பிளேன்ரீக்கு காசு வேணாம்


காலைப் பொழுதையும் இயற்கை வனப்பையும் எங்களையும் ஒன்று சேர்த்து இறுகக் கட்டிக் கொள்வதைத் தவிர வேறெந்த விஷேடித்த நோக்கங்களும் அந்தப் பயணத்திற்கு இருக்கவில்லை. 

கடிகாரக் கம்பிகள் ஒற்றைக் காலில் சரி நிலைக்குத்தாய் அடம்பிடித்துக் கொண்டிருந்தவேளை ஐந்தே சென்றிமீற்றர் நீளமான ஒரு சிறிய ஹோண் சத்தம் என்னை வீட்டைவிட்டு கமராவுடன் வெளியேற்றியது.
கேற்றின் முன் நின்றுகொண்டிருந்த நண்பன் லொறன்ஸோ வின் SUZUKI
GN 125  மோட்டார் வண்டியின் பின் இருக்கையை என்னால் நிரப்பிக் கொண்டேன். அப்போது கூட எமது பயணத்தின் முடிவிடம் தீர்மானிக்கப்படவில்லை. ஏதோ ஒரு வகையில் பயணத்தின் வழிகாட்டியாக அந்த மோட்டார் வண்டியின் முன் சக்கரங்களே மணற்பிட்டிச் சந்திவரை தொழிற்பட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும். அதன் பின்னர் அந்தப் பணி எங்கள் உணர்வுகளுக்கும் சிந்தனைக்கும் கைமாறியிருந்தது.

மணற்பிட்டிச் சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் மேற்காக முளைத்திருந்த பெயரிடப்படாத கிரவல் வீதியொன்று எங்களை அன்புடன் வரவேற்றது. அப்பொழுது எங்களுக்குத் தெரிந்த நிறங்கள் மூன்றே மூன்றுதான். 

ஒன்று நீலம்;. அது எமது பார்வைக்கோணத்தின் மேற்பகுதியில் விரவிக்கிடந்தது. சாதாரண மனிதனுக்கு அதுதான் எல்லை. ஆனால் விஞ்ஞானிகளுக்கு அப்படி ஒரு பொருளே இல்லை.

இரண்டாவது பச்சை. அதுவும் எமது கண்களால் பார்க்கக்கூடிய எல்லை எதுவோ அதுவரை அதேநிறம். அதைத் தாண்டியும் அதேநிறம் தான். இந்தக் கணத்தில் தான் “அணுவுக்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்” என்பதன் அர்த்தத்தை என் ஆத்மா உணர்ந்திருக்க வேண்டும்.  அப்படியொரு மகிழ்ச்சி. 

எனது ஒளிப்படங்கள் நன்றாயிருக்க வேண்டுமே! என்ற அக்கறையில் நேற்று இரவு புற்களையும் பற்றைகளையும் அந்த மழை கழுவியே வைத்திருந்தது. எனக்கு பச்சைகளை பச்சைகளாய்க் காட்ட மிகவும் உதவியாய் இருந்தது. இருந்தும் வேளாண்மையின் வர்ணத்தைத் திருடும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தது பனித்துளி. அப்படி என்ன கோபம். சூரியக் கரங்களுக்கு! பனித்துளிகளைத் துரத்திவிட...

மூன்றாம் வர்ணம் எமது மோட்டார் வண்டி நகர்வதற்காகவே வரையப்பட்டிருந்த செந்நிறக்கோடு. ஆனாலும் மணற் கம்பளங்களால் அது இடையிடையே மறைக்கப்பட்டே இருந்தது.

       நீண்டு கொண்டிருந்த கிறவல் வீதி, முடிவிலி தூரத்திற்கப்பாலும் தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும் பச்சை வயல். இவற்றுக்கும் மேலாக மார்கழியை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் ஜில் ஜில் காற்று. அகலக் கை விரித்து அவ்வளவையும் அளந்துவிடலாம் போலிருந்தது.

இன்னும் அந்த வீதிக்குச் சொந்தமான அந்த ஊர் எங்களுக்குத் தெரியவே இல்லை.  
“கொஞ்சம் பொறுங்க, அதோ! அந்தா யாரோ வாறாங்க!  கேட்டுப்பாப்பம்” திராவிடம் மறக்காத நிறம், காய்ச்சி முறுக்கேறிய மேனி, தமிழனின் அடையாளச்சின்னம்...    
ஓ... சூழல் தமிழனுக்கு எத்தனை அடையாளங்களை விதைத்திருக்கிறது அவன் உடலமைப்பில்.
“ ஐயா இந்த டோட் எங்க போகுது” 
நகர்ந்துகொண்டிருந்த சைக்கிள் ஓய்வெடுத்தது. இரண்டு சக்கரங்களுக்குத் துணையாக தமது ஒரு காலை நிலத்தில் ஊன்றி, வார்த்தைகளையும் தனது நேரத்தின் சில வினாடிகளையும் மகிழ்வுடன் எங்களுக்காய் ஒதுக்கினார். நகர்ப்புறங்களில் வழி கேட்டால் நகர்ந்துகொண்டே பதில் சொல்லும் நபர்களிடம் இரண்டாம் கேள்விகேட்க, ஒன்று நமக்கு மனம் இருக்காது. மற்றையது அவர்கள் இருக்கமாட்டார்கள் என்பது அந்தச் சிறுநொடியில் எனக்குள் சொல்லத்தெரியாத ஓர் இடத்தில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது. 

