முடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கு...

எதிர்வரும் பதினொராம் திகதியிலிருந்து (11.05.2020) முடக்கல் நிலையிலிருந்து மீள்வாழ்வுப் பயணத்திற்கென நாடு திறக்கப்படுகின்றது என அரசினால் அறிவிக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவும் தங்களது முடக்கல் நிலையிலிருந்து மீண்டு வெளியே வருவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவதனை காணக் கூடியதாகவுள்ளது. இத்தகைய மீள்திறப்பு நடவடிக்கை குறித்து பலரும் தங்களது அச்சத்தையும், அதிர்ச்சியினையும் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். WHO என்கிற உலக சுகாதார அமைப்பும் உலக நாடுகளை எச்சரிப்பதுடன், மீள்திறப்பு நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமென்றும் எதிர்பார்த்து நிற்கின்றது. 'பொருத்தமான ஆயத்தமற்ற மீள்திறப்பானது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் பாய்ச்சலுக்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரித்துள்ளமை' நோக்கத்தக்கது. இத்தகைய பின்னணியில் இன்றைய நாள் வரைக்கும் வாழ்ந்த நிலை, புதிதாக ஆரம்பிக்கப் போகின்ற வாழ்க்கை நிலை போன்றவற்றை புடமிடுவது நலமென எண்ணுகிறேன். 

கடந்த இரண்டு மாத காலமாக இலங்கையர் நாமெல்லோரும் ஓர் புதிய உலகினில் வாழ்வதனை உணர்ந்துள்ளோம். கடந்த மார்கழி 2019இல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன என்பது மட்டும் உண்மை. இவ்வளவு காலமும் உலகினை கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு பின்பு என்று அளவீடு செய்த நாம், தற்போது 'கொவிட் 19'ற்கு முன்பு, 'கொவிட் 19'ற்கு பின்பு என்று சிந்திக்க மாறியுள்ளோம். நம் வாழ்வின் போக்கினையே ஆட்கொல்லி வைரஸ் தொற்று வியாதி புரட்டிப் போட்டுள்ளது. 

அப்படி என்னதான் 'கொவிட் 19' என்று நான் சொல்லத் தேவையில்லை. இன்று சின்னக் குழந்தையும் இதுகுறித்து பேசும். ஆனால் சிறிதாக, 2019ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் சீனாவின் உ(வூ)கான் மாநிலத்தில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது இன்று நமது நாடு உட்பட, உலகின் 200ற்கு மேற்பட்ட நாடுகளில் பரவி சாவினை வருவிக்கும் உயிர்க்கொல்லி பெருந்தொற்றாக மாறி உலகினை வதம் செய்கின்றது. உலகின் முதலாம் மண்டல நாடுகளே 'கொவிட் 19'னால் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கின்றன.

இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் முழுஉலகிலும் 3.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இன்னுயிரை இழந்தும், 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் 21ஆம் நூற்றாண்டின் அறிவியல், விஞ்ஞான, மருத்துவ வளர்ச்சிக்கு விடுக்கப்பட்ட மாபெரும் சவாலாகும். இதில் ஆறுதலான விடயம் யாதெனில் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சுகமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளமையாகும். நமது நாட்டிலும் 800ற்கு மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 9 பேர் மரணித்தும், 500 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற, 200 மேற்பட்டவர்கள் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளார்களென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்தகைய பின்னணியில் கொரோனா பெரும் பரவல் தொற்று வியாதி (pandemic) நமக்கு விடுத்த/விடுக்கின்ற செய்தி என்னவென்று சிந்திப்பது பொருத்தமாகும். அத்தகைய சிந்தனையில் எனக்குள் தோன்றிய சிலவற்றை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன். 

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பல புதிய வார்த்தைகளை எல்லாம் நாம் சரளமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். அவற்றுள் சில, கொரோனா வைரஸ் (corona virus), 'கொவிட் 19' ('COVID 19'), தனிமைப்படுத்தல் (quarantine), சுயதனிமைப்படுத்தல் (self-quarantine), சமூக இடைவெளி (social distance), முடக்கம் (lockdown),  PCR பரிசோதனை (PCR test) என்பனவாகும். மறுபக்கத்தில் சில விடயங்களை புதிதாக செய்யக் கற்றுக்கொண்டோம். அவற்றுள் சில அடிக்கடி கைகளைக் கழுவுவது, தொற்றுநீக்கி (sanitizer) பாவிப்பது, முகத்தினை முகத்திரை (mask) கொண்டு மூடுவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது. இவற்றுள் எதுவுமே நாம் முன்னர் செய்யாதவை. 

