கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா - 2017

கிழக்கு மாகாண கல்வி,தகவல் தொழில்நுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கல்முனை உவெஸ்லி பாடசாலையில்,கடந்த மூன்று (யூலை 31 - ஆகஸ்ட் 2) நாட்களாக இடம்பெற்றது.

முதலிரண்டு நாட்களில் ஆய்வரங்கமும் 03 ஆம் நாள் கவியரங்கமும் இடம்பெற்றதுடன் மாலை நேரங்களில் அரங்க ஆற்றுகைகளும் இடம்பெற்றது.முதல் நாள் ஆய்வரங்கம் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணனின் ஆய்வரங்கறிமுகத்துடனும் ஓய்வு நிலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதனின் தலைமையிலும் 02 ஆம் நாள் ஆய்வரங்கம்,கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரினா பிரான்ஸிஸ் தலைமையிலும் 03 ஆம் நாள் கவியரங்கம் கா.பாக்கியராஜாவின் அரங்கறிமுகத்துடனும் கவிஞர் யூ.எல்.எம்.அத்தீக் தலைமையிலும் இடம்பெற்றது

முதலிரு நாள் மாலை அமர்வுகளில் தமிழ் முஸ்லிம்களின்பாரம்பரிய கலையாற்றுகைகளும் 03 ஆம் நாள் ஏ.எல்.எம்.பழீல் அரங்கு, கல்வி.பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெற்றது.

மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்திடமிருந்து கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராச்சிங்கம், இலக்கிய விழா ஞாபகார்த்த மலரின் முதற் பிரதியினை இதன்போது பெற்றுக்கொண்டார்.

கலையிலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு பரிசும் சிறந்த தமிழ் நூல் தேர்வுக்கான பரிசும் வித்தகர், இளங்கலைஞர் கெளரவிப்பும் இதன்போது இடம்பெற்றது.

கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி,விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சூதீன், எம்.இராஜேஸ்வரன்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன்,கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன்,திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்,மாகாண முன்பள்ளி பணியக முன்னாள் தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

- பா.மோகனதாஸ் -