    ஒருவாறாக அந்தவீதி பன்சேனை என்ற ஊருக்குப் போகிறதென்பதை அறிந்துகொண்டோம். (வீதி போகல்ல அந்த வீதியால் போனால் பன்சேனைக்குப் போகலாம்) 
ஐயோ! அந்த ஐயாவின் பெயரைக் கேட்க மறந்துவிட்டேனே! ஆனாலும் அவரின் அனுமதியுடன் எடுத்த ஒளிப்படம் ஒன்று இருக்கிறது அது போதும்.

பரந்த வயல். அதன் நடுவே கொஞ்சமாய் மணற்தரை. அதிலே முளைத்திருக்கும் சிறிய களிமண் வீடு. சுற்றிவர காவலர்களாய் பத்துப்பன்னிரெண்டு தென்னை மரங்கள். வாசலில் காய்த்துக்கிடக்கும் ஒரு மா. வளவெல்லாம் அங்கிங்கொன்றாயும் சிலவேளை எங்குமாயும் செடிகொடிகள். ஒரு நீர்குடம். பூமியில் ஈர்க்குத்தடியால் ரேகைகள் வரைந்து கொண்டிருக்கும் அந்தப் பெண். இப்படி ஒர் ஓவியம் உயிர்பெற்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அந்தக்கிராமத்தின் அத்தனை வீடுகளும். அங்கிருக்கும் ஒரு கல்வீடு அத்தனை குடிசைகளுக்கும் கண்படாமல் வைத்த திருஷ்டிப்பொட்டாய் தோன்றியது எனக்கு.
இப்படி ஒரு சுழல் பாரதிக்கு வாய்த்திருந்தால்...

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு 
தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் - அந்தக் 
காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்குக் 
கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு 
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் - எந்தன் 
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும் - எங்கள் 
கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும் - அந்தக் 
காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும் - எந்தன் 
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்

 என்று பாடிய மஹாகவி எமக்குக் கிடைத்திருக்கமாட்டான். இவை அவனுக்குக் கிடைக்காததனாலன்றோ அவன் இதை பராசக்தியிடம் வேண்டுகின்றான். 

 காபண்களாலும் அழுக்குகளாலும் கலப்படம் இல்லாத காற்றை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கிராமம் ஒரு கனவு. ஒரு சொர்க்கம். இதற்குமேல் தமிழில் ஒரு பொருத்தமான வார்த்தை இருந்தால் நிச்சயமாக அந்த வார்த்தையை “சொர்க்கம்” என்ற சொல்லுக்குப்பதிலாகப் பிரதியிட்டுக் கொள்ளுங்கள்!

இதற்குமேலும் அந்தக் கிராமத்தின் அழகை நான் கூறவேண்டிய அவசியம் இருக்காது.

காலம்           : காலை ஆறு முப்பது
காலநிலை : கொஞ்சம் பனி, கொஞ்சம் குளிர்
களம்            : பன்சேனைக்குப் போகும் பாதை
பாத்திரங்கள் : நானும் நண்பன் லொறன்ஸோவும் SUZUKI GN 125  மோட்டார் 
                                  வண்டியும்

இருபுறமும் வயல். வயல்நடுவே நீண்ட இடைவெளிகளுக்கப்பால் ஓரிரு கிணறுகள். கிணற்றடியைச் சுற்றியும் கிணற்றடியை நோக்கிய பயணத்தில் கிணற்றிலிருந்து வேறுபட்ட தூரத்திலும் குளிப்பதற்காக பெண்களின் படையெடுப்புகள். அந்த அழகிய கிராமத்துக்கு இன்னும் அழகு சேர்த்தது. அதைக் காமம் கலக்காது காட்சிப்படுத்த வேண்டும் என்;ற எனது ஆசையை சமூகம் மீதிருந்த பயம் மட்டுமே விரட்டிக்கொண்டிருந்தது. இறுதில் அந்தப் பயத்தின் பக்கமே வெற்றியும் நிலைபெற்றது. 

