வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு


சிவலிங்கம் மாமாவை நினைக்கும் ஒவ்வொரு முறையும் அவருக்குச் சிறுவர்களால் சொல்லப்படும் “வணக்கம் மாமா” வும் அதற்கு அவர் “வணக்கம் மருமக்களே” என அன்போடு முறைகூறிச் சொல்லும் வணக்கமுந்தான் என் காதின் காற்றிடைவெளிகளை மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொள்ளும். அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் வானொலிமாமா கதைகேட்க நாம் மாலை 5.30 மணிக்கெல்லாம் சம்மாணம் போட்டுத் தவங்கிடந்த காலங்களையும் அது நினைவுபடுத்த மறப்பதில்லை.

மாஸ்டர் சிவலிங்கம் என்றும், வானொலி மாமா எனவும் அறியப்பெற்ற இவர், நான் உட்பட அப்போதிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் மாமாதான். மட்டக்களப்பு மண் எமக்களித்த முதுசொம் அவர். அவரை எழுத முற்படும் போதே என்னுள் ஒருவித அதிர்வு குடிகொண்டிருந்தது. ஆரம்பித்த இந்த நொடிவரை அந்த அதிர்வின் எதிரொலியாய் பலமுறை மேனி சிலிர்த்திருக்கிறது. உலகப் பிரபலமான கதைசொல்லியை நேர்காண எனக்குக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை எண்ணி…. என்று சொல்வதை விட| நான் சிறுவனாய் இருந்தபோது வானொலியில் கேட்ட கதைகளின் குரலுக்குச் சொந்தக்காரரை, நான் கனவிலும் நினைத்திராதபடியான ஒரு சந்திப்பை நிகழ்த்த இருப்பதை எண்ணித்தான் என் உடம்பின் இதுவரை பெயரிடப்படாத அத்தனை இரசாயனங்களும் ஒன்றுசேர்ந்து அந்த அதிர்வை உருவாக்கியிருந்திருக்க வேண்டும்.

கதைகளின் நடுவே வாழைப்பழம் உண்ணும் காட்சியை மாமா கூறும் போது, எம்மையும் அத்துமீறி உமிழ்நீர் சுரந்து கொள்வதையும் இராஜகுமாரன் குதிரையில் வரும் காட்சிகளில் மாமாவின் டயரியும் விரல்களும் பேசிக்கொள்ளும் பாஷையின் ஒலி என அறியாமல் உண்மைக் குதிரையின் குழம்பொலி என ஏமார்ந்த கணங்களையும் இலகுவில் மறந்து விட முடியுமா என்ன?
நவீன இலத்திரனியல் சாதனங்களின் வருகைக்குமுன் வானொலி ஒன்றே மிகப்பெரிய ஜனரஞ்சக ஊடகமாக இருந்த அந்தக் காலத்து உணர்வுகளை இக்காலச் சிறுவர்களால் அவ்வளவு இலகுவாக உணர்ந்துகொள்ள முடியாதென்பதற்காகவே நான் இத்தனை வரிகளையும் பயன்படுத்த வேண்டியாயிற்று. நிச்சயமாக அப்படியொரு வசந்தகாலமும் இப்படியொரு கதைசொல்லி மாமாவும் இனி எந்தச் சிறுவர்களுக்கும் வாய்க்கப்போவதில்லை.

