"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப வாழ்வியலை வடிவமைத்தவர்கள் தமிழர்கள். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்றைய உயிர்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகவே பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மனிதகுல வளர்ச்சியில் கொண்டாடிய முதல் பண்டிகையாகத் தைப்பொங்கல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கைக்கேற்ப தமிழர்கள் பொங்கல் விழாவை நான்கு நாட்களாக கொண்டாடுகின்றனர்.
முதல் நாள்- போகிப்பண்டிகை
'பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாகக் கருதி ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று இது கொண்டாடப்படுகின்றது. அதாவது பழையவற்றையும், பயனற்றவற்றையும், விட்டெறியும் நாளாகக் கருதப்படுகின்றது. போகியன்று வீட்டின் கூரையின் மீது 'பூலாம்பூ' செருகப்படும். அன்றைய தினம் வீட்டில் தேங்கியிருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்;ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே இதன் தத்துவம் ஆகும்.
இரண்டாம் நாள்- தைப்பொங்கல்
சூரியதேவன் தனுராசியில் இருந்து மகரராசிக்கு நுழையும் தை முதலாம் திகதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் இது 'மகரசங்கராந்தி' எனவும் அழைக்கப்படுகின்றது.
பொங்கல் அன்று அதிகாலையில் நீராடி வீட்டு முற்றத்தின் குறித்த இடத்தினைச் சாணத்தினால் மெழுகிக் கொள்வர். எறும்பு முதலிய உயிரினங்களுக்கு உணவளிக்கும் நோக்கில் வீட்டு முற்றத்தில் அரிசிமாவினால் கோலமிட்டு அதன் நடுவில் பானை வைப்பர். மண்ணாலான புதுப்பானையில் அறுவடையில் கிடைத்த புத்தரிசியை முற்றத்தில் வைத்து பொங்கவைப்பர். புதிய பானைக்கு, கிருமிகளை அழிக்கும் சக்தியை கொண்ட புதிய மஞ்சளை காப்பாக அணிவர். வயலில் இருந்து அறுவடையாகக் கிடைக்கப்பெற்ற புதிய கரும்பு, புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.
மேலும், பொங்கல் நடைபெறும் இடம் அலங்கரிக்கப்படும். வாழை, மாவிலை ஆகியவற்றைக்கொண்டு தோரணம் அமைக்கப்படும். அதாவது வாழையடிவாழையாக எமது சந்ததி தழைக்க வேண்டும் என்பதே வாழைமரம் கட்டப்படுவதன் நோக்கமாகும். அத்தோடு மாவிலைகளைக்கொண்டு அலங்கரிப்பது, மக்கள் அதிகமாகக்கூடும்போது அங்கு உருவாகும் நச்சுவாயுக்களை உறிஞ்சும் ஆற்றல் உண்டென்பதேயாகும்.
அடுத்து வீட்டு முற்றத்தில் கோலமிடப்பட்டு தலைவாழையில் பூரணகும்பம் வைத்து (மனித உடற்கூறுகளின் குறியீடாக பூரணகும்பம் வைக்கப்படுகிறது) விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிட தொடங்குவர். வினைகளை அறுக்கும் விநாயகனின் நினைவாக சாணம் அல்லது மஞ்சளில் அறுகம்புல் வைத்துப் பிள்ளையார் பிடித்து வைப்பர்.
பால் பொங்கிவரும் வேளையில் குடும்பத்தலைவன், தலைவி ஆகியோர் தம்மக்களுடன் கூடிநின்று 'பொங்கலோ பொங்கல் எனக் கூவி வெடிவெடிக்க, அரிசியை இரு கைகளினாலும் அள்ளி பானையில் இடுவர். அதனை கதிரவனுக்கு படைத்த பின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்னே தாம் நுகர்வர். இது தமிழரின் பண்பாடாகத் தொன்று தொட்டு உள்ளது.
இவ்வாறு சூரியனுக்குப் பொங்கல் வைப்பது, ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியனின் அருட்பார்வையை முழுமையாக பெற பொங்கல் பொங்கி வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்வுடன் வாழலாம் என்பது நம்பிக்கை. மழை, பனி, வெப்பம் மற்றும் அனைத்து பருவப்பெயர்ச்சிகளும் சூரிய பகவானின் அருளினாலேயே நடைnறுகின்றன, என்கின்றது சாஸ்திரங்கள். இதனை இன்றைய அறிவியலும் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே நமது பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் நோக்கில், உயர்ந்தகுணம் கொண்ட உழவர்கள் பானையிலே சூரியனுக்குப் பொங்கி பகவானை வழிபாடு செய்கின்றனர். இங்கு சூரிய பகவானுக்கு உகந்த 'காயத்திரி' மந்திரம் உச்சாடனம் செய்யப்படுவது சிறப்பு. தொடர்ந்தும் பகவானின் கருணைப்பார்வை பெற்று இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் சிறக்க வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
மூன்றாம் நாள்- மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தழிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இது பட்டிப்பொங்கல் அல்லது கன்றுப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகின்றது. மக்களின் வாழ்வில் ஒன்றிய ஆநிரைகளுக்கு நன்றி
கூறுவதாக இந்நாள் உள்ளது. குறிப்பாக பசுவில் எல்லாத் தேவர்களும் இருப்பதால்
பசுக்களை வழிபடும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. இதன் காரணமாகவே இந்து சமயம் பசுவதையை மறுக்கின்றனர்.
