சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா- ஓர் கண்ணோட்டம்

  சமூக நல்லுறவுக்கான கலைப் பண்பாட்டுத் திருவிழா 2016 ஒக்டோபர் மாதம் 27 தொடக்கம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கனகரெத்தினம் விளையாட்டரங்கு, விபுலானந்தா மத்திய கல்லூரி வளாகம், சண்முகா மகாவித்தியாலயம், விபுலானந்தர் மணிமண்டபம், மாளிகைக்காடு பள்ளிவாசல், மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் போன்றவற்றை களமாகக் கொண்டு நடைபெற்றது.

      தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் ஒத்துழைப்பு மற்றும் யூத் கெயார், யூத் கிரியெற், நம்பிக்கையின் சிறகசைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் இவ்வாண்டு கலைகளின் கலாசாரத் திருவிழாவினை சுவாமி விபுலானந்தர் அவதரித்த பழம் பதியான காரைதீவை மையமாகக் கொண்டு நடாத்தியது.
       
இவ் ஆரம்ப நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக பிரதம அதிதியாக மனோ கணேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர், கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள், சமூக நலன்விரும்பிகள் உட்பட பலர் இதன்போது கலந்து சிறப்பித்தனர்.
           
      பண்பாட்டு பவனியில் மாட்டு வண்டிகள், தழிழர்களின் பாரம்பரிய இசை வாத்தியக் கருவிகளின் இன்னிய அணி, பறையிசை, சிங்களவர்களின் கண்டிய நடனம், வெஸ் நடனம், இஸ்லாமிய இசை மரபான பக்கீர்பைத் என்பன தொடராக அமைந்து அதிதிகளை மங்களகரமாக வரவேற்றன.
    
அதனை அடுத்து கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரியக் கலைக்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக கட்புலத் துறை மாணவர்களின் ஓவியக் காட்சிக் கூடம் விபுலானந்தர் மணிமண்டபத்திலும்  திறந்து வைக்கப்பட்டது.
     
மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தினதும் (CPA) விபவி நுண்கலைக் கழகத்தினதும் ஒவியக்காட்சிக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது. குறிப்பாக சந்திரகுப்த தேனுவரவினதும் பவானி பென்சேகாவினதும் ஒவியங்கள், “முழுமையாக மனித உரிமை மீறல்களின் போது உண்மைக்கும்,பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்திற்குமான உரிமைக்கான குரலாகவும்,கடந்த காலத்தை அங்கீகரிப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் உண்மையையும் நீதியையும் இழப்பீட்டினையும் மீள நிகழாமையையும் வலியுறுத்துவதாகவுள்ளது.
   
கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் களுவன்கேணி பிரதேச மக்களின் வேடுவர் கிராம காட்சிப்படுத்தலும் பாரம்பரிய திருமண நடைமுறைகளும், முஸ்லிம் திருமண நடைமுறைகளும் துணி அலங்காரம், மருதாணி போடுதல் நடைமுறைகளும், சேருவில மக்களின் பாரம்பரிய உணவுவகைகளும், கைவினைப்பொருட்களும், மட்டக்களப்பு பிரதேசத்தினரின் கைத்தறி ஆடைகள், பறங்கியர் சமூக உணவுவகைகள், கன்னங்குடா சமூகத்தினரின் தோரணமும் களரியும், கூத்து உடைகள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இங்குள்ள அனைத்து காட்சிப்படுத்தல்களும் அறியப்படாத பெரும்பாலான மக்களால் நுகரப்படாத ஆனால் நுகரப்பட வேண்டிய வாழ்வியல் தேவைப்பாடுகளையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பிரதிபலிப்பதாய் இருந்தது.
      
 முதலாம் நாள் நிகழ்வின் மாலை நேர அமர்வின்போது பல்லினக் கலைகளும் பல் பண்பாடுகளுக்கிடையிலான ஊடாட்டங்களும், பிராந்திய சுய தொழில்களின் இருப்பில் பாரம்பரியக் கலைகள், வேடுவர், பறங்கியர், காப்பிரியர், தெலுங்கர், அருந்ததியர் போன்றோரின் 'கலைச்செயற்பாடுகளும் சமூக அங்கீகாரமும"; போன்ற தலைப்பினை மையப்படுத்திய கலந்துரையாடல் கருத்தமர்வு காத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் அமைந்திருந்தது. அதனையடுத்து கிண்ணியா முஸ்லிம்களின் பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களான சீனடி சிலம்படி, வாள்வீச்சு, தீப்பந்த வீச்சு என்பனவும் சிங்களவர்களின் பாரம்பரியக் கலையான வண்ணமே நடனமும்,தெலுங்கர்களான ஸ்ரீ வள்ளிபுர கலைஞர்களின் தப்பு இசை மரபும் சூரியா பெண்கள் நிறுவனத்தினரின் ஒளியை நோக்கி என்ற வீதி நாடகமும் A Man Much Needed  என்ற சிங்கள வீதி நாடகமும் பார்ப்போரை வெகுவாக ஈர்த்திருந்தது.

   கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் தாள வாத்தியக் கச்சேரி, போர்த்துக்கீச கபறிஞ்சா நடனம், இறக்காமம் பிரதேச முஸ்லிம்களின் பொல்லடிக் கலை என்பனவும் சண்முகா மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட வட்டக்களரியில் தமிழர்களின் பாரம்பரியக் கலையான வசந்தன் கூத்தும்,நல்லதங்காள் வடமோடிக்கூத்து என்பனவும் ஆடப்பட்டது. 

     சமூக நல்லுறவுக்கும் வலுப்படுத்தலுக்குமான கலை பண்பாட்டுத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வானது நாட்டுப்புற மரபிசைப் பாடல்கள், விவசாய நடனம் என்பனவற்றைத் தொடர்ந்து பாரம்பரியக் கலைகளுக்கான நிதி உதவித் திட்டங்கள்,தொடர்பூடகங்களும் பாரம்பரியக் கலைகளும், இன்றைய கல்வி முறைகளும் பாரம்பரியக் கலைகளும் எனும் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் அமர்வு விபுலானந்தா மத்திய கல்லூரியின் வௌ்வேறு மண்டபங்களில் வெகு ஆழமாகவும் விரிவாகவும் காத்திரமாகவும் ஆராயப்பட்டது. விபுலானந்தா மத்திய கல்லூரியில் கருத்தமர்வுகள் நடைபெற இதே நேர வேளையில் சண்முகா மகாவித்தியாலயத்தில் தி.தர்மலிங்கம், க.மோகனதாஸசன் போன்ற நாடக விரிவுரையாளர்கனால் நாடகப் பயிற்சிப் பட்டறையும், சர்மிளா ரஞ்சித்குமார், திருமதி.கிறிஸ்டினா போன்ற நடன விரிவுரையாளர்களால் நடன பயிற்சிப் பட்டறையும், பேரா வி.சதானந்தம் அவர்களால் இசைப் பயிற்சிப் பட்டறையும், சசிக்குமார் அவர்களால் கட்புலப் பயிற்சிப் பட்டறை போன்ற பயிற்சிப் பட்டறைகள் காரைதீவுப் பிராந்திய பாடசாலை மாணக்கருக்கு நடாத்தப்பட்டது. 

      சேருவில கண்டிய நடனக் கலைஞர்களின் நடன ஆற்றுகையும் திருக்கோயில் ஸ்ரீவள்ளிபுர கலைஞர்களின் தப்பு இசை ஆற்றுகையைத்  தொடர்ந்து பாரம்பரியக் கலைகளில் சிறுவர்களின் வகிபங்கு, அரங்கின் புதிய செல்நெறிகளை உருவாக்குவதில் பாரம்பரியக் கலைகளின் பங்களிப்பு, பாரம்பரியக் கலைகளின் வகிபங்கு எனும் தலைப்பின் கீழ் விபுலானந்தா மத்திய கல்லூரியின் வௌ;வேறு மண்டபங்களிலும் காத்திரமாக கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வுகளிலும் பல்கலைக்கழக,மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் பாரம்பரியக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

  இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை நேர ஆற்றுகைகள் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள வெளியில் கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் தற்காப்பு பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களான சீனடி,சிலம்பாட்டம், வாள்வீச்சு, தீப்பந்த வீச்சு என்பனவும் அம்பாரை இறக்காமம் பிரதேச முஸ்லிம்களின் பொல்லடி கலையும் இறக்காமம் பிரதேச சிங்கள இனத்தினரின் பாரம்பரியக் கலையான வண்ணம் நடனமும் கோலம நாடகத்தின் ஒரு பகுதியும் நடித்துக்காண்பிக்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச ஸ்ரீ வள்ளிபுர கலைஞர்களின் தப்பு இசை ஆடல் மரபும் மட்டக்களப்பு பிரதேச பறையிசை நடன மரபும் சூரியா பெண்கள் நிலையத்தினரின் பெண்கள் பிரச்சினையினை பேசிய ஒளியை நோக்கி என்ற வீதி நாடகமும் பார்ப்போரை வெகுவாக ஈர்த்திருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்வின் இரவு நேர ஆற்றுகைகளாக களுவன்கேணி பிரதேச மக்களின் வேடுவர் சடங்கும் சடங்குப் பாடல்களும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினரின் வனங்களினதும் உயிர்களினதும் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்திய நிருத்திய நாடகமும், பட்டிப்பளை பிரதேச சமூக மக்களின் வாழ்வியல் பாடல்களான தாலாட்டு, குரவை, ஒப்பாரி, விவசாய, மீனவப் பாடல்கள் என்பனவும்,கொக்கட்டிச்சோலை பிரதேசத்தினரின் சமகால விடயங்களை வெளிப்படுத்திய போதையற்ற உலகம் எனும் தொனிப்பொருளை வெளிக்கொணர்ந்த வீதி நாடகமும் கனகரெட்னா விளையாட்டு மைதானத்தில் நடந்தேறியது.

      அடுத்த களமான சண்முகா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் குறுந்திரைப்படக் காட்சியும் சண்முகா மகாவித்தியாலய மைதான வளாகத்தில் வாகரைப் பிரதேசத்தினரின் ஏழாம் போர் வடமோடிக்கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தன. இவ்வாற்றுகையில் பெருமளவான கூத்து ஆர்வலர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

 வேடுவர், பறங்கியர், காப்பிலியர், தெலுங்கர், அருந்ததியர் போன்ற சமூகங்களின் கலைச்செயற்பாடுகளும் சமூக அங்கீகாரமும் எனும் தலைப்பினாலான மூன்றாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் சி.ஜெயசங்கர் அவர்களும் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் கலைத்துறைப் பேராசிரியர் ஸ்ரீபன் அவர்களும் தலைமை தாங்கினர். இக் கருத்தாடலில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள்,கலைஞர்கள், உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டனர். 

     மூன்றாம் நாள் நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர் ஸரீபன் அவர்கள் தனது உரையில் படிப்பறிவில்லாத நாட்டுப்புற மக்களின் கலை வடிவங்களில் இருந்தே கோட்பாடுகளும்  எண்ணங்களும் எடுக்கப்பட்டன என்றும் உயர்ந்ததாக சொல்லப்படுகின்ற பல கலைவடிவங்கள் தொடர்பான கோட்பாடுகள் உருவாகுவதற்கு பாரம்பரியக் கலை வடிவங்களே அடிப்படையாக இருந்ததென்றும் பாரம்பரியக் கலை வடிவங்களில் இருந்தே உயர்வாக சொல்லப்படுகின்ற கலை வடிவங்களுக்கான கோட்பாடுகளும் கொள்கைகளும் எண்ணங்களும் உருவாக்கப்பட்டன என்றும் தமிழ்நாட்டிலுள்ள தெருக்கூத்துக்கலையை பார்த்துவிட்டுச் சென்ற மேலைத்தேய நாடகவியலாளரான பேட்டோல் பிரெக்ட், திரைச்சீலை பிடிக்கின்ற கட்டியக்காரன் பாத்திரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே தூரப்படுத்தல் உத்தியின் ஊடாக  தனது நவீன நாடகத்தை முன்னெடுத்தார் என்றும் காவிய பாணி நடிப்பின் அச்சாணி அம்சமான தொலைப்படுத்தல் உத்தியானது எமது மரபுவழிக் கலை வடிவமான தெருக்கூத்தில் இருந்து எடுக்கப்பட்டதெனவும் பாரம்பரியக் கலைகளும் கலைஞர்களும், செவ்வியல் கலைகளும் கலைஞர்களும் சமமானவர்களே என்றும் கலைகளை ஆற்றுகை செய்யும் ஆற்றுகையாளர்களே, கலைகளை பாகுபடுத்திக் காட்டக்கூடாதெனவும் மரபை, பாரம்பரியத்தை சுமந்து செல்லக்கூடிய கடத்தப்படக்கூடியவர்களாகிய கலைஞர்கள் அனைவரும் அதை போற்றுபவர்களாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் கல்விக்கூடமோ கல்வி நிறுவனங்களோ செய்ய முடியாத பல விடயங்களை கலைஞர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் வெகுசன பண்பாட்டின் இயல்பும் கலைகளின் மரபும் வௌ;வேறு என்றும். கலைகளானவை மக்களை ஒன்றினைக்கக்கூடியதாகவும் ஆறுதல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதோடு சொந்த மதிப்புகளை மரபுகளை உதரித்தள்ளுகின்ற சமூகமானது பலவீனமான சமூகமாக இருப்பதோடு எல்லாவற்றுக்கும் இன்னொன்றை சார்ந்து இருக்கும், நம்பும் சமூகமாகவும் மாறும் எனவும் நமக்கான தேவையை நாமே தேடிக்கொள்ள வேண்டும் எனவும் கலைகளை நுகர்வோர்களாக நாம் மாறக்கூடாதென்றும் அதாவது அதை பார்ப்பவர்களாக மாத்திரம் இல்லாமல் அதை ஆற்றுபவர்களாக மாறி எமது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

    சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தனது உரையில் இந்திய சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ஸரீபன் அவர்களின் உரையானது மிகவும் பொருத்தமானதும் அவசியம் கவனத்திற் கொள்ளவேண்டியதுமான உரையாக இருந்ததென்றும் கலைகளை அதற்குரிய இயல்பான வெளிகளில் ஆற்றுகை செய்வதோடு கலைகளை ஆற்றுகை செய்கின்ற சமூகங்களுடன் இணைந்து ஊக்குவித்து வேலை செய்;து பங்கெடுப்பது பாரம்பரியங்கள் பேண வேண்டும் என்பதற்காக அல்லாமல் பல்வேறு சமூகங்கள் இயங்குகின்ற சூழலில் தன் சுற்றத்துடன் இணைந்து கொண்டாடி மகிழ்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவே ஆகும்.

     மேலும் போட்டிப் பரீட்சையை மையப்படுத்திய கல்வியானது மற்றவர்களுடன் உரையாடுவதை பகிரும் பண்பாட்டினை தடுப்பதோடு அதாவது நான் வெற்றி பெற வேண்டுமானால் மற்றவர்களுடன் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் ஆனால் தன்னிடமிருப்பதை தான் எவற்றையும் பகிரக்கூடாது என்கின்ற பண்பாட்டை எம்முடைய கல்வி உருவாக்கிக் கொண்டு வருகின்றது என்றும் நாம் எல்லாவற்றையும் வாங்குபவர்களாகவும் தொலைக்காட்சிக்கு முன்னால் குந்தி இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும்  எம் சமூகம் மாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பெரும்பாலான சமூகங்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ளதோடு வௌ்வேறு சமூகங்கள் கொடுத்தும் பகிர்ந்தும் முரண்பட்டும் சேர்ந்தும் வாழ்ந்தும் வந்த நீண்ட ஒரு வரலாற்றையுடைய மாகாணமாக கிழக்கு மாகாணம்  உள்ளதென்றும் எங்களுக்குள் இருக்கின்ற தனித்துவங்கள் பொதுத்தன்மைகள் வித்தியாசங்கள் என்பவை கவனத்திற் கொள்ளப்படவேண்டுமெனவும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

மூன்று நாட்களும் வௌ்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆற்றுகைகளை மூன்றாம் நாள் இரவு கனகரெட்னம் மைதானத்திலுள்ள பிரதான மேடையில் அனைத்து இன பாரம்பரியக் கலையாற்றுகைகளும் ஆற்றுகை செய்யப்பட்டன. சமூகங்கள் தோறும் தமது வாழ்வாதாரமாகவும்;(பிழைப்பூதியம்) பண்பாடாகவும் முன்னெடுத்து வருகின்ற ஆற்றுகையாளர்களும் கலைச்செயற்பாடு சார்ந்து இயங்கி வருகின்ற செயற்பாட்டாளர்களுமே சமூக நலலுறவுக்காண கலை பண்பாட்டுத் திருவிழாவினை முன்னெடுத்தனர் என்றால் மிகையாகாது.  