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் எண்ணிலடங்கா மேடைகள்; என 50 வருடக் கதைசொல்லல் அனுபவமும்;, சிறுவர் எழுத்தாளர் (சிறுவர் கதை மற்றும் சிறுவர் பாடல் ), 144 மேடைகள் கண்ட மிகச் சிறந்த வில்லுப் பாட்டுக் கலைஞர்;, நகைச்சுவைப் பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், சிறந்த நடிகர், ஓவியர், பத்திரிகையாளர், எனப் பல்வேறு திறன்களைத் தன்னகத்தே கொண்டவரும் கிருபானந்தவாரியார் அவர்களினால் “அருட்கலைத்திலகம்” எனவும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் “நகைச்சுவைக்குமரன்” எனவும் பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்களால் “வில்லிசைச்செல்வன்” எனவும் அமைச்சர் செ.இராசதுரை அவர்களால் “வில்லிசைச்செல்வர்” எனவும் காத்தான்குடிப் பொதுமக்களால் “கனித்தமிழ்க் கதைஞன்” எனவும் மட்டக்களப்பு இந்து சயம அபிவிருத்திச் சங்கத்தினால்; “கலைக்குரிசில்” எனவும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் “சிறுவர் இலக்கியச் செம்மல்” எனவும் இங்கிலாந்தில் இயங்கும் BUDS  எனும் அமைப்பினால் பொன்முடிச்சுக் கொடுத்து “கலைமாமணி” எனவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் “இலக்கிய முதுமாணி” எனவும் பற்பல பட்டங்கள் பெற்றவரும், 1984 – 1991 ஆம் ஆண்டுகளில் சிறுவர் இலக்கியத்துக்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு, மற்றும் 2013 இல் “அன்பு தந்த பரிசு” எனும் சிறுவர் படைப்புக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் “தமிழியல் விருது”, இலங்கை அரசின் உயர்விருதுகளில் ஒன்றான ‘கலாபூசணம்” விருது என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டவருமான மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையையும் அத்தனை துறைகளிலும்; அவர் கூறிய மிகச் சுவாரசியமான சம்பவங்களையும் நிச்சயமாக என்னால் இரண்டு மூன்று பக்கங்களில் விபரித்துவிட முடியாது. இது கொஞ்சம் நீண்டதாகவே  இருக்கப் போகிறது என முன்னரே சொல்லிவிடுகின்றேன்.

ஐயாவைச் சந்திப்பதற்கு மாலை 4 மணிக்கு அனுமதி வாங்கியிருந்தோம். என் இத்தனைகால வாழ்வில் எத்தனையோ நான்கு மணிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை சந்திக்கப்போகும் அன்றைய நான்கு மணியை நான் சந்திக்கும் தருணங்கள் மட்டும் என்னவோ விபரிக்க முடியாததாக இருந்தது. என் உணர்வுகளுக்கு இறக்கை முழைத்துவிட்டதாகவும் கடிகார முட்கள் கடிவாளமிடப்பட்டிருந்ததாகவும் உணர்ந்தேன். நான்கு மணிவரை காத்திருக்கும் சக்தி மெதுவாக என்னை விட்டு விலகிப் போனது. மாஸ்டரைச் சந்திக்க என்னுடன் நண்பன் டனிஸ்க்கரனும் வருவதாக இருந்தார். அதனால் அவருக்கு நாம் 30 நிமிடம் முந்திச் செல்வோம் என்ற தகவலை அறியப்படுத்தியிருந்தேன். மாஸ்டரைச் சந்திக்க எனக்கிருந்த அதே ஆவலும் எதிர்பார்ப்பும் நண்பனுக்கும் இருந்தது. அதனால் திட்டமிட்டபடியே 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் வீட்டுக்கு முன் வந்துவிட்டோம். இருந்தும் குறித்த நேரத்திற்கு முன் வீட்டினுள் செல்வதில் எம் இருவருக்குமே உடன்பாடு இருக்கவில்லை. 82 வயதான மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவின் தூக்கத்தைக் கலைப்பதில் அப்படி என்ன விருப்பம் எங்களுக்கு?

மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவின் பிறப்பிடம் என்னமோ மஞ்சந்தொடுவாய் ஆக இருந்தாலும் வசிப்பிடம் கல்லடிதான். ஆதலால் அந்த 30 நிமிடங்களையும் கழிப்பதென்பது எமக்கொன்றும் சிரமமாகத் தெரியவில்லை. கல்லடிப் பாலத்தின் அருகிலுள்ள இருக்கைகளில் அமர்ந்து மாமாவிடம் கேட்கும் வினாக்களைத் தயார் படுத்தினோம். அப்போது சற்று மழைத்தூறல். அந்த மழைத் துளியை பாலத்தின் அருகிலிருந்த மீன் சிற்பம் பருகும் அற்புதக் காட்சியை இரசிக்கக் கூட நேரம் எமக்கு இடங்கொடுக்கவில்லை. தூறலுக்கு மத்தியிலும் தாமதிக்கக் கூடாதென்ற நோக்கிலும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் வீட்டு நுழைவாயிலை நாம் அடையும்போது நேரம் சரியாக 4 மணி. ஆனால் நுழைவாயில் பூட்டித்தான் இருந்தது. நோட்டம் விட்டதில் வீட்டுக் கதவு திறந்திருந்த விடயம் கண்களோடு உறவாடிற்று. ஐயாவை அழைத்தோம். திறந்திருந்த கதவருகில் தூங்கிக் கொண்டிருந்த மாமா எழும்பிய வேகமும் பார்த்த கம்பீரப் பார்வையும் எம்மை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே வேகத்தில் தூறல் மழைக்குள்ளும் மாமா ஓடிவந்து கேற்றைத் திறப்பார் என நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வீட்டினுள் சென்ற எங்களை மாஸ்டர் பெற்ற விருதுகளும் நினைவுச் சின்னங்களும் மட்டுமே அடுக்கப்பெற்ற அலுமாரி அன்புடன் வரவேற்றது மட்டுமன்றி, அதற்குள் இருந்த சில புகைப்படங்கள் மாமாவின்; இளமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டன.


          வீட்டினுள் சென்ற எங்களை மாஸ்டர் பெற்ற விருதுகளும் நினைவுச் சின்னங்களும் மட்டுமே அடுக்கப்பெற்ற அலுமாரி அன்புடன் வரவேற்றது மட்டுமன்றி, அதற்குள் இருந்த சில புகைப்படங்கள் மாமாவின்; இளமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டன.


      அந்த அலுமாரி ரூபா ஏழாயிரம் செலவில் மனைவியால் செய்யப்பட்டதென்பதை அவரின் மனைவி மங்கையற்கரசி அம்மணியிடமிருந்து கதைத்ததில் தெரிந்துகொண்டோம். அவர் பண்டிதர் பூபாலப்பிள்ளையின் மகள். கலையை நேசிக்கும் இயல்பும் ஒரு கலைஞனை உணர்ந்துகொள்ளும் மனமும் அவரிடம் இயல்பாகவே காணப்பட்டது. இப்படியான ஒரு வாழ்க்கைத் துணைநலம் எல்லாக் கலைஞனுக்கும் இலகுவில் வாய்த்;து விடுவதில்லை. இவ்வாறு வாய்க்கப் பெற்ற கலைஞர்கள் இலகுவில் ஓய்ந்து விடுவதுமில்லை. இவர் கதைகூறுவதை நிறுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங்கியிருந்தும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக் கதைகளை இப்போதும் கூறிவருகின்றார். இருந்தும் நீங்கள் இழந்துவிட்;ட விடயம் என்ன என்ற எனது கேள்விக்கு “முன்னர் போல் இப்போது என்னால் கதைகூற முடியவில்லை என வருத்தப்படுகின்றேன்” எனக் கூறியபோது கதைகூறுவதில் அவருக்குள்ள ஆர்வமும் அக்கறையும் புலப்பட்டது. அவருடன் உரையாடிய அந்த இரண்டரை மணி நேர இடைவெளிகளுக்குள் கதைகூறல், நடிப்பு என்பன அவர் இரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்றாகவே என்னால் உணரமுடிந்தது. அதை எந்த நோய்களாலும் முதுமையினாலும் இலகுவில் அவரிடமிருந்து பிரித்துவிட முடியாது.

அவரின் “பயங்கர இரவு” கதைப் புத்தகத்தில் நான் சிறுவயதில் வாசித்துப் பயந்த கதைகளின் காட்சிகளையும் நினைவுபடுத்தி என்னை அவரின் ஒரு தீவிர இரசிகனாகவே முதலில் அறிமுகம் செய்து கொண்டேன். அதைக் கேட்டதும் ஒரு சின்னப் புன்முறுவல் அவர் முகத்தில் இழையோடியமை என்னையும் மகிழ்வித்தது. தொடர்ந்து அவரிடம், டயரியில் விரல்களால் எழுப்பும் குதிரைச் சத்தத்தை நான் சிலாகித்ததையும் பகிர்ந்து கொண்டு, பின்னர் எனக்காக ஒருமுறை அதனைச் செய்து காட்டுமாறு கேட்பேன் எனக் கூறிய மறுகணமே எழும்பி அவரின் அறைக்குள் சென்றுவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்றுநேரத்தில் ஒரு டயரியும்; கையுமாக என்முன் தோன்றி “இராஜகுமாரன் குதிரையில் வருகிறான்….” எனத் தொடங்கி, முன்னர் நான் சிறுவயதில் கேட்ட அதே கதையின் சிறு பகுதியை கூறிக்காட்டினார். முன்னர் இருந்த அதே உற்சாகம், அதே குரல், அதே கம்பீரம் என்னை ஒருநிமிடம் மலைக்க வைத்தது மட்டுமன்றி என்னை அது மீண்டும் சிறுவனாகவே மாற்றியிருந்தது.  எனக்காக அவர் செய்து காட்டிய அத்தருணங்களை எனது பாக்கியமாகவே கருதுகிறேன்.

