளிய சொற்களில் புதுமைப் பொருளில் கவிதை தந்து பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலம் போல் விளங்கினார் என்றால் மிகையாகாது. சுவாமிகளின் கவிதைகள் வெறும் கற்பனையாக அமையாமல் உள்ளத்தின் உண்மை ஒளியை காட்டுவனவாகவும் விளக்கிக் கூறுவனவாகவும் அமைந்துள்ளன.

முத்தமிழ் வித்தகரின் கவிதை வரிகள் ..

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது
தன்னேரிலாத தமிழ்

பைங்கன் இளம் பகட்டின் 
மேலானைப் பான்மதிபோய்
திங்கள் நெடுங்குடையின் கீழான அங்கிருந்து
நான் வேண்ட நன்னெஞ்சே நாடுதிபோய் நானிலந்தோர்
தாள் வேண்டும் கூடற்றமிழ்

சொல்லெனும்  போது தோன்றிப் பொருனென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால் மல்லிகையின்
வண்டார்கமழ் தாமமன்றே மலையாத
தண்டாரன் கூடற்றமிழ்

தாம் அனுபவித்து சுவைத்த இலக்கியப் பகுதிகளையும் அவற்றின் மூலம் தம் சிந்தனைகளில் உதித்த சில புதிய கருத்துக்களையும் ஆதாரபூர்வமாக காட்டி நவீன வருங்கால ஆராய்ச்சியாளருக்கு பாதை வகுத்துக்கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.

  தமிழ்ப் பணிஇசமூகப் பணி, இலக்கியப் பணி, ஆராய்ச்சிப் பணி என்று பல்வகைப் பரிமாணங்களை உள்ளடக்கி வருங்கால சமுதாயத்திற்கு வழி காட்டியாக வாழ்ந்து 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி தமது ஐம்பத்தைந்தாவது(55) வயதில் இயற்கையெய்தினார்.


























சுவாமி விபுலானந்த அடிகளாரின் கையெழுத்து 
(நன்றி:  படங்கள்- முனைவர்.மு.இளங்கோவன் )


பாக்கியராஜா மோகனதாஸ் (நுண்கலைமாணி)
துறைநீலாவணை