அமரர். கண. ஆறுமுகம் வரலாற்றுச் சுருக்கம்
-  காசுபதி நடராசா -

நினைவினில்..

1969 இல் நான் மட்டக் களப்பு மாவட்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்த காலம். பிரதேசங்கள் முழுவதும் சனசமூக நிலையங்கள் மீளுருவாக்கப்படவேண்டியிருந்தன. கன்னங்குடாவில் கலைமகள் சனசமூக நிலையம் தோற்றம் பெற்றது. வாலிபத் தோற்றத்தில் ஆறுமுகம் நிழலாடுகின்றார்.  அச் சனசமூக நிலையத்தினூடாக ஆலய அறப்பணிகளும் பாடசாலைக் கல்விப் பணிகளும் சமூக இலக்கியப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இளைஞன் ஆறுமுகம் நடு நாயகமாக விளங்கிச் செயற்பட்டமை நினைவுக்கு வருகின்றது.

ஊர்:
மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மருத நிலம் கன்னங்குடா. அதன் அழகும் அமைதியும் வளமும் சொல்லுந் தரமன்று. ஆரம்பகால மட்டக்களப்பின் பண்பாட்டு மூலக்கூறுகள் அப்படியே அழிவடையாது பாதுகாத்து வந்த பழம் பெரும் வரலாற்றுக் கிராமம் அது. செந்நெல்லும் முளிதயிரும் கூத்தும்  குரவையும் நிறைந்த   சீரிடம்.

குலம் : 
கன்னங்குடாவில் கணபதிப்பிள்ளை பெரியபிள்ளை தம்பதியின் மூத்த புதல்வனாக 1949.09.21 இல் பிறந்தவர்.  சிவஞானசேகரம், யதுகுலராஜா, மதிசேகரம், ஆகியோரைத் தம்பிமார்களாகவும், அன்னலெட்சுமி, சாம்பவிஅம்மா, கிருபையம்மா (அமரர்), தமயந்தி ஆகியோரைத் தங்கைமார்களாகவும் கொண்ட வளமான குலத்தவர்.
நற்பிட்டிமுனையில் புகழ்பூத்த சபாரெட்ணம் பூமணி தம்பதியின் இரண்டாவது புதல்வியான சாந்தினியை 1983 இல் திருமணம் செய்தவர். 'சாகின்யா" எனப் பெயர் கொண்ட செல்வக் குழந்தையின் தந்தை.

கல்வி : 

ஆறுமுகம்
கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றவர் அங்கிருந்து முதன் முதல் அரச புலமைப் பரீட்சையில் 1960 இல் சித்தியடைந்த பெருமை கொண்டவர். இதனால் இடைநிலை , உயர்கல்வியை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் பெற வாய்ப்புப் பெற்றார். 1966 இல் க.பொ.த. (சா/த) பரீட்சையில் முதன்மைச் சித்தியும் தொடர்ந்து 1968 இல் உயர்தரப் பரீட்சையிலும் சித்தியடைந்தவர், அக்காலங்களில் கொழும்பு விவேகானந்தா சபை இந்து சமயப் பரீட்சை முதலிய             வெளியிட நிகழ்வுகளில் கலந்து கொண்டு தன் ஆற்றலை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் முதலியவற்றை வெற்றி கொண்டவர். சிறந்த கலைஞராயிருந்து வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் காப்பிய விழா , நாட்டுக்கூத்து, முதலியவற்றில் ஈடுபாடு கொண்டு நடத்திப் புகழ் பெற்றவர்.

தொழில் :
ஆறுமுகம்
க.பொ.த.(உஃத) பரீட்சையில் சித்திபெற்ற உடனேயே மக்கள் வங்கிச் சேவையில் இணைந்து கொண்டவர் இதனால் 1969 தொடக்கம் தமது ஓய்வு பெறும் காலம் வரை அந்த வங்கிச் சேவையில் ஆரம்ப தரத்திலிருந்து முகாமையாளர் தரம் வரை பதவி உயர்வு பெற்று                               
மக்கள் வங்கி ஆறுமுகமாகவே            பெயரையும் பெற்றுக் கொண்டவர்.
கல்முனை, காத்தான்குடி, காரைதீவு, மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி கொழும்பு எனப் பல்வேறு இடங்களிலும் அவர் பணி செய்து உதவியவர்.
அழுத்தங்கள் மிகுந்த காலகட்டங்களில் அவர் உயிர்தப்பிச் சேவை செய்ததன் பலனாக அவர் பெற்றதையும் விட இழந்தவைகளையும் நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் அவரது உண்மைத்தன்யையால் மதிப்பு இழக்கப்படவில்லை.

