கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வர்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா ஒக்டோபர் 20 இன்று மட்டக்களப்பில் மிகக் கோலாகலாமாக ஆரம்பமாகியது.
இன்று (20.10.2016) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவெனத் திட்டமிடப்பட்டிருந்த பண்பாட்டு பவனி காலை 8.00 மணியளவில் கல்லடி உப்போடை சுவாமி விபுலாநந்தர் சமாதியிலிருந்து தமிழன்னை, பண்பாட்டு ஊர்திகள் என்பவற்றுடன் பேராளர்கள் சகிதம் ஆரம்பமான பண்பாட்டு பவனியில் கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகாமையிலிருந்து தமிழ் இன்னியம், வேடப்புனைவு, தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகள் என்பன இணைந்து கல்லடிப்பாலத்தினூடாக மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி விழா மண்டபத்தை வந்தடைந்தது.
இப் பண்பாட்டுப் பவனியில் கிழக்கு மாகாண கௌரவ அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட பல தமிழ் ஆர்வலர்களும் கலந்கொண்டிருந்தனர்.
தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் சிங்களவர் சேர்ந்து வாழும் ஒரு பண்பாட்டு, கலாசார உணர்திறன்மிக்க ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. கலைகளின் பிறப்பிடம் என்று வர்ணிக்கப்படுவதும் உலகப் பேராசான், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணுமாகிய இந்தக் கிழக்கு மண் இன்று மீண்டும் ஒருமுறை தன்னை அலங்கரித்து நிற்கின்றது.
தமிழர் பாரம்பரிய நிகழ்வுகளையும் முஸ்லிம்களின் கலை பண்பாட்டு விடயங்களையும் பறங்கியர் கலாசாரத்தையும் பிரதிபலிக்கத்தக்கதான பண்பாட்டுபவணி நமக்குப் பல சிந்தனைகளையும் விட்டுச் செல்ல மறக்கவில்லை.
வெறும் காட்சிப்படுத்தலிலேயே வாந்துகொண்டிடுக்கும் நமது பண்பாடு மற்றும் கலாசார விடயங்களின் முணுமுணுப்பும் எனது காதின் சோனைகளைச் சற்றுச் சுரண்டிச் சென்றது.
இப்பண்பாட்டுப் பவனியில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம், கண்ணகி கலை இலக்கியக்கூடல் ஆகிய அமைப்புகளைப் பிரதிபலிக்கும் பதாதைகளும் கண்ணகி கலை இலக்கியக் கூடல், கதிரவன் கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட கட்டிட நிர்மானிப்பாளர் சங்கம் போன்ற அமைப்புக்கள் சார்பாக வாகன ஊர்திகளும் கலந்து தங்களது பண்பாடு கலாசார ரீதியான ஆர்வத்தைக் காட்டியிருந்தனர்.
ஒரு கலைஞனின் நிலையினை பிரதிபலிக்கும் தோரணையில் அமைந்திருந்த ஒரு பழங்கால வீட்டினை மிகச்சிறப்பாக கதிரவன் கலைக்கழகத்தினர் ஊர்தியில் வடிவமைந்திருந்தனர். பழுதாய்போன தாளவாத்தியக் கருவிகள் வாசலில் வாழைமரம். வாசற்படியில் திருநீற்றுக் குடுவை என தமிழ்ர் பாரம்பரியச் சின்னச் சின்ன விடயங்களை அது வெளிக்காட்டியிருந்தது.
கண்ணகி கலை இலக்கியக் கூடலின் ஊர்தியில் கிழக்கு மாகாணத்தின் தனித்துவ இலக்கிய மரபைப் பிரதிபலிக்கும் வகையில் கண்ணகி வழக்குரை ஏட்டினை காட்சிப்படுத்தியும் மட்டக்களப்பு கட்டிட நிர்மானிகப்பாளர்களின் ஊர்தியில் அனைத்துச் சமூக கலை நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியவாறும் ஊர்திகள் நகர்ந்து சென்றன. அது நமது கலைகளும் பாரம்பரியங்களும் எதிர்காலத்தில் புகைப்படங்களில்தான் தஞ்சமடையும் என்பதை நினைவுபடுத்தியதை மனம் இன்னமும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
நகர்ந்துகொண்டிருந்த ஊர்திகளில் “ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ “கலைகளால் எழுவோம்” போன்ற வாசகங்கள் புதுத் தெம்பூட்டுபவையாக அமைந்திருந்தன.
மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியில் பவனிவந்த தமிழன்னையின் கம்பீரமான தோற்றம் “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” எனும் பாரதியின் வார்த்தைகளைப் பொய்ப்பிப்பதாய் கட்டியம் கூறியது.
காட்சிப் பதிவு ச.பா.மதன்