பலருடைய நாளாந்த நடைமுறைகள் மாறிவிட்டது. 'கொவிட் 19'ற்கு முன்பெலாம் காலை ஐந்து மணி, ஆறு மணியளவில் எழுந்து நாளாந்தக் கடமைகளை நிறைவேற்றிய நம்மில் பலருக்கு, தற்போது காலை ஒன்பது மணிக்கு எழுவதே கடினமாகிவிட்டது. இதற்கு மிகமுக்கிய காரணம் நமது நித்திரைப் பழக்கவழக்கம் (sleeping culture) மாறிவிட்டது. இரவில் தூக்கத்தற்கு செல்கின்ற நேரம் பல வீடுகளில் நள்ளிரவினைத் தாண்டி விட்டது. இந்த வருடத்தின் முதல் நாளில் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறிவிட்டு அவரிடத்தில் கேட்டேன் 'புதிய வருடத்திற்கான தங்களது தீர்மானம் (resolution) என்னவென்று' கேட்டபோது அவரும் நகைச்சுவையாக 'நல்லா நித்திரை கொள்ள வேண்டும்' என்று கூறினார். இக்காலத்தில் அவரிடம் அழைத்து 'தங்களது புத்தாண்டுத் தீர்மானம் நிறைவேறுகிறது' என்று நகைச்சுவையாகக் கூறினேன். அவரும் பதிலுக்கு 'ஆம்' என்று பதிலளித்தார். 

பலருடைய உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமானது அபரிதமானது. 'கொவிட் 19'ற்கு முன்பு பலருடைய வீடுகளில் ஒருவேளை உணவாவது கடை உணவாகவே காணப்பட்டது. அந்நிலை இன்று முற்றாகவே மாறிவிட்டது எனலாம். எல்லா வீடுகளிலும் இன்று சமையல் நடைபெறுகின்றது.  உலகமயமாக்கல் எனும் கொடும் அரக்கனால் நமது மண்ணுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி, நமது பாரம்பரிய பண்பாட்டு உள்ளுர் உணவு முறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எல்லோருமே நாள் முழுவதும் வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளதால் புதிய புதிய சிற்றுண்டிகள் (tiffin) செய்முறைகள் எல்லாம் யூ டியுப்பிலிருந்து (you tube) இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளுர் உற்பத்திகள் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. 

குடும்ப உறவுகளின் நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 'கொவிட் 19'ற்கு முன்பு அதிகநேரம் பொதுவாழ்விலும், அடுத்தவர்களுடன் கழிக்கவும் செலவிடப்பட்டது. ஆனால் 'கொவிட் 19'ற்கு பிற்பாடு அந்நிலை மாறி குடும்பத்துடன் செலவிடும் நேரம் கூடியுள்ளது. தாய், தந்தையர் தங்களது பிள்ளைகளுடன் கூடுதலான நேரத்தினை செலவிடுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஒன்றாகக்கூடி பேசுகின்றார்கள், உண்ணுகின்றார்கள், விளையாடுகின்றார்கள். வீடு, வளவு, தோட்டம், துரவுகளிலெல்லாம் காலடிகள் படத்தொடங்கியுள்ளன. வாழ்வின் பரபரப்பான ஓட்டங்களுக்கும், வீணான அலைச்சல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உறவுகளைத் தேடப் பழகிக்கொண்டோம். தொலைத்த உறவுகளை மீண்டும் சரிசெய்து கொள்ளும் காலமாகவும் மாறியுள்ளது. தொலைபேசி அழைப்புக்கள், உரையாடல்கள் வாயிலாக தூரத்தேயிருந்த உறவுகள் எல்லாம் நெருக்கமாக்கப்பட்டுள்ளார்கள்.