எதிர்வு :
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இலங்கையில் அபிவிருத்தியடைந்த மாவட்டங்களாக மாற்ற வேண்டுமென்ற பேரவா அவரிடம் குடிகொண்டிருந்தது. இவர் கல்முனை மக்கள் வங்கியில் சேவையாற்றிய போது பிரபல சமூக சேவையாளர் திரு.த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து அக்காலத்தில் 'மட்டக்களப்பு  அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்" என்னும் பெயரில் ஒரு கை நூலை வெளியிட்டுப் புகழடைந்த சந்தர்ப்பத்தை இவரது மறைவுச் செய்தியை கேட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.கனகசபை அவர்கள் என்னிடம் கூறிவருத்தப்பட்டார். அது ஒரு வரலாற்று ஆவணம்.

சேவை : 
நான் மட்டக்களப்பு பிராந்திய உள்;ராட்சி துணை         ஆணையாளராகப் பதவி வகித்த காலத்தில் சில காலம் மட்டக்களப்பு மாவட்டக் குடும்பத்திட்டச் சங்கத்தலைவராகப் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வேளையில் 'எயிட்ஸ்" நோய்த் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காலம். ஆயினும் நண்பர் ஆறுமுகம் போன்ற சமூக சேவையாளர்கள் துணை கொண்டு கிராமங்களில் முதன் முதல் எயிட்ஸ் விழிப்பூட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அழுத்தங்கள் மிகுந்த அக்காலத்தில் இலங்கை குடும்பத்திட்டச் சங்கத்தின் கன்னங்குடா கிளைத்தலைவராக அமரர் அவர்கள் ஆற்றிய பணிகள் காலத்தால் மாறாதவைகளாகும்.
'அண்ணாந்து பார்த்துப் பறந்தாலும் பூமியில் கால்கள் இருக்க வேண்டும்" என்ற ஒரு கூற்று உள்ளது. அமரர் பரந்து பட்ட சிந்தனைகளுடன் நாடளாவிய ரீதியில் சேவைசெய்தாலும் தனது பிறந்த மண்ணான கன்னங்குடாவை மறக்கவில்லை. அதன் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தடம் பதித்தவராகக் காண     முடிகிறது. அவ்வூர்ப் பெருமக்களும் அவரைக் கனம் பண்ணத்தவறவில்லை. ஈச்சந்தீவு - கன்னங்குடா பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், பழைய மாணவர் சங்கம், இந்து சமய அபிவிருத்திச் சங்கம் முதலானவைகளின் தலைவராகவும் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார், வழிகாட்டினார். 
   அத்தோடு மிகவும் நெருக்கடியான உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்முனை மேற்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வவுணதீவுக்கிளையின் தலைவராக இவரின் சேவையை திரு.வசந்தராஜா அவர்கள் மெச்சிய நேரங்கள் பல...
அவர் ஒரு மாற்றுச் சிந்தனையாளராக இருந்து சமூக நீதியை நிலைநாட்டப் பாடுபட்ட பெருமகன். போராட்டக்காலங்களில் அவர் கத்தியின்மேல் நடைபயின்றவர் போல் செயற்பட்டு மக்களுக்கு உதவியதாக அறிய முடிகிறது. அவர் பட்ட துன்பங்கள் வேறு தனிக்கதை.
அவர் மரபு வழியிலும் தவறாது கால் பதித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியவர். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய அறங்காவலர் சபையின் போஷகராகவும் மற்றும் தாந்தாமலை முருகன் ஆலய பரிபாலன சபையின் போஷகராகவும் மட்டக்களப்பு இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவராகவும் மற்றும் பிரதேச ஆலயங்களின் வளர்ச்சியக்கு உதவிய சைவப் பெருமனாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
மட்டக்களப்பின் உயர் கல்விப் பணிக்கு அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொண்டாற்றியவர். அந்த வகையில் திரு மா.சதாசிவமும் இவரும் சேர்ந்து வித்திட்ட விபுலாநந்தா வெளிவாரி பட்டப்படிப்புகள் கல்லூரி குறிப்பிடத்தக்கது. சட்டத்தரணி ஸ்ரனி சிலஸரிக்கு இவரது துயரச் செய்தியை நான் அறிவித்தபோது அவர், 'ஐயோ நடா, சுவாமி ஜீவனானந்தாவைக் கொண்டு மட்டக்களப்பில் வெளிவாரிப் பட்டக்கல்வி நிறுவனத்தை இவர் தொடக்கிய அன்று நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இன்று அது செய்த சேவையை அனைவரும் அறிவர். ஆயினும் அதனை ஆரம்பித்த பெருமகன் இவர் என்பது சிலவேளை தெரியாதிருக்கலாம்" என்றார்.
