செங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் எழுதிய விளைச்சல் குறுங்காவிய நூல் அறிமுக விழா கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் 16.07.2017 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.
திருமதி நீலாவணன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார், பேராசிரியர்களான. திரு மா.செல்வராசா, பேராசிரியர் செ.யோகராசா மற்றும் றூபி வலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் பங்குபற்றினர்.
ஈழத்தின் புகழ்பூத்த கதை சொல்லியும் முத்தமிழ்க் கலைஞருமான கலாபூஷணம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு மௌன இறைவணக்கத்துடன் தொடர்ந்துது.
தொடர்ந்த நிகழ்வில் பாலமீன்மடு கவிஞர் இரா.கலைவேந்தன் வரவேற்புரையினை கவிநடையில் மிக அருமையாக நிகழ்த்தியிருந்தார்.
நுண்கலை ஆய்வுகூட ஸ்தாபகரும் நாடறிந்த எழுத்தாளரும் கலைஞருமான பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் தனது தலைமையுரையில் செங்கதிரோன் பற்றியும் விளைச்சல் குறுங்காவியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அறிமுக விழாவின் நூல்வெளியீடு, பட்டிமன்றப் பேச்சாளரும் நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான கதிரவன் த.இன்பராசா அவர்களினால் நிகழ்த்தப்பெற்றது. கதிரவன் தனதுரையில் செங்கதிரோனின் விளைச்சல் குறுங்காவியம் கிழக்குமாகாணத்தின் பாரம்பரியங்களை மீட்டுப் பார்க்கசெய்யும் ஒரு காவியமாகவும் இனிவரும் காலங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் காவியமாகவும் அது அமைந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
நூல் நோக்கு கிழக்குப் பல்கலைக் கழகமொழித்துறை விரிவுரையாளர் திரு. கோ.குகன் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. விளைச்சல் குறுங்காவியம் பற்றிய தனது பார்வையையும் அதன் கவித்துவம் பற்றியும் எளிமையான மொழிநடையில் தனக்கே உரிய பாணியில் மிக அருமையாக நிகழ்த்தியிருந்தார்.
அறிமுக விழாவின் முதற்பிரதியை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க பொருளாளர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டதைத் தெடர்ந்து சிறப்பிபுப் பிரதிகளை நூலாசிரியர் சபையோரின் இருக்கைகளுக்கே சென்று வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திருமதி.நீலாவணன் அவர்கள் தனது கணவன் இயற்றிய வேளாண்மைக் காவியம் அச்சேறிய விதம் பற்றியும் அது தற்போது செங்கதிரோக் அவர்களால் முற்றுப்பெற்றது பற்றியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அதிதி உரைகள் செங்கதிரோன் அவர்களின் ஏற்புரை என்பன இடம்பெற்றன.
முதுசொம் ஊடக அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் அரங்க நெறியாள்கையை முதுசொம் இணை இயக்குனர் சௌந்.லெனாட் லொறன்ஸோ வும் நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர்.ஜீ.எழில்வண்ணன் அவர்களும் மிகத் திறமையாக நிறைவேற்றியிருந்தனர்.