அறியப்படாதவராக பணிவுடன் வாழ்ந்த ஆனந்தா ஏ.ஜீ இராஜேந்திரம் (1952- 2020)


சஞ்சிகைகளில் ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமும் திறமையும் மிக்கவர். சமூகம் சார்ந்தும் சமயம் சார்ந்தும் பல சங்கங்களில் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராகவும் சேவையாற்றியவர். அன்னார் கடந்த 10.04.2020இல் இறைவனடி சேர்ந்தார். அவரது நினைவாக எழுதப்படும் இக்கட்டுரை அவரது பல்துறை ஆளுமையினை வெளிப்படுத்தும் நோக்கமுடையது.
மட்டக்களப்பிலுள்ள புளியடிக்குடா என்னுமிடத்தில் பி.சி.இராஜேந்திரம் அர்ஜீனா தம்பதியரின் மகனாக 1952.10.02ஆம் திகதி இவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆண்கள் பாடசாலையில் கற்ற இவர் இடைநிலை மற்றும் உயர் கல்வியை மட்டு. மிக்கேல் கல்லூரியின் நிறைவு செய்தார். பாடசாலைக் காலத்தில் மிகவும் திறமை மிக்க மாணவராகத் திகழ்ந்தமையை அவரது ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இக்காலத்தில் சிறந்த நாடக நடிகராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய இவர் தனது இருபதாவது வயதில் ஆக்க இலக்கிய கர்த்தாவாக தடம் பதித்தார்.
சோழன், செங்கோல், பாழுர் வேந்தன் என்னும் புனைபெயர்களில் எழுதினார். சிறுகதை, கவிதை, நாவல், குறுநாவல் ஆகியவற்றுடன் ஏராளமான கட்டுரைகளையும் உளவியல் சார்ந்த சிந்தனைக் கருத்துக்களுடைய ஆக்கங்களையும் எழுதியுள்ளார். சுபமங்களா சஞ்சிகையும் இலங்கை தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது `தாளம் தேடும் ராகங்கள்` எனும் குறுநாவலுக்குப் பரிசு கிடைத்தது. அதேபோல அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் நடத்திய குறுநாவல் போட்டியில் `இன்றைக்காவது` என்னும் இவரது குறுநாவல் இரண்டாம் பரிசினை பெற்றது. `உயிரே நீ சொல்” என்றும் என்னும் இவரது கதை 1970களில் தொண்டன் சஞ்சிகையில் வெளிவந்தது.
`மாலையில் ஓர் உதயம்” என்னும் நாவலையும் அவர் எழுதியுள்ளார். இந்நாவல் இனிமையான காதல் கதையைக் கருவாகக் கொண்டது. திருகோணமலை ஈழத்து இலக்கிய சோலையின் வெளியீடான இந்நாவல் 2002 இல் வெளிவந்தது. 1990 களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. 29 மாதங்கள் சிறையில் வாழ்ந்த அவர் அக்காலத்தினை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தினார். இந்த நாவல் அப்போது எழுதப்பட்டது. இதனை விட 20 மாதங்களாக மாதம் ஒன்று வீதம் 20 சஞ்சிகையினை `ஒளி’ என்னும் பெயரில் வெளியிட்டார். தன்னுடைய சக கைதிகளாக இருந்தோரை ஊக்குவிக்கவும் அறிவூட்டும் தான் இத்தகைய எழுத்துப் பணியில் ஈடுபட்டதாக அவர் தனது நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் அவ்வேளையில ஐ.சி.ஆர்.சி அவருக்கு வழங்கிய அப்பியாச கொப்பிகளை அவர் பயன்படுத்தியமை முக்கியமான செய்தியாகும்.
1969இல், மட்டக்களப்பில் தொண்டன் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இதன் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் துணை ஆசிரியராகவும் மிக நீண்ட காலம் பணியாற்றினார். 1970களில் திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட இளைஞர் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டபோது அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாருடன் இணைந்து கிழக்கிலங்கை இளைஞர்களுக்காக நல்வழிகாட்டல் செயற்றிட்டங்களில் செயற்றிறன்மிக்க உறுப்பினராக செயலாற்றினார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமையும் மொழிபெயர்ப்பு திறனும் ஆணித்தரமான பேச்சாற்றலும் இளைஞர்களையும் ஏனையோரையும் மிக வெகுவாகக் கவர்ந்தது.