         முன்னரெல்லாம் பாடசாலைகளில் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ; “மாணவர் மன்றம்” நடக்கும் அதிலே மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவார்கள். பின்னர் அது மாதமொருமுறை நடந்து வந்தது. தற்போது அது அறவே இல்லாமல் போய்விட்டது. இந்த இடத்தில் இது எதற்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. மாஸ்டர் சிவலிங்கமும் அப்படியொரு மாணவர் மன்றம் எமக்களித்த பொக்கிஷந்தான். சிவானந்த வித்தியாலயத்திலே அவர் படிக்கும்போது நடந்த மாணவர்மன்றம் ஒன்றில்தான் அவர்  முதலாவதாகக் கதை  சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை| மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி) கதைகூறுமாறு கேட்டிருக்கிறார். அதன்பின் வின்சன் பாடசாலை என இவர் மாணவனாய் இருந்த காலத்திலேயே பிற பாடசாலைகளுக்குச் சென்று கதைகூறியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது அவரின் கதைகூறும் ஆற்றல்பற்றி மேலும் நான் உங்களுக்கு விபரிக்கவேண்டியிருக்காது. அப்போது அருகிலிருந்த அவரின் மனைவி குறுக்கிட்டு “நாங்கள் வின்சன்ட் பாடசாலையில் படிக்கும்போது இவர் வந்து கதை சொன்னவர் நல்ல ஞாபகம் இருக்கு’’ என்ற அவரிடம் “அப்போ உங்கள் திருமணம் காதல் திருமணமா?’’ என்ற எனது கேள்விக்கு சிரித்துக்கொண்டே “எல்லாரும் இப்படித்தான் கேட்பார்கள்’’ என்ற அவரின் பதிலிலிருந்தே பேசிய திருமணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

            மாமாவை நேர்காணச் செல்லும் முன் அவர்பற்றிய விடயங்களைத் தேடிக் கொண்டேன். அதிலே எந்த இடத்திலும் அவர் கல்வி கற்பித்த தகவல்கள் இல்லை. ஆனாலும் மாஸ்டர் என எப்படிப் பெயர் வந்தது என்ற வினா என்னுள் எழுந்தது. அதைக் அவரிடமே கேட்டபோதுதான்  அவர்குடும்பத்தில் அப்பா, அண்ணா என எல்லோரும் மாஸ்டராயிருந்தவர்கள் என்பதும் அதனாலேயே அவருக்கும் சிறுவயதிலிருந்தே செல்லமாக அந்தப் பட்டம் ஒட்டிக் கொண்டதையும் தெரிந்து கொண்டேன்.
       குடும்பத்தில் எல்லோரும் ஆசிரியர்கள் என்பதால் வேறு துறையான பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறிய அவரிடம் பத்திரிகைத்துறையில் உங்களது செயற்பாடுகள் பற்றிச் சொல்லுமாறு கூறியபோதுதான் அனேகம் பேருக்குத் தெரியாத மாஸ்டரின் இன்னுமொரு ஆளுமை வெளிப்பட்டது. “தினபதி” பத்திரிக்கையில் இளைஞர் மன்றம் எனும் பகுதிக்குப் பொறுப்பாகவும் “சோமண்ணே சொல்லுகிறார்” எனும் பகுதியும், “சிந்தாமணி” பத்திரிகையில் சிறுவர் சிந்தாமணிக்குப் பொறுப்பாகவும் இருந்தமை மட்டுமன்றி அவ்விரு பத்திரிகைகளில் துணையாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் “சுதந்திரன்” பத்திரிகையில் கேலிச்சித்திரமும் வீரகேசரியில் சிறுவர் பகுதிக்கான ஓவியமும் வரைந்திருக்கிறார்.