  மூன்றாம் நாள் நிகழ்வின் இரவு நேர ஆற்றுகைகளான வாகரை வேடுவ சமூகத்தின் சமூக பொருளாதார நிலைமைகளை பிரதிபலிக்கும் புலிக்கூத்து ஆற்றுகையும், மட்டக்களப்புப் பிரதேசத்தினரின் பறையிசையும் பறைமேளக்கூத்து ஆற்றுகையும், இஸ்லாமிய மாண்புகளைப் பேசும் பக்கீர் பைத் றபான் இசை ஆற்றுகையும், நடன அசைவுகள் வழி பேசும் அம்பாறை இறக்காமம் பகுதி பிரதேசத்தினரின் வண்ணம் ஆற்றுகையும், இஸ்லாமிய வாழ்வியல் திருமண சடங்கு முறைகள் என்பனவும், போர்த்துக்கீச நடனம் கபறீஞ்சா, லான்சஸ் பாடல்களும்,வேடுவர் சடங்குப்பாடல்களும், வெடியரசன் கூத்தும், வாழ்வியல் பாடல்களான ஒப்பாரி, தாலாட்டு, உழவர், மீனவர் பாடல் போன்றனவும் திருகோணமலை கிண்ணியாப் பிரதேசத்தில் பயில்வில் இருக்கின்ற வாள்வீச்சு, சீனடி, தீப்பந்த வீச்சு என்பனவும் ஈழத்து கலைஞர்களால் 1970 -1980 களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்ட மெல்லிசைப் பாடல்கள்  சுவாமி விபுலானந்தா இசைத்துறை மாணவர்களாலும் பாடலாற்றுகை செய்யப்பட்டன.

        கலையாற்றுகை பண்பாட்டின் ஊடாக ஆரோக்கியமான நல்லிணக்கத்தை பேசுதல் எனும் கருப்பொருளில் சமூக நல்லுறவுகளுக்கான கலை பண்பாட்டுத் திருவிழாவில் பன்மைத் தன்மையான சமூகங்களின், விளிம்பு நிலை மக்களின் பாரம்பரிய ஆற்றுகை நிகழ்வுகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களது முக்கியத்துவத்தினையும், அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தினையும் ஒரே தள அரங்கில் ஒருவருக்கொருவர் அறியக்கூடியதாகவும் வாழ்தலுக்கான இருப்பின் முக்கியத்துவத்தினையும் பல சமூகங்கள் முன்னிலையில் அவர்களது அடையாளங்களை அவர்களே அறியுமளவுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாகவும் இருந்தது.

இனம், மதம், சாதி, வர்க்கம், மொழி, பிரதேசம் கடந்து ஒருவரையொருவர் தத்தமது ஆற்றுகைக் கலைகளின் இருப்பியலின் முக்கியத்துவத்தினையும் அதனை அதற்கான ஆற்றுகைக் களத்தினிலே மேடையேற்றப்படுவதே அதனது தனித்துவம் என்பதனையும் கலையாற்றுகைகளுக்கூடாகவும் கலைஞர்களுக்கூடாகவும் யாவரும் புரிந்து கொள்வதற்கான களமுமாக அமைந்திருந்தது.

சமூகங்களது நல்லிணக்கத்திற்கான கலைப் பண்பாட்டுத் திருவிழாவானது மற்றைய சமூகத்தினரும் பங்குபற்றுகின்ற பரீட்சயம் கொள்கின்ற பல்வேறு சமூகங்களது பல்வகை நிகழ்ச்சிகளையும், கலையாற்றுகைகளையும் உள்ளடக்கியதாய் அமைந்திருந்தது. உள்ளுர், தேசிய, சர்வதேச அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கின்ற துன்ப துயர இடைவெளிகளைக் களைந்து தொடர்புகளையும் உறவுகளையும் புதிய சூழ்நிலையில் முற்போக்கு குணாம்சங்களுடன் மீளுருவாக்கம் செய்யப்படும் கலைப் பண்பாட்டு முன்னெடுப்பின் ஓர் அம்சமே சமூக நல்லுறவுக்கான கலைப் பண்பாட்டுத் திருவிழாவின் முக்கிய நோக்கம் என சி.ஜெயசங்கர் குறிப்பிடுகின்றார்.

     கலைகளை தொடர் செயற்பாடாகவும் தொடர் செயல் வாதமாகவும் முன்னெடுத்து வருகின்ற வாழ்வியலுக்கான கலைச்செயற்பாட்டாளரான,சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் அவர்களாலும் அவரது கலைச்செயற்பாடு சார்ந்து இயங்கும் விரிவுரையாளர், மாணவர் குழுக்களாலுமே கலைத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைத்திருவிழாவில் பன்மைத் தன்மையான பாரம்பரியக் கலை வடிவங்களையும் அவர்களது ஆளுமையினையும் ஒரே மேடையில் கண்டுகொள்ள முடிந்தது.







































பாக்கியராஜா மோகனதாஸ் 
(நுண்கலைமாணி)
துறைநீலாவணை