மட்டக்களப்பு வெறுமையான கால கட்டம். 'நடா , நம்மட மௌனகுரு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நல்ல சேவை செய்வதை அறிய முடிகிறது. உன்னோடு அவர் நல்ல தொடர்புதானே. ஆளை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வரவைக்க வேணும்" என்று என்னிடம் புத்தி கூறினார். அதிர்ஷ்ட வசமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் உருவாகக் கருக்கட்டிய காலம் உடனடியாக கலாநிதி சி.மௌனகுருவுக்குத் தகவல் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டோம். தபால் போக்குவரத்து தடைப்பட்டிருந்த அந்நாளில் தனது விண்ணப்பத்தை               மௌனகுரு என்னிடம் அனுப்பியருந்தார். நான் உரியவர்களிடம் அதைச் சேர்ப்பித்து விட்டு அமரரிடம் செய்தியைக்                          கூறியபோது மகிழ்ந்துபோனார். கலாநிதி பேராசிரியராகி இங்கு அறப்பெரும்பணியாற்றிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
கிராமத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காக 'ஏடு" என்ற கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினோம். அமரர் எங்களுடன் துணைநின்று அரும்பாடுபட்டு உழைத்ததை நினைக்காமல் இருக்க முடியாது.
'விமோசனா" என்று ஒரு கலைவட்டத்தை பேராசிரியர் சி.மௌனகுரு தொடக்கியபோது ஆறுமுகம் பெரிதும் துணைநின்று உதவியவர். சிலகாலம் அது சிறந்த கலைப்படைப்புக்களை மாதந்தோறும் தந்து மகிழ்வித்துச் சென்றது.
'ஆரத்தி" மட்டக்களப்பின் சேவையாளர்களை வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்ற சிந்தனையை திரு.சி.மாமாங்கராசா உருவாக்கி தந்தார். பெரும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் அமரர் எங்களுடன் துணைநின்று நிகழ்வு வெற்றி பெறப் பெரிதும் உழைத்தவராகப் பார்க்கப்படுகின்றார்.
'விபுலம்" வெளியீட்டகம் ஒன்று இவரால் உருவாக்கப்பட்டபோது அதற்கு பேராசியரியர் மௌனகுரு வெல்லவூர்க்கோபால் மற்றும் சதாசிவம் முதலான பலரும் துணை நின்றனர். நாங்கள் வழக்கம் போல் எடுபிடி. தளராது அவ்வெளியீட்டகத்தை நடத்திப்பல நூல்களை வெளிக்கொணர்ந்து பாரட்டப்பட்டவர்.
'வயல்" சாருமதி யோகநாதனுடன் இணைந்து ஆரம்ப காலத்தில் 'வயல்" சஞ்சிகையை வெளியிட்ட ஆசிரியர் குழுவில் இவரும் அடக்கம் என்பதும் குறிப்பிடவேண்டியதே.
மட்டக்களப்பின் இலக்கிய அடையாளத்தை வெளிப்டுத்த காப்பிய விழாவென்று நடத்தவேண்டுமென்ற சிந்தனை எம்மிடம் பலகாலம் வேரூன்றியிருந்தது. செயற்பாடத் திருவருள் கூடவில்லை. திரு. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஒரு நாள் இவர் வீட்டில் கூடினார். நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டது. கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று கண்ணகி கலை இலக்கியக் கூடல் மிகமிகச் சிறப்பாக நடக்கின்றது. இவர் அதன் பொருளாளரானார்.
ஆறுமுகம் 
மக்கள் வங்கியின் நீண்டகால சேவையாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இதனால் போலும் மக்கள் வங்கியின் ஓய்வூதியர் சங்கத்தலைவராக அவர்களதும் அவர்களது குடும்பத்தினரதும் நலன்பேண நடவடிக்கைகளை முன்னெடுத்து உழைத்தவராகின்றார்.
          பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய வட்ட உருவாக்கத்தில் உடனிருந்து அங்கிருந்த மரபுக்கலைகளை பேணுவதில் ஆர்வம் காட்டியவராகப் பேசப்படுகின்றார்.
அரசியலில் அவர் தழிழ்தேசியம் சார்ந்த ஒருவராக எப்போதும் காணப்பட்டார். ஆயினும் இனநல்லிணக்கத்தில் பெரிதும் ஆர்வமுள்ளவராயிருந்தார். மட்டக்களப்பு பாராளுமன்ற மக்கள் மன்றத் தேர்தல்pலும் அவர் தன் இருப்பை வெளிப்படுத்த தவறவில்லை.
இரு தோற்றகதைகள்:-
  மட்டக்களப்பில் ஒரு நாளிதழ் வெளிவரவேணும் என்று நாங்கள் அரும்பாடுபட்டோம். அதற்காக ஐந்து பேர்கள் ஆளுக்குச் சிறிது பணமு; சேர்ந்து 'கிழக்கு ஓசை" என்று பெயரும் போட்டு ஆலாய்ப்பறந்து நிறைவேறாமலேயே போய்விட்ட குறை அவரிடம் இருந்தது கவலை தருகின்றது.
கச்சேரி நிருவாகம் முதல் பல்கலைக்கழகக்கல்வி என்றவாறாக மட்டக்களப்பின் அபிவிருத்திச் கூறுகள் பற்றி நாம் கலந்துரையாடுவோம். அவர் எப்போதும் என்னை ஊக்கம் தந்து ஆதரித்து நின்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்தில் இந்து நாகரிக பீடம் பற்றிய சிந்தனை அதனை உருவாக்கிய                யாரிடமும் இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. அப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாகவில்லை.                                 திருகோணமலையில் பல்கலைக்கழக வளாகம் இருக்கவில்லை. இன்று அம்பாறை, திருகோணமலைகளில் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றுள்ளது. இனிமேல் கிழக்குப்பல்ககலைக்கழகம் 'மட்டக்களப்பு கல்கலைக்கழகம்" என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றேன். பெரிதும் வரவேற்றுப் பராட்டினார். காலம் இதற்குப் பதில் கூறும்.

