ஆனந்தத்தில் ஓர் அனல்

 ஆனந்தத்தில் ஓர் அனல் எனும் வித்தியாசமான புனைபெயரில் ஓவியர்; கவிஞர், ஆசிரியர் என பன்முக ஆற்றலை வெளிப்படுத்திச் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள இளைஞனே விநாயகமூர்த்தி ஜீவராஜா.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான துறைநீலாவணை எனும் அழகிய ஊரைப் பிறப்பிடமாகவும் தற்போது   நாவிதன்வெளி - குடியிருப்பு முனை இல் வதித்து வருபவருமான இவர் விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகனாவார். பல் துறைகளில் இவரின் ஆற்றல் வெளிப்பட்டாலும் ஓவியம் மூலம் அனைவரின் மனங்களையும் கட்டிப் போடும் வல்லமை இவரின் கைகளுக்கும் தூரிகைக்கும் இறைவன் கொடுத்திருக்கும் வரம்.
இவருடன் உரையாடும் வாய்ப்பு கடந்த 22.12.2014 அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ.பி.பாரதிராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கலைஞர் கொரவம் - 2014 எனும் நிகழ்வில் ஏற்பட்டது. பாரதிராஜா அவர்களிடமிருந்து கொரவம் பெற்ற மகிழ்வோடு எம்மிடம் மனம் திறந்து பேசினார் ஆனந்தத்தில் ஓர் அனல்…

ஆனந்தத்தில் ஓர் அனல் என்ற உங்கள் வித்தியாசமான புனைபெயர் பற்றிக் கூறமுடியுமா?
   என்னைக் கவர்ந்த கவிஞர் மு.மேத்தா. அவரது கவிதைகள் எளிமையாகவும் இலகுவாகவும் புரிந்து கொள்ளக் கூடியவை. அவரது கவிதைத் தெகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது  “சிரிப்பு ஒரு நெருப்பு” இக்கவிதை எனது வாழ்க்கையின் படிகளை யதார்த்தமாக உணர்த்துவது போன்றிருந்தது. ஆகவேதான் சிரிப்பு என்பதை ஆனந்தம் என்றும் நெருப்பு என்பதை அனல் என்றும் மாற்றி ஆக்கங்களை வெளியிடுகின்றேன்.

தற்போது கிழக்கிலே ஒரு சிறந்த ஓவியக் கலைஞராக திகளும் தங்களது இளமைக்காலம் பற்றிக் கூற முடியுமா?
 
வறுமையுடன் பிறந்த என் இளமைக்கல்வி மிகவும் சவாலானது. துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 1993 இல் ஆரம்பமான எனது கல்வி அக்கரைப்பற்று விபுலாநந்தா சிறுவர் இல்லத்தில் இணைந்த பின் மாற்றம் பெற்றது. அதன் பின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் உயர்கல்வியைக் கற்று 2005 இல் சித்திரப்பாடத் துறையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று 2009 இல் நிறைவு செய்தேன்
இக் காலப்பகுதியில் தான் எனது கவிதைகளும் அதிகம் பிரசவமானது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண யுத்த நிலைமைகளால் உணர்வு ரீதியாகவும் உளரிதியாகவும் இன்னும் கூறப்போனால் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டேன். அக்காலத்தில் ஏற்பட்ட எனது வலிகளை உணர்வுகளை ஓவியங்கள் வாயிலாகவும் கவிதை வாயிலாகவும் வெளிப்படுத்தத் தொடங்கினேன். அது அக்காலத்தில் எனக்குப் பல இரசிகர்களைப் பெற்றுத்தந்தது. உணர்வால் வரையப்பட்டவை என்பதால் இரசிகர்களின் கவனத்தை ஈர்திருந்ததை அவர்களின் பின்னூட்டல் வாயிலாக என்னால் அறிய முடிந்தது. நாட்டின் யுத்தத்தின் வலிகளை வெளிப்படுத்த நான் அவற்றைப் பயன்படுத்தியது தற்போது ஓரளவு ஆறுதலைத் தருகின்றது.

பல்கலைக்கழகத்திற்குப் பின்னான உங்கள் வாழ்வுபற்றிச் சற்றுக் கூறமுடியுமா?
  2010 இல் திருக்கோணமலையில் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் சமூக இணைப்பிற்கான ஆய்வு உதவியாளராக பதவியேற்ற நான் சமாதானமும் விழுமியமும் எனும் தொனிப் பொருளுக்கமைவாக மூவின மாணவர்களையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டேன். பின்னர் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரிந்த எனக்கு 2014 இல்  போட்டிப் பரீட்சை மூலம் காலி திவித்துறை மகாவித்தியாலயத்தில் கிடைத்த சித்திரப் பாடத்துறை நியமனம் ஆத்ம திருப்தியைத் தந்தது.

