மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் நினைவேந்தல்

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் 29.04.2020 அன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையகத்தில் இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் நிகழ்வினை நடாத்தாமல் ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிதரன் உட்பட ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

1959, ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதிவந்ததுடன் தமிழ் பத்திரிகைகளிலும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்தார்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்து அதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சாரும்.

- கிருஸ்ணகுமார் -
   Maddunews.com