   இருந்தும் அந்தக் காட்சிக்குக் காரணமான காரணியை நோக்கியே எனது மனம் பயணித்துக்கொண்டிருந்தது. அதற்கான விடை கிடைக்காமலேயே எமது பயணம் தொடர்ந்தது.

இதுவரை அடுத்த இலக்கு ஒன்று இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த எமது பயணம் முடிவுக்குவர் இலக்கை நோக்கிய பயணம் ஆரம்பமாகியது. 
“ கொஞ்சம் நிப்பாட்டுங்க! அந்த அம்மாட்டக் கேட்டுப்பாப்பம்!”
“அம்மா! இங்க சாப்பிட எவடத்தில் கட இருக்கு?”
“நேராப் போனீங்கெண்டா... பள்ளிக்கு முன்னுக்கு ஒரு கட வரும்.”
‘சரி வாறம்’ என்ற தோரணையில் அமைந்த புன்னகை எனக்கும் அந்த அம்மாவுக்கும் இடையில் பரவி மனங்கள் நன்றியைப் பரிமாறிக்கொண்டன. 
நிச்சயமாக எமது அடுத்த இலக்கு வயிற்றைத் திருப்திப் படுத்துவதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. 

   

 அந்தப் பள்ளிக்கூடத்திற்று முன்னால் இருந்த கடைக்கு எங்களைக்   கொண்டுவந்து சேர்த்திருந்தது அந்த அம்மாவின் வழிகாட்டல். இருந்தும் ஏதாவது கிராமத்து உணவை நோக்கியே எங்கள் இருவரின் மனங்களும் ஒன்றித்திருந்தன. அதனால் அந்தக் கடைக்கும் விடைகொடுக்க வேண்டியதாயிற்று. 

        இறுதியாய் கூரை மட்டத்தின் அரைப்பங்கிற்கு மண்சாத்தியிருந்த ஒரு சிறிய கடை எங்கள் காலை உணவுக்காய்க் காத்துக்கிடந்தது. இதுவரை அந்தக் கிராமத்தின் பௌதீக அழகை மட்டுமே இரசித்துக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த சமூகத்தின் உள் அழகையும் கொஞ்சமாய் திறந்து காட்டியது அந்தக் கடையில் நாங்கள் காலை உணவுக்காய் செலவிட்ட சில நிமிடத்துளிகள்.

    மங்கலகரமாய்த் தம்மை அலங்கரித்துக்கொண்ட பெண்கள், கண்ணியமான ஆடை, பசுக்கன்றுடன் விளையாடும் மூன்று வயதுச் சிறுவன் என இன்னும் பல...
அது ஒரு சிறிய கடைதான் இருந்தும் காலை உணவுதொடக்கம் “கன்டோஸ் பற்றரி’’ வரை எல்லாமே அங்கிருந்ததன. உங்களைப்போலத்தான் எனக்கும் “கன்டோஸ் பற்றரி” என்று அந்தப் பெண் கேட்டது “ பென்டோஜ் பற்றரி” யைத்தான் எனப் புரிந்துகொண்ட போது எமக்குள் வந்த சிரிப்பை அந்தச் சமூகத்தின் கல்வியறிவு பற்றிய அவலம் சிரிக்கவிடாமல் உதடுகளை இறுகக் கட்டிப் போட்டிருந்தது.
    எழுபது வயது நிறைந்த அந்த ஐயாவிடம்...
“என்னய்யா கட்டி?’’
“அது சின்ன வயசில இருந்தே அப்படித்தான்” 
வயிற்றுக்கும் நெஞ்சிற்கும் இடையில்  முன்னிற்கும் கட்டி கூறியது ‘அவர் இன்னும் வைத்தியசாலைப் பக்கமே செல்லவில்லை’ என்பதை. (சென்றிருந்தால் அந்தக் கட்டியை ஒரு வழி பண்ணியிருப்பார்கள்)

     அந்தக் கடையில் கிழங்குப் பொரியலும் தூளும் இருந்தது தெரிந்தும் வேற என்னையா இருக்கு என்பதை கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ பற்றீசும் வடையும் போடுற... இண்டைக்கு போடல்ல” 
என்ற ஐயா, அதே நொடியில் மூன்று பிளாஸ்டிக் கதிரைகளை எங்களுக்காய்க் கொண்டுவந்தார். ஒன்று தண்ணீர்ச் செம்பு வைக்க.