1978இல் தேசிய சேமிப்பு வங்கியில் எழுதுவினைஞராக இணைந்த இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று முகாமையாளராக திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலத்தில் குறித்த வங்கியின் நிர்வாகச் செயல்பாட்டில் மட்டுமன்றி அதன் சூழலை அழகுபடுத்துவதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதிலும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் சுமுகமான  உறவைப் பேணுவதற்காக மென்மையான பின்னனி இசையுடனான ஒரு சூழலைத் தோற்றுவிப்பதிலும் கவனம் செலுத்தினார். தனது எழுத்து மற்றும் ஓவியத் திறமைகளை தன் பதவி நிலைக்கு அப்பால் மிகச் சாதாரண நிலையில் நின்று பயன்படுத்தினார்.
ஆசிரியையான சந்திரிகா என்பவரை திருமணம் செய்தார். இவரது ஏக புதல்வன் அன்றூ பிரதிகஷன் தற்போது புனித மைக்கல் கல்லூரியில் க.பொ.த. (உ.த) கணிதப் பிரிவில் பயின்று வருகிறார்.
திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழுவின் வெளியீடான ~இலட்சிய இளைஞன்~ என்னும் சஞ்சிகையின் உருவாக்கத்திலும் அதன் வெற்றிப் பயணத்திலும் இவரது பங்களிப்பு கணிசமானது. இதேவேளை இயேசு சபை இளைஞர் ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக தரிசனம் என்னும் உளவியல் சஞ்சிகையின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் செயல்பட்டவர்.
ஆனந்தா ஏ.ஜீ இராஜேந்திரம் அவர்களுக்கு ஓவியக்கலை பரம்பரை வழி வந்த ஒன்று. அவரது பாட்டனாரும் தந்தையும் ஓவியக் கலைஞர்கள். (இவரது தந்தை ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியருமாவார்) மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் `வெட்டாப்பு’ என்னும் கத்தோலிக்க மாத இதழில் சிறுவர்களுக்கான வகையில் வேதாகமக் கதைகளை எளிமையான தமிழில் சித்திரக் கதைகளாகத் தொடர்ந்து எழுதினார். இக்கதைகளுக்கான சித்திரங்களை அவரே வரைந்தமை சிறப்பம்சமாகும். இப்பத்திரிகையில் முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் மையமாக வைத்து சிறிய கதைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.
ஆனந்தா ஏ.ஜீ இராஜேந்திரம் அவர்கள் ஒரு சிற்பக் கலைஞரும் ஆவார் சமூகப் பணிகளையும் சமயப் பணிகளையும் தன் இரு கண்களாய் போற்றி வாழ்ந்தார். சமயப் பணிகளில் அவரது அர்ப்பணிப்பு அளப்பெரியது. புனித வின்சன் டி போல் சபையில் இணைந்து பணியாற்றியதுடன் கத்தோலிக்க சமயம் சார்ந்து மறை மாநிலம் முன்னெடுக்கும் பணிகளில் முன்னின்று உழைத்தார். அவரது வாழ்நாட்களில் மிகப்பெரும்பாலான காலம் சமயப் பணியுடன் பின்னிப்பிணைந்திருந்தமையை அவருடன் சமய ரீதியாக முரண்படும் யாவரும் காய்தல் உவத்தலின்றி ஒப்புக்கொள்வர்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில் `தியாகத்தின் பாதையில்’ என்னும் தவக்கால சிந்தனை தொகுப்பு நூலையும் அதனைத் தொடர்ந்து `ஒரு சகாப்தம் பிறந்த கதை’ என்னும் நூலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், குறுநாவல், மொழிபெயர்ப்பு, மேடைப் பேச்சு, ஓவியம், சிற்பம், இதழியல் என பல்வேறு துறைகளில் ஆளுமை மிக்க ஒருவராக ஆனந்தா ஏ.ஜீ. இராஜேந்திரம் அவர்கள் அறியப்படாத ஒருவராக பணிவுடன் வாழ்ந்தவர். புகழை அவர் தேடிப் போனவர் அல்ல. சமூகம் அவரது திறமைகளை இனங்காணாமை பெருங் குறைபாடு அவர் பழகுவதற்கு இனிமையானவர். தனது ஆளுமையால் எளிதில் எவரையும் கவரக்கூடியவர். நேரிய சிந்தனையாளர் நேர்மையுடன் விமர்சிப்பவர். காத்திரமான விமர்சனங்களை பாரபட்சமின்றி வெளிப்படுத்துபவர் யதார்த்தவாதி பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் ஒத்திசைவுள்ளவர் தலைமைத்துவ பண்பு மிக்கவர்.
அன்னாரது இழப்பு மட்டக்களப்பு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். தன் அடியவரும் ஊழியருமான இவரை இயேசு கிறிஸ்து தான் மரணித்த புனித வெள்ளியான பெரிய வெள்ளிக்கிழமை அன்று தன்னுடன் அழைத்துக் கொண்டார். அவரது ஆன்மா சர்வ வல்லமை பொருந்திய அவரது திருப்பாதங்களில் அமைதி அடைய இறைவனை வேண்டுவோம். 


– ரூபி வலன்டினா பிரான்சிஸ்

மட்டக்களப்பு.