இல்லம் :
அவரது இல்லக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவரது துணைவி பாடசாலை சென்றாலும் மைத்துனி 'சாமினி" எப்போதும் மலர்ந்த முகத்துடன் வருவோரை வரவேற்பார். ஆலோசனை, உதவிகள், கொடுக்கல் வாங்கல்கள் என்று எத்தனையோ வகையினர் அங்கு வந்து செல்வதைக் கண்டிருக்கின்றேன்.
2014 இல் நண்பர் ஆசிரிய ஆசிரியர் தெ.மதுசூதனனுடன் கன்னங்குடா சென்று அங்கு அவரது தாயதி வீட்டில் அவரது     சகோதரி குடும்பத்துடன் மட்டக்களப்பு பாரம்பரிய புதிர் உண்ணல் நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை மகிழ்ச்சிப்படுத்திய செயல்கள் நிழலாடுகின்றது. மனது கனக்கிறது.

நினைவில் :
அவர் நோயுற்றகாலம். அவரது குடும்பத்தினர் மனஞ்சோராது அவருடன் கூடவிருந்து அரிய சேவை செய்து அவரை உற்சாகமூட்டினர். அவரும் தனது உடல் உபாதைகளை பெரிதும் வெளிக்காட்டாது தனது இயல்பு வாழ்க்கையையே இறுதிவரை வாழ்ந்து சிறந்தவர்.
இந்நேரத்தில் அவருக்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள், வைத்தியத்துறையினர், வங்கியாளர்கள் அவைவரும் எமது பாராட்டுக்குரியவர்களே. தன்னலம் பாராது அவரைக் குணப்படுத்திவிட பெரிதும் உழைத்ததையும் இவ்விடத்தில் பதியவேண்டியுள்ளது.

வானவில் :
ஆறுமுகம் வானவில்னின் வர்ணஜாலங்கள் போல் காட்சி தந்து மழைதந்து வளம் பெருக்கி மட்டக்களப்பின் மண்ணின் மைந்தனாய் என்னோடிருந்து இன்புற்ற நாட்களை நினைத்துப் பார்த்து நியதியின் நின்று ஆறுதலடைகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிறவாப்பேரின்பப் பெருவாழ்வு பெறவும் இறைவன் திருவருள் நிறைக. மனைவி மகள் மற்றும் உறவுகள் சிறப்புறுக.
ஓம் சாந்தி

என்றும் பசுமையான நினைவுகளுடன்
காசுபதி நடராசா 
42, 2ம் குறுக்கு வீதி
கல்லடி, வேலூர்
மட்டக்களப்பு
15-03-2015