         இது பற்றிய உரையாடலுக்கு மத்தியில் மாஸ்டரின் மனைவியால் பரிமாறப்பெற்ற சுவையான ரீயும் விஸ்கட்டும் எங்களுக்கான கட்டாய ஓய்வைக் கட்டவிழ்த்துவிட்டது. நாங்கள் ரீ பருகிக்கொண்டிருந்த வேளை சிவலிங்க மாமா பற்றி அவர் மனைவியிடம் வினாத்தொடுத்தோம். “அவர் ஆசையில்லாதவர்...அவருக்குப்பின்னால் போனால் எதிலும் வெற்றிதான். சீதனமாகக் கொடுத்த வீட்டைக் கூட வாங்க மறுத்தவர்” எனத் தொடங்கிய அவர் தம் வாழ்க்கைப்  புத்தகத்தின் முதற் பக்கங்களை எங்களுக்காக மீண்டும் புரட்டத் தொடங்கினார். புதிதாகத்  திருமணபந்தத்தில் இணையும் மாப்பிள்ளைக்கு பெண்வீட்டார் ஆறு மாதங்களுக்கு விருந்து வைப்பது கிழக்குமாகாணப் பாரம்பரியத்தின் ஒரு அங்கம். “இவருக்கும்  எங்கள் வீட்டில் விருந்து வைத்தார்கள். இரவு உணவு என்பதால் அரிசிமாப் பிட்டுடன்  பலவகையான கறிகளும் தயார் படுத்தியிருந்தனர். எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கும் வேளை இவர் தான் இருந்த கதிரையில் தாளம் போட்டு “ மாப்பிள்ளை அரிசிமாப் பிட்டு சாப்பிடுவதில்லையே..” எனப் பாடல் பாடிக் கொண்டிருந்தார்;. பின்னர் அவருக்கு இடியப்பம் செய்து கொடுத்தோம்” எனக் கூறும்போது நிச்சயமாக அக்காலத்தின் விளிம்பில் அவர் சென்று திரும்பியிருக்க வேண்டும். பசுமை நினைவுகளை  அவர் மீட்டிய விதம் அக் காட்சிகளை எம் மனத்திரைக்குக் கொண்டுவந்தது. தனது தந்தை அவருக்கு கூறிய “தூதுளங் கீரை தீதுளதகற்றும்” என்ற வசனத்தையும் அவர் எம்முடன் பகிர்ந்து கொண்டமை பயனுள்ளதாய் இருந்தது. இது போன்றே ஒரு மழைநாள் வீதியில் தள்ளுவண்டி  தள்ளி வேலைசெய்யும் ஒருவர்மேல் இரக்கப்பட்டு “பாவம் அவருக்கு ஒரு ரீ கொடுப்போமா”  என சமயலறைக்கு வந்து மாஸ்டர் தன்னிடம் கேட்டு அவரை அழைத்து ரீ பருகக் கொடுத்ததைப் பெருமையாக நினைவுகூர்ந்தார். எங்களுக்கும் அவர் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் சற்று அதிகமானது.

         அப்போ இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை| நாங்கள் வெளியில் செல்வதற்காக மெல்ல ஒதுங்கிக் கொண்டது. மாமாவின் வீட்டின் அருகில் உள்ள மாமரமும் பூச்செடிகளும் எங்கள் வருகையை எதிர்பார்த்தவண்ணமிருந்தன. மனைவியிடம் கேட்டது போன்றே மாஸ்டரிடமும் “ உங்களின் மனைவியிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?” எனக் கேட்டுக்கொண்டே வீட்டின் முன்னிருந்த சிறிய தோட்டத்திற்குச் சென்று எமது உரையாடலைத் தொடர்ந்தோம். “எதையும் துணிஞ்சு செய்வா” என்ற பதில் கணநொடிக்குள் மாமாவிடம் இருந்து எனது குறிப்பேட்டினுள்ளும், மாமாவின் கம்பீரத்தோற்றம் எனது கமராவுக்குள்ளும் புகுந்து கொண்டன.


