கூத்துருவாக்கத்தில் களரியடித்தல்

படையாண்டவெளிக் கிராமத்தில் 12.08.2017 அன்று வாளவீமன் தென்தோடிக் கூத்துக்கான 'களரியடித்தல்' வழமையாகக் களரியடிக்கும் இடத்தில் நடைபெற்றது. அவ்விடத்திற்குச் சென்று அக்கூத்தின் செயற்பாட்டையும் அதில் கூத்தர்களும் ஊர்மக்களும் பங்குகொள்ளும் முறைமையினையும் பங்கு பற்றி அவதானிக்க (participatory observation) முடிந்தது. கூத்தரங்கின் மிக முக்கியமான செயற்பாடு இந்த களரியடித்தலாகும். இதனைக் 'கூத்துப் பழகுதல்', 'கூத்தடித்தல்' என்று அழைப்பது வழமை. இது மாருதம் கலைக்கழகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். இக்கூத்தின் முன்னீடும் முகாமையும் ந.சுப்பரமணியம் அவர்களால் திறன்பட இடம்பெறுகின்றது. இவர் 70 வயது நிரம்பியவர். கூத்துத் தொடர்பான அனைத்து நடைமுறையும் தெரிந்தவர். இதன் களரி முகாமையாளராக சீ.லோகநாதன் செயற்படுகின்றார். இக்கூத்தின் அண்ணாவியார் மட்டக்களப்பில் பல இடங்களில் வடமோடி தென்மோடிக் கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றும் ப.கதிர்காமநாதன் ஆவார். கொப்பியாசிரியராக கு.இந்திரன் செயற்படுகின்றார்.
கூத்து உருவாக்கத்திற்கான களரியடித்தலின் முக்கியமான செயற்பாடு செய்து செயற்படுதலினூடாக மக்களை இணைப்பதும் கூத்தர்களை பயிற்சியில் ஈடுபடவைத்து அவர்களது ஆட்டம், பாட்டு, நடிப்பு, கதைப் பின்னல், அரங்கவெளியான களரியின் பயன்படுத்துகை, பாத்திரவாக்கம், கூத்தரின் மெய்நிலை அசைவு, கைப்பொருள் மற்றும் காண்பியத்தின் பயன்பாடு எனப் பல கூத்தரங்க நுட்பமுறைகளையும் கற்று உள்வாங்கி படைப்பாக்கத்தை ஏற்படுத்தும் களமாகும். 'கூத்தின் உருவாக்க மையம் இந்தக் களரியடித்தலாகும்'. கூத்தைக் கற்பிக்கும் விரிவுரையாளர் என்ற ரீதியில் களத்திற்குச் சென்று அதன் ஆழமான செயற்பாட்டையும், பயிற்சி கொடுக்கும் முமையையும், ஊருக்கு ஊர் கூத்தழகியல் பற்றி வெளிப்படும் தனித்துவங்களையும், அடையாளம் கண்டு அதனைக் கற்றலுக்குரியதாக்கி பின் கற்பிக்கும் கோட்பாட்டுடன் இணைத்து மாணவர்களை செயல்மையத்தில் ஈடுபடுத்தி மாணவர் தேர்ச்சி மையத்தை வலுவாக்க வழிப்படுத்துவது பிரதானமானதாகும். காலனிய ஆதிக்கத்தின் அதிகார அரங்கவெளிப்பாட்டை எதிர்பதற்கும் உள்ளுர் ஆற்றுகை மையத்தை வழிப்படுத்துவதற்கும் வலுவாக்குவதற்கும் கென்னியாவில் பேராசிரியர் நுகூகி வாத்தியாங்கோ உருவாக்கிய அரங்க முறைமையில் மிக முக்கியமானது. எழுத்துரு உருவாக்கத்தையும் ஒத்திகையையும் திறந்த வெளியிலும் அனைவரும் கூடும் இடத்திலும் நடைமுறைப்படுத்துவதாகும். ஏனெனில், இதன்போதே ஊர்மக்கள் ஒன்றுகூடி அபிப்பிராயம் தெரிவிப்பது, ஒத்திகையைப் பார்ப்பது, அழகியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, ஆற்றுகையாளர்களை இனங்கண்டு அதனையும் அதன் கதையையும் ஊருக்கு ஊர் பரவலாக்க வைப்பதற்காகும். கடைசி ஆற்றுகை என்பதை அவர் எதிர்த்தார். ஆனால், இந்த முறைமை எங்களிடம் கூத்தரங்கில் நிறைந்துள்ளது. கூத்துருவாக்கத்திற்கான களரியடித்தலின்போதும் அதன் தொடர் செயற்பாட்டின்போதும் இதுவே நடைபெறுகின்றது.