நீங்கள் இத்துறைக்குள் கால்பதிக்கக் காரணமானவர்கள்யாவர்?

எனது ஆரம்ப குரு எனது தந்தை ஆரம்ப காலத்தில் பாடல்களின் ஊடாகவே ஓவியத் துறைக்குள் ஈர்க்கப்பட்ட நான் முதல் வரைந்த ஓவியம் புத்த பகவான். புத்த பகவானின் ஓவியத்தின் கை முத்திரைகள் அழகாக இருப்பதைக் கண்ட அனைவரும்  எனக்குள் ஓவியத்துறை உள்ளதை பாராட்டியதுடன் நானும் உணர்ந்து கொண்டேன். அதன் பின் திருக்கோயில் வலயத்தில் சித்திரப் பாடத்துறை உதவிப் பணிப்பாளராக இப்போது பதவி வகிக்கும் திரு.சு சிறிதரன் அவர்கள் எனக்குள் இருந்த ஆற்றலை வெளிப்படுத்த உதவி புரிந்தார். ஆரம்பத்தில் சிறிய பதாதைகளை நான் எழுதும் போது சில நுனுக்கங்களைக் கற்றுககொடுத்த அவர் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் தற்போதும் உள்ள பகவற்கீதைக் காட்சியை  அவருடன் இணைந்து வரையும் சந்தர்ப்பதை தந்து என்னை ஊக்கப்படுத்தினார் அதே வேளை இல்லத்தின் தலைவரும் இறைபணிச் செம்மலுமான திரு.த. கயிலாயப்பிள்ளை அவர்கள் ஸ்கிறீன் பெயின்ரிங் எனச் சொல்லப்படும் பயிற்சிக்கு என்னை அனுப்பி வைத்தார்  அப் பயிற்சி நெறி என்னை மேலும் வழப்படுத்தியதுடன் இன்றும் உதவி புரிகின்றது.

உங்களது ஓவிய வெளிப்பாடுகளை எங்கு காணலாம் ?

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 25 இற்கும் மேற்பட் பாடசாலைகளில் சுவர்களை எனது ஓவியங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அதே போன்று பல ஆலயங்களிலும் எனது ஓவியங்களை நீங்கள் காணலாம்.

கலைஞர் கௌரவத்தில் ஓவியத்துக்கான கௌரவத்தைப் பெற்ற சந்தர்ப்பத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பத்மஸ்ரீ.பெ.பாரதிராஜா அவர்களின் உருவப்படத்தை வரைந்து அவருக்கு வழங்கியபோது அவரின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் மல்கியதை நாங்கள் அவதானித்தோம் இதுவே ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் உயரிய கௌரவமும் மகிழ்ச்சியும் ஆகும். இதேபோன்று வேறு ஏதாவது மறக்கமுடியாத சந்தர்ப்பங்கள் உண்டா?


துறைநீலாவணை உச்சிமாகாளியம்மன் ஆலயத்தில் 7 x 14 அடித் தகரத்தில் வரைந்த அம்மனின் ஓவித்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்தபோது  இந்தியாவின் தலைசிறந்த ஓவியரும் விரிவுரையாளருமான இராஜராஜன் அவர்களின் பாராட்டைப் பெற்றது மன மகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்தர்ப்பம் எனலாம்.

உங்களது ஆக்கங்கள் இதுவரை எந்தெந்த ஊடகங்களில் வெளிவந்துள்ளன?

வீரகேசரி வாரப்பத்திரிகை , தினகரன், தினமுரசு, மித்திரன் ஆகியவற்றில் எனது 50 இற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்ததுடன் தினக்குரல் சினிகுரல் பகுதியில் மற்றும் கவிஞன் சிற்றிதழின் 24 ஆம் இதழின் அட்டையிலும்  எனது ஓவியங்கள் வெளியாகி உள்ளன.

இறுதியாக உங்கள் எதிர்கால இலட்சியம் பற்றிக் கூறுங்கள்?

எதிர்கால இலட்சியங்கள் அதிகமாகவே உள்ளன. எனினும் வுhய்பின்மையும் குடும்பச் சூழலும் முட்டுககட்டையாகத் திகழ்கின்றன அதற்கான அனுசரணை வழங்க யாராவது முன்னருவார்களானால்  ஓவியத் துறையில் தேசிய ரீதியாக மட்டுமின்றி  சர்வதேச ரீதியிலும் நாட்டிற்றுப் பெருமைசேர்க்கத் தயாராக உள்ளேன்.

நேர்காணல் : சதாசிவம் மதன்

இந்தக் கலைஞனை நீங்களும் நேரடியாகப் பாராட்ட விரும்பினால்

தொலைபேசி எண்    :+94754310479, +94771530122
ஃபேஸ்வுக் முகவரி : 


இவரின் ஆக்கங்கள் சில.....