         இதன் போது மாமா இந்தியாவில் சந்தனு கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றமையும் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரின் பக்கத்துவீட்டில் இருந்த தெலுங்கு நடிகை ஒருவருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்ததையும் அந்த நடிகைமூலம் மாமாவுக்கு திரையுலகில் Comic செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையும்  அதை மிகச் சந்தோசத்தோடு அக்கலைக்கல்லூரியின் அதிபர் ஓவியர் சந்தனு மாஸ்டரிடம் கூறியபோது, அதற்கு சினிமாத் துறைமேல் கொஞ்சமும் உடன்பாடில்லாத சந்தனு மாஸ்டரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத        “என்ன சினிமா மோகம் பிடிச்சிட்டுதோ! அப்போ உனக்கு இனி ஓவியம் சரிவராது” என்ற பதிலையும் அதற்காக தனக்குக் கிடைத்த பரிசான 2 வாரங்கள் இடைநிறுத்தம் பற்றியும் மிகச் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்த மாமா, அந்நேரத்தில் தனது அம்மாவுக்கு மிகவும் சுகவீனம் ஏற்பட்டதாக தனது அண்ணா விடமிருந்து வந்த தந்தி பற்றிக் கூறியபோது எமக்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அப்போது மாமாவின் உடல் மட்டும்தான் இந்தியாவில் இருந்திருக்கும் என்று நம்புகின்றேன் இவரின் எண்ணங்கள் எல்லாம் தனது அம்மா பற்றித்தான் சுழன்றிருக்கவேண்டும். உடனடியாக அம்மாவைப் பார்க்க மாமா தனது வீட்டுக்கு வந்தபோது, தன் அம்மாவே வந்து கதவைத் திறந்தார்  அப்போது மாமாவுக்குச் சந்தோசம் ஒரு பக்கம், ஏன் இப்படி தந்தி வந்தது என்ற சந்தேகம் ஒருபக்கம். மாமாவைப்போல், உங்களைப்போல் எனக்கும் அதே கேள்விதான். ஆனாலும் மாமாவிடம் நான் அந்த வினாவை அச்சந்தர்ப்பத்தில் கேட்டிருக்கவில்லை.

மாமா தொடர்ந்தார்… தம் வீட்டிலுள்ளோர் “வருக! வருக! சினிமா நடிகரே!” என வரவேற்ற போதுதான்” சந்தனு மாஸ்டர் அனுப்பிய “ உங்கள் மகனுக்கு சினிமா மோகம் வந்து விட்டது. அவன் இங்கே இனிப் படிக்கமாட்டான், யாரையாவது ஒரு சினிமாக்காரியைக் கட்டி இங்கேயே இருந்துவிடுவான், எப்படியாவது அவனை நாட்டுக்கு அழையுங்கள்” என்ற  தொலைமடல் பற்றிய செய்தி தெரியவந்தது மாமாவுக்கு. உங்களைப்போன்றே நானும்  “இந்திய சினிமா ஒரு திறமைமிக்க,  ஆளுமைமிக்க ஒரு கலைஞனை இழந்து விட்டது” என மனதுக்குள் நினைத்துக்கொண்டே என் உரையாடலைத் தொடர்ந்தேன்.