    நாங்கள் ஐம்பது ரூபாவுக்கு கிழங்கு கேட்டோம் ஆனால் ஐம்பது ஐம்பது ரூபாவுக்கான கிழங்குகள் இரு பாத்திரங்களில் எம் கரங்களை நிரப்பிக் கொண்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வரும்போது கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சந்தேகங்களைப் பற்றி ஐயாவிடம் வினாவினோம்.
“ஐயா! இங்க தண்ணி எடுக்கிறத்தில ஏதும் பிரச்சனயா? ”
“மாரி காலத்தில அவ்வளவு பிரச்சன இல்ல மெனே. கோட காலத்தில ஒரெடத்திலயும் தண்ணி இருக்காது. தண்;ணி, அங்க (கையை ஏதோ ஒரு திசையில் காட்டுகிறார்) ஒரே ஒரு கிணத்தில மட்டுந்தான் எடுக்கலாம். அதுவும் கொஞ்சங்கொஞ்சந்தான் ஊறும். அத எடுக்கிறத்துக்கு விடியச்சாமம் ரெண்டு மணிக்கே போய் காத்துக் கிடக்கோணும்;. சில ஆக்கள் அண்டைக்கு ராவே அங்க போய் தங்கி நிண்டும் எடுத்து வருவாங்க” 
அந்த வார்த்தைகளில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பும் கலந்தே இருந்ததை என்னால் உணர முடிந்தது. அவர் எங்களை ஏதோ அதிகாரிகள் என்று எண்ணியிருந்திருக்க வேண்டும்.

    எமது பிள்ளைகளும் சரி நாமும் சரி எவ்வளவு நீரை விரயமாக்குகின்றோம் என்பதை அறிய எமக்கு விஞ்ஞானக் கருவிகளோ புதிய தொழிநுட்பங்களோ தேவையில்லை சாதாரணமாக ஒருமணித்தியாலப் பயணமே போதும் நாம் அதைத் தெரிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும். 

      இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் நீர் காணப்படுகின்றது. அதிலும் குடிநீர் சொல்லவே தேவையில்லை. நீர்தானே எமது கருவறை. நீரில்தானே முதல் உயிரி தோற்றம் பெற்றது. ஆனால் இன்றைய நிலையில் நீர் இன்றித்தான் எமது கடைசி உயிரி அழிவடையும் போலிருக்கிறதே! அப்படி நீர் தொடர்பான ஆயிரக்கணக்கான எண்ண அலைகள் என்ணுட்; பிரவாகித்தன.

  அந்த மக்களுக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்தாலோ, ஆன்மிகப் போதனைகள் செய்தாலோ அல்லது கல்வியைத் தானமாக வழங்கினாலோ நிச்சயமாக ஒரு பெரிய விடயமாக இருக்காது. தண்ணீரைத் தவிர வேறு எந்த விடயங்களும் அவர்களுக்குப் பெறுமதியற்றதாகவே தெரியும். எல்லாமே தண்ணீருக்குப் பிறகுதான்.

     சாப்பிட்டு முடித்த பின் எங்களுக்கு முன் மூன்றாம் பிளாஸ்டிக் கதிரையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ச் செம்பை எடுத்து ஒரு மிடர் குடித்துவிட்டு ஆயிரம் யோசனைகளுக்குப் பிறகு அந்தத் தண்ணீரில் கையைக் கழுவுவதற்கு முடியாமல் என் மனம் தவித்த தவிப்பை அவ்வளவு இலகுவில் வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது எனக்கு.

   அந்த மக்கள் படும் இத்தனை துன்பங்களுக்கும் பின்னால் சில கசப்பான அரசில் பின்னணிகளும் இல்லாமலில்லை. மக்கள் நன்மைக்காகச்  செயற்பட்ட விடுதலை அமைப்புக் கூட இந்த விடயத்தில் “வேலி பயிரை மேய்ந்த கதைக்குள்” கட்டுண்டு கிடந்ததை மனம் ஏற்றுக்கொள்ளமறுத்தாலும் புத்தி திட்டித்தீர்த்து பெருமூச்சு விடுகிறது.

விடைபெறும் நேரம்...
காசுகொடுப்பதற்காய் தயாராகிக் கொண்டிருந்த அந்த நிமிடங்கள்...
இந்தக் கட்டுரையின் கரு உருவாகிய அந்தப்பொழுது...
“ எவ்வளவு...
“ ஐம்பது ரூபா...
நிச்சயமாக கணக்கில் ஏதோ தவறு விட்டுச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நாங்கள்... “இரண்டு பிளேன்ரீயும்” என மீண்டும் ஞாபகப்படுத்திளோம்.
ஐயாவிடமிருந்து வந்த “பிளேன்ரீக்குக் காசு வேணா(ம்)”  என்ற வார்த்தை எம்மை மௌனியாக்கியது. குடிநீர் எடுக்க சொல்லொணாக் கஸ்டப்படும் ஒரு கிராமத்திலிருந்து இப்படியொரு வார்த்தை...
ச்சான்ஷே இல்ல....




























 எழுத்து : சபா.மதன்
படங்கள்      : என்னுடன் சௌந்.லெனாட் லொறன்ஸோ