விழா நாளன்று ஆநிரைகளின் தொழுவத்தினைச் சுத்தம்செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். காளை மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்புகளில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள். திருநீறுபூசி, குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங்கயிறு (நாணயக்கயிறு) தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
மேலும், இவ் ஆநிரைகளுக்கு உணவாக பூசணிக்குடு;பத்தைச் சேர்ந்த காய்கறிகளை அதிகம் கொடுப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், இவற்றில் புரதச்சத்து, விற்றமின் யு என்பவை அதிகமாக உள்ளமையேயாகும். ஆநிரைகளின் இனப்பெருக்க வளத்தினை அதிகரிக்கும் சக்தி இப்பூசனிக்குடும்ப காய்கறிகளுக்கு உள்ளதால், விவசாயிகள் ஆநிரைகளுக்கு இவற்றை உணவாக கொடுப்பதன் மூலம் தமது பட்டியைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
மேலும், இங்கு உழவுக் கருவிகளைச் சுத்தம்செய்து சந்தனம், குங்குமம் வைப்பர் விவசாயத்தில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் இவ்வாறே செய்வர். சுளகுகளில் (முழவு) விவசாய நிலங்களில் விளைந்த பயிர், விளைச்சல்களை வைத்தும் தேங்காய், பூக்கள், பழங்கள் (மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் முக்கியம் பெறும்) மற்றும் நாட்டுச்சக்கரை என்பவற்றையும் பூசைக்காக எடுத்துவைப்பர். தொழுவத்திலே பொங்கல் பொங்கி கற்பூரத்தீபாரதனை காட்டுவர். இதன் பின் பசு, காளை, எருமை அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழங்களை ஊட்டுவர்.
மாட்டுப் பொங்கல் அன்று கன்னிப்பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சளை எடுத்து தினமும் பூசிவந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினங்களுக்கு நன்றி கூறும் நாளே இத்திருநாளாகும்;. பொங்கலிட்ட பிறகு கால்நடைகள் பொங்கலுண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பது மரபாகும்.
'பொங்கலோ பொங்கல் மாட்டுப்பொங்கல்
பட்டி பெருக, பாற்;பானை பொங்க
நோவும், பிணியும் தெருவோடு போக'
என்று கூறி அவ்எச்சில் தண்ணீரைத் தொழுவத்தில் தெளிப்பர்.
மேலும், இக்காலத்திலேயே தமிழரின் வீர விளையாட்டான காளையையடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும். இதன் சிறப்பை இன்றும் தமிழ்நாட்டில் காணலாம்.
நான்காம் நாள் - காணும்பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழாவாகும். காணும் பொங்கலை கன்னிப்பொங்கல் அல்லது காணும் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசிபெறுதல் என்பன இதில் அடங்கும்.
இங்கு எமது பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கபடி, பல்லாங்குழியாட்டம், உறியடித்தல், போர்த்தேங்காயடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீரசாகச விளையாட்டுக்களோடு பட்டிமன்றம் போன்ற விவாத மேடைகளும் நடைபெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல் பானை வைக்கும்போது புதுமஞ்சள் கொத்தினைக்கட்டுவர், பின் அதனையெடுத்து முதிய தீர்க்க சுமங்கலிப்பெண்கள் ஐவர் கையில் கொடுத்து ஆசிபெற்று அதனை கல்லில் உரைத்து பாதத்திலும், முகத்திலும் கன்னிப்பெண்கள் பூசிக்கொள்வர். இவ்வாறு பூசினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார், உறவினர்களைச் சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப்பண்டங்களையும் (தமிழர்களின் பாரம்பரிய உணவுகள்) பகிர்ந்து கொள்வர்;. இது இந்தியாவிலேயே அதிகம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு தைப்பொங்கல் விழாவானது மதத்தைக் தாண்டி எம்மினத்தின் அடையாளத்தையும் எமது கலை, கலாசார பண்பாட்டு அம்சங்களையும் வெளிப்படுத்தும் ஒரு தேசிய விழாவாக உள்ளது. இதனால் எமது தாய்த் திருநாட்டில் ஒரு தேசியவிழாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவினைக் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தமை நாம் பெற்ற பாக்கியமாகும்;.
திரு.க.காண்டீபன்
(ஆசிரியர், பயாகலை இந்துக் கல்லூரி)