தனி மனிதனின் அன்றாடத் தேவைகள் யாவும் சுருங்கிவிட்டன. ஆடம்பரத்திற்கும் அத்தியாவசியத்திற்கும் வித்தியாசம் நன்கு புரியத் தொடங்கிவிட்டது. குறைந்தளவு பொருட்களுடன் வாழ்க்கையினை ஆனந்தமாக வாழலாம் என்கிற பன்னெடுங்காலத் தத்துவம் மனித மனங்களில் உறையத் தொடங்கியுள்ளது. மனித மனங்களில் பகிர்வுக் கலாசாரம் புதிய பரிமாணம் எடுத்துள்ளது. இல்லாதவர்களுக்கு உள்ளவற்றை பகிர வேண்டுமென்கிற பண்பு யாரும் சொல்லாமலே பலரிடத்தில் இந்நாட்களில் நடந்தேறியதனை மறந்துவிட முடியாது. 

மருத்துவர்களும், மருத்துவ உலகமும் புதிய கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றது. 'கொவிட் 19'ற்கு முன்பு மருத்துவர்களையும், மருத்துவத் துறையினையும் பணம் சம்பாத்திக்கும் முதலைகளாக நோக்கிய மனிதர்கள், இன்று அதே மருத்துவர்களையும், மருத்துவத் துறையினையும் 'வாழும் கடவுளர்'களாக பார்க்கத் தொடங்கியுள்ளது எவ்வளவு பெரிய மாற்றம். மருத்துத் துறையின் அசலான (original) தன்மையினை மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளமை மிகப்பெரிய வெற்றியே. இந்நிலை தொடர வேண்டுமென்பதே அனைவரதும் அவாவாகும்.

வரலாறு காணாத அளவிற்கு சுற்றுச் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் இந்நாட்களில் படிக்கின்ற செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். காற்றில் படிந்துள்ள மாசின் தன்மை குறைந்து பூமியின் வான் பரப்பு தெளிவாகவுள்ளது. ஓரிடத்திலிருந்து தூரத்திலுள்ள இன்னுமொரு இடத்தினை (கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலை) காணக்கூடியதாகவுள்ளது என்றெல்லாம் கூறுகிறார்கள். பல்வேறுபட்ட கழிவுகளால் (தொழிற்சாலை) மாசுபட்டிருந்த நீர் நிலைகள் எல்லாம் மீண்டும் அதன் புனிதத்துவத்தை அடைந்துவிட்டன என்கிறார்கள். பறவைகள், பட்சிகள், விலங்குகள் எல்லாம் மீண்டும் சுதந்திரமாக நடமாடத் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருத்தியடைந்துள்ளது. 'கொவிட் 19' மனிதனுக்கு விடுத்துள்ள மிகப்பெரிய செய்தி யாதெனில் 'உலகு மனிதனுக்கு மட்டும் உரித்தானது கிடையாது. அது உலகப் படைப்புக்கள் அனைத்துக்குமானது. அதனை உரிய மாண்போடு பாதுகாக்க வேண்டும்' என்பதாகும். 

மக்களின் சமய நம்பிக்கைகளைப் பொறுத்த வரையில் வழிபாட்டிடங்கள் யாவும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. பொது வழிபாடுகள் அல்லது பிரார்த்தனைகள் எதுவுமே கிடையாது. இதனை பலரும் எதிர்மறையாக நோக்கினாலும், இக்காலகட்டத்தில் பொது வழிபாடுகள் அற்றுப்போனதே தவிர, தனிமனித, குடும்பங்களின் நம்பிக்கையும், பிரார்த்தனையும் இன்னும் அதிகமாகி உள்ளதே என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரது இல்லங்களும் கோவில்களாகவும், ஆலயங்களாகவும், பள்ளிவாயில்களாகவும், விகாரைகளாகவும் மாறியது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒவ்வொருவரும் தத்தம் முறைகளில் 'கொவிட் 19'ற்கு எதிராக இன்று வரையிலும் இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்து வருவதனைக் காணலாம்.

இவ்வாறான மிகப்பெரிய நேர்மறைச் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் 'கொவிட் 19' நமக்கு தந்து நிற்க, மறுபக்கத்தில் பல எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்துள்ளது என்பது உண்மையே.