             அந் நேரத்தில் மாமாவின் இந்திய அனுபவங்கள் பற்றியே எமது உரையாடல் நகர்ந்து கொண்டிருந்தது. அதன்போது நடிகர் திலகம் சிவாஜி யிடமே அவரின் மனோகரா திரைப்படக் காட்சியின் ஒரு பகுதியை நடித்துக்காட்டி தான் பாராட்டுப் பெற்றதையும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் பற்றியும் மிக மகிழ்ச்சியாக எம்மிடம் பகிர்ந்து கொண்ட மாமாவிடம்  “நீங்கள் உங்களுக்குப் பின்னர் ஒரு கதைசொல்லியை உருவாக்க வில்லையே?” என்ற எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. “கலை இன்னொருவர் சொல்லிக் கொடுத்து வருவதில்லை இயல்பாக ஆற்றல் இருந்தால் மட்டுமே கலைஞனாகலாம்” என்ற மாமாவின் பதிலுடன் எனக்கும் உடன்பாடு இருந்தது. இதனால் அது பற்றிய மேலதிக வினாக்களுக்கு அங்கு இடமிருக்கவில்லை என்பதால் “நீங்கள் இப்படியெல்லாம் வருவீர்கள் என சிறுவயதில் எப்போதாவது நினைத்துப்பார்த்ததுண்டா? என்ற எனது அடுத்த கேள்விக்கு, மாமா தான் சின்ன வயதில் காகம், குருவி, நாய், பூனை, போன்றும் வீட்டுக்குப் பிச்சைக் காரர்கள் வரும்வேளை அவர்கள் போன்றும் நடித்துக்காட்டுவது பற்றி தனது அம்மா கூறியதையும் அவ் வேளைகளில் “நீ ஒரு தெனாலிராமனாகத்தான் வருவாய்” என தனது அப்பா கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டபோது தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற ஒளவையின் வரிகள் என் மனச்சுவரின் எங்கோ ஓர் மூலையில் கிடந்து முன்வந்து மறைந்தது.

   “தாமி” எனத் தமிழில் வழங்கப் பெறும் செல்ஃபி மோகம் தற்போது எல்லோரையும் தன்வசப்படுத்தியிருக்கிறது. மாமாவுடன் பேசிக்கொண்டிருந்த போது என்னுள்ளும் அதன் தாக்கம் சற்றுத் தன் வேலையைக் காட்டத் தொடங்கிற்று. செல்ஃபி பற்றி மாமாவுக்குள்ள அறிமுகத்தினையும் இதுவரை என்னைப்போன்றே மாமாவும் செல்ஃபிக்குப் புதியவர் எனவும் அறிந்து கொண்டேன். எனக்கும் மாமாவுக்கும் அது ஒரு புதிய அனுபவம். “மாமாவுடன் செல்ஃபி எடுக்கும் முதலாவது நபர் நீதான் எடுத்துக்கொள்” என்றது கைத்தோலைபேசி. எனக்கும் அது பெருமையாகத்தான் இருந்தது. இனி அந்த வாய்ப்பு யாருக்கும் வாய்க்கப்போவதில்லை.

             1960 இல் கல்லடி உப்போடையில் நடந்த “நமக்கு மேலே ஒருவன்டா” எனும் மாமாவின் முதலாவது வில்லுப்பாட்டு நிகழ்வோடு ஆரம்பித்து இங்கிலாந்து BUDS அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற விழாவில் “விண்ணுலகத்தில் விபுலாநந்தர்” எனும் வில்லுப்பாட்டின் இடையே மட்டக்களப்பு பற்றிய பாடலைத் தான் பாடியபோது எல்லோரும் எழுந்து நின்று கரகோசம் வழங்கியவேளை  தனக்கு ஏற்பட்ட மெய்சிலிர்த்த சம்பவம் வரை எம் உரையாடல் மிக இனிய நினைவுகளுடன் பரந்தது.

       அதிலிருந்து நாடகம் பற்றித் திரும்பிய எமது உரையாடல் மட்டக்களப்பில் அப்போதிருந்த நாடக வரலாற்றையும் நாம் இப்போது இழந்துவிட்ட கலைகளையும் கலைஞர்களையும் ஞாபகப்படுத்த மறக்கவில்லை. இதன்போது “யமலோகத்தில் வீசு கதிர்காமத்தம்பி ”, “சுடுசாம்பலாப் போச்சு போடியாரே”, “நாஸ்த்திகன் நல்லதம்பி ” போன்ற தான் எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பற்றியும் அதில் வீர வசனம் பேசவேண்டிய இடத்தில் கத்தி உடைந்து பிடி மட்டும் எஞ்சியிருந்தபோது சமயோசிதமாக “உன்னை வீழ்த்த கத்தி தேவையில்லை. இந்தப் பிடியே போதும்” என தான் பேசிய வசனங்களைப் பேசிக் காட்டியவேளைகளில் மாமாவை ஒரு நடமாடும் திரையரங்காகவே உணரமுடிந்தது. இரண்டு பாத்திரங்களின் கதைவசனங்களைப் பேசி நடித்துக் காட்டும் சந்தர்ப்பங்களில் குரல் , தொனி, செய்கை எனத் தான் உண்மையாகவே இரு வேறு நபர்களாக மாறியிருந்தார்.

