உடுக்கு / உடுக்கை


உடுக்கு அல்லது உடுக்கை என்பது தமிழர் பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்பெறும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். இசைத்துக் கொண்டிருக்கும் போதே இதன் சுருதியை மாற்றியமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பியல்பாகும். உலோகத்தால் அல்லது மரத்தாற் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை "இடை சுருங்கு பறை" என்றும் துடி என்றும் அழைப்பர். பொதுவாக இதிலிருந்து ஒலியெழுப்புதலை "உடுக்குத்தெறித்தல்" என்றே அழைக்கப்படுகின்றது. சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் கையிலும் இந்த உடுக்கு காணப்பெறுகிறது. இதிலிருந்து இது ஒரு பழமைவாய்ந்த  இசைக்கருவியென்பது புலனாகிறது.