பல உறவுகள் 'கொவிட் 19' தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்து போன தங்களது அன்புக்குரிய உறவுகளின், அவர்களது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமலும், அவர்களது முகங்களையோ, உடல்களையோ காண முடியாமல் (மருத்துவக் காரணங்கள் கூறி)  அடக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் பெருத்த வருத்தத்தினையும், உளவியல் ரீதியிலான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறே, 'கொவிட் 19' தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மனநிலையானது தொடர்ச்சியான மரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை நோக்கக் கூடியதாகவுள்ளது. மறுபக்கத்தில் தனிமைப்படுத்தல் மையங்களில் வைத்து கூர்ந்து கவனிக்கப்படுகின்ற நபர்களினது உளநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. அண்மையில் ஒரு மருத்துவர் 'இத்தகையோருக்கு உளநல உதவிகள் தேவைப்படுகின்றது' என்று என்னிடத்தில் கூறினார். 

பொருளாதார ரீதியாக பலத்த நெருக்கடிகளை 'கொவிட் 19' உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் தோற்றுவித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிலையங்கள், சிறு கைத்தொழில்கள், நாளாந்தத் தொழிலாளர்கள், பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, கடற்றொழில் போன்றவற்றின் கிரமமான தொழிற்பாட்டு முடக்கத்தால் பலத்த பொருளாதாரச் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது வருவாயையும் இழந்துள்ளார்கள். பொருளாதாரச் சரிவுநிலை தனி மற்றும் குடும்ப வாழ்விலும் எதிர் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறான நிவாரணத் திட்டங்கள் அரசுகளால் முன்மொழியப்பட்டாலும், தொழில் நிமித்தம் பெறப்பட்ட கடன்கள், மற்றும் வேறு பல தேவைகளின் நிமித்தம் பெறப்பட்ட கடன்கள், நுண்கடன்கள், லீசிங் முறையில் பெறப்பட்ட வாகனக் கடன்கள், காப்புறுதி நிலுவைகள் போன்ற பலவற்றால் ஏற்படுகின்ற அழுத்தங்கள் மனிதர்களுக்கு மிகுந்த மன உளச்சலினை வருவித்துள்ளது என்பதே உண்மையே.

குடும்ப உறவுகளின் நெருக்கத்தினை பேசுகின்ற அதேவேளையில் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் குறிப்பிட்டேயாக வேண்டும். இக்காலப் பகுதியில் பல குடும்பங்களில் குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லது துஷபிரயோகங்கள், தற்கொலைகள் அதிகரித்துள்ளதையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பும், மதுபான நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதால் பலவிடங்களில் கள்ளச் சாராய உற்பத்தியும், பாவனையும் அதிகரித்துள்ளமையினை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது. அவற்றால் குடும்பங்களில் பிளவுகளும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன என்பது வேதனை தருகின்றது. 

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்றவர்களின் உறவுகளில் கணிசமான அளவினர் ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் மற்றும் பல இலங்கையர் தொழில் நிமித்தம் பெருவாரியாக மத்திய கிழக்கு நாடுகளிலும், ஏனைய சில நாடுகளில் சிறிதளவிலும் வாழ்கின்றார்கள், பணியாற்றுகின்றார்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 'கொவிட் 19'தினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுள் இலங்கையரும் அடக்கம். இந்நிலையானது இங்குள்ள உறவுகளுக்கு கடல் கடந்த நாடுகளில் வாழ்கின்ற தங்களது உறவுகளைக் குறித்த அச்ச உணர்வினையும், கவலையினையும் தோற்றுவித்துள்ளது. 