    மாமா கதை சொல்லும் சந்தர்ப்பங்களில் தமிழ் மொழி தொரியாத சிங்கள இளைஞர்கள் கூட இவரின் அங்க அசைவுகளையும் மாமா எழுப்பும்  ஒலிகளையும் இரசிப்பதற்காகவே கூடுவதையும், பாடசாலைக்கு வராத பிள்ளைகளை வரவைப்பதற்காக மாமாவை  பாடசாலைகளில் கதைசொல்லவைத்து  அதிபர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு வரவைப்பதையும்  பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு மனிதனுக்குள் இத்தனை ஆளுமைகளா? வியந்து போனேன்.  இப்படியொரு கலைஞனைக் கருக் கொள்ள இனி செல்லத்தங்கம் அம்மாவுக்குப் பின் எந்தவொரு  தாய்கும் இயலப்போவதில்லை.

 இத்தனை திறமைகளுக்குள்ளும் மாமா கதைசொல்வதையே தனது பிரதான அங்கமாகக் கொண்டிருப்பது பற்றி வினாவியபோது “ ஏதாவது ஒரு துறையை உங்களுக்காகத் தேர்ந்தெடுங்கள் என்றோ ஒருநாள் அதில் நிச்சம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்ற மாமாவின் பதில் என்னையும் சிந்திக்க வைக்கத் தவறவில்லை.
          ஒரு சிறந்த இரசிகனாலேயே நிச்சயமாக ஒரு சிறந்த கலைஞனாக இருக்க முடியும் என்பது எனது கருத்து. அதனால், நீங்கள் இரசித்துப் பார்க்கும் நகைச்சுவை நடிகர்கள் பற்றிய எனது கேள்விக்கு தங்கவேலு, கிருஷ்ணமதுரம் எனக்கூறி தற்போது நகைச் சுவைகள் சிரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அப்போதைய நகைச்சுவைகள் மக்களை சிந்திக்கவும் வைப்பதாகவும் தற்போதைய நகைச்சுவைகளுக்கும் அப்போதைய நகைச்சுவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும் அந்தக் காலத்து இலக்கியங்கள் கருத்தாளம் மிக்கதாகவும் இப்போதுள்ளவை அவ்வாறில்லை என்ற தனது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியபோது சமூக அக்கறையுள்ள கலைஞனை அவரில் கண்டேன். தற்போதைய கலைஞர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் செய்தி என்ன என்ற வழமையான கேள்விக்கு இதுதான் பொருத்தமான நேரம் எனக்கருதிக் கேட்டபோது “ நகைச்சுவையோடு ஒரு நல்ல அறிவுரையையும் மக்களுக்குக் கொடுக்கவேண்டும்” என அவர் கூறிய பதில் இதை வாசிக்கும் ஏதாவது ஒரு கலைஞனைப் பாதித்திருந்தால் அதனையே எனது எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்.

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? மாமாவுக்கு மிகவும் பிடித்த உணவு எதுவென்று? இது அவரிடம் எனது நிறைவுக் கேள்வி. அவர் அதற்குப் “பாயாசந்தான்” எனக் கூறிய விதம் என் நாக்கில் இனிப்பை  உண்டுபண்ணியது. 
அதே இனிப்போடும் நிறைந்த மகிழ்வோடும் அங்கிருந்தும் அவர்கள் இருவரிடமிருந்தும் விடைபெறும் நேரம் மாமாவிற்கான அடுத்த வேலை தயாராக இருந்தது. மாகாணமட்டக் கதைகூறல் போட்டிக்காக பாடசாலை மாணவியொருவருக்குப் பயிற்சியளிப்பதே அது. அதன்போதும் எங்களுடன்  உரையாடிய அதே ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தனது அடுத்த தலைமுறைக்கான ஊடுகடத்தலை ஆரம்பித்திருந்த மாமாவிடமிருந்து விடைபெற்றாலும் வீதியெங்கும் அவரின் பசுமை நினைவுகளுடனேயே பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த மனது.

நேர்காணல் : ச.பா.மதன் | ஒளிப்படம் : க.டணிஸ்க்கரன்