வாளவீமன் நாடகம் வடமோடிக் கூத்து களரியடித்தல் வழமையாக களரியடித்து கூத்துப் பழகும் வெளியை உணர்த்தியது. நான் 2012இல் பண்டாரியாவெளியில் கு.பொன்னம்பலம் அண்ணாவியாரால் பழக்கப்பட்டு 25 களரி ஏற்றப்பட்ட 'நொண்டி நாடகம்' தென்மோடிக் கூத்தில் ஆடிய கூத்தர்களையும் அங்கு கண்டேன். ஒன்று கூடி பல கதைகளை எடுத்தியம்பினர். மிகவும் உச்சாகமான வெளியாக அமைந்தது. அதில் நொண்டிக்கு ஆடிய சுந்தரலிங்கம் இதில் பெரிய வாளவீமனுக்கும், கட்டியக்காரன், தோழி, சின்னக்கோன் ஆகிய கூத்துக்காடிய யோகிதன் உதவி அண்ணாவியாகவும், அரசனுக்காடிய இந்திரன் அரவானுக்கும் மந்திரிக்காடிய புவனசிங்கம் கடோற்கஜனுக்கும் ஆடினர். கூத்துக்கலைஞர் சுந்தரலிங்கம் அன்புடன் அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
இக்கூத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்குகொண்டு ஆடுகின்றனர். சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர் ஆடுகின்றமை கூத்தரங்கின் எதிர்கால வலுவாக்கததை வெளிப்படுத்தியது. கூத்துக்கான களரியடிக்கும் வெளியில் ஊர் பெரியோர்கள், பெண்கள், முதியோர், மூத்த கூத்தர்கள் எனப் பலரும் பங்குகொண்டு வசதிக்கேற்ப அமர்ந்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். இன்றைய உலகமயமாக்கற் சூழலில் தனிமனிதர்களாக்கப்பட்டு லாபத்தைத் தேடியலையும் வெயில் இவ்வாறான கூட்டுச் செயற்பாடும், சுய வெளிப்பாடும், படைப்பாக்க மகிழ்வும் பிராதான செயற்றிட்டமாக அமைந்தது.
கூத்தின் ஆடுகளத்தில் பல்வகைமை செய்பாடுகள் நடைபெற்றன
வாளவீமன் நாடகம் 40 வருடங்களுக்கு முன்னர் படையாண்டவெளியில் ஆடப்பட்டுள்ளது என்பதை இக்கூத்தில் வாளவீமனுக்காடிய கூத்தர் ஒருவர் குறிப்பிட்டார். தனது 17வது வயதில் ஆடியதாகவும் அதில் ஆடியோர் பலர் இன்று இல்லை என்றும் கூறப்பட்டது. இக் கூத்து அண்ணாவியார் மானாகரால் பழக்கப்பட்டுள்ளது. இவரது ஆளுமையும் மத்தளடியின் தனித்துவமும் ஆடல், பாடல்களைப் பழக்கும் நிபுணத்துவமும் கூத்தர்களால் எடுத்துரைக்கப்பட்டது. படையாண்டவெளியில் மானாகர் அண்ணாவியாரால் அனுருத்திரன் நாடகம் தென்மோடிக் கூத்து, சித்திரசேனன் சண்டை வடமோடிக் கூத்து, குருக்கேத்திரன்போர் வடமோடிக் கூத்து, தருமபுத்திரன் நாடகம் வடமோடிக் கூத்து, வாளவீமன் நாடகம் தென்மோடிக் கூத்து, பகாசுரன் சண்டை வடமோடிக் கூத்து என்பன பழக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் பெரும் புகழ் அடைந்ததாகவும் பேசப்பட்டது. அண்ணாவியார் மானாகர் 'பழக்குவதில் திறன் படைத்தவர். சொல்லிக் கொடுத்ததைத் திரும்பச் சரியாகச் ஆடிக்