இன்று 'கொவிட் 19'தினைத் தொடர்ந்து புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள இணைய வழிக் கல்வி (online education) மற்றும் தொலைக்கல்வி (distance education) போன்றவை மாணவர்களின் கல்விக்கு ஏதுவாக இருந்தாலும், அது மாணவர்கள் மத்தியிலும் அதிலும் குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மத்தியிலும் அழுத்தத்தினை அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். கல்வி என்கிற பெயரில் திணிப்புக்களே இடம்பெறுகின்றன. ஒரே நாளில் 20ற்கும் மேற்பட்ட வினாத்தாள்களையோ அல்லது பயிற்சிகளையோ செய்யும் படியாக தூண்டும்போது மாணவர்கள் வீணான அழுத்தங்களுக்கே உள்ளாகின்றார்கள். 'ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு அலைபேசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கொடுக்காதீர்கள்' என்று சொல்லிய நாமே 'இன்று அவர்களுக்கு புலனம் (whatsapp) மூலமாகவும், மின்னஞ்சல் (email)  மூலமாகவும் பலதரப்பட்ட பயிற்சிகளை ஒரே நாளில் அனுப்பி, அவற்றைச் அவற்றின் துணைகொண்டு செய்யத் தூண்டுகிறோம்' என்பது நகைப்புக்கலந்த வேதனை தருகிறது. இத்தகைய எந்தவிதமான நவீன தொடர்பாடல் கருவிகளையும், முறைகளையும் அறியாத கிராமப்புற பிள்ளைகள் இக்கல்வி முறைமை மூலமாக அந்நியப்படுத்தப் படுகின்றார்கள் என்பது இன்னும் கவலை தருகின்றது.  

இப்படி எதிரும் புதிருமான, நேர்மறை எதிர்மறைப் பண்புகளைக் கொண்ட 'கொவிட் 19' தொற்றிலிருந்து உலகம் விடுபடத் துடிக்கின்ற இத்தருணமதில், எவ்வாறு முடக்கத்திலிருந்து மீள் திறப்பினை எதிர்கொள்வது பற்றி சிந்திப்பது சிறப்பே. 

'கொவிட் 19' தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான மருந்தினை கண்டு பிடிப்பதில் உலகின் பல நாடுகளும் பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு கண்டு பிடிக்கப்படுகின்ற மருந்தானது (vaccine) பயன்பாட்டுக்கு வர குறைந்தது 12 – 18 மாதங்களாவது ஆகும் என்பது வல்லுநர்களின் கருத்தாகும். இத்தகைய பின்னணியில் கொரோனா வைரஸ் நோயினால் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் நோய்த்தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு பாவனைக்கு உட்படுத்தப்படாமலே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் மக்கள் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பதே. அதற்கு காரணம் அவர்களிடத்தில் காணப்பட்ட தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்புச்சக்தி, மருத்துவத் துறையினரின் அயராத அர்ப்பணிப்பு நிறைந்த சேவை என்பது கண்கூடு. 

எதிர்வரும் 11.05.2020இல் நமது நாடு முடக்கல் நிலையிலிருந்து விடுபட்டு, படிப்படியாக வழமை நிலைக்கு திரும்ப எத்தனிக்கின்றது. எனவே நமக்கு முன்பாக மிகப்பெரிய சவால் நிறைந்த காலம் முன்வைக்கப்படுகின்றது. நம்பிக்கையுடன் அக்காலத்தினை எதிர்கொள்வோம். சமூக இடைவெளியினை கண்ணும் கருத்துமாய், இன்னும் அதிகமாக கடைப்பிடிக்க வேண்டிய காலமிதே, ஏனெனில் புதிது புதிதாக பலரையும் எதிர்கொள்ள இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார நெறிமுறைகளை பிசகாது பின்பற்ற வேண்டிய தருணமிதுவே. மிகுந்த அவதானிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டிய காலமிதுவே. சற்றுக் கண்ணயர்ந்தால் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் நம்மைக் கவர்ந்திடும். எனவே நம்மையும் காத்து, பிறரையும் காப்போம். 

'உன்னைப்போல் உன் அயலானையும் அன்புசெய்' என்று விவிலியம் கற்பிக்கின்றது. அதன்படி முதலில் நாம் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்வோம். அவ்வாறு அன்பு செய்வதன் வாயிலாக மீள்திறப்புக்கு வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்மை அன்பு செய்வதன் வாயிலாக நம் அயலவரையும் அன்பு செய்து அவர்களையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்போம். அனைவரும் ஓரணியில் 'கொவிட் 19'ஐ வெற்றிகொண்டு புதிதாய் புறப்படுவோம்.

அருட்பணி நவாஜி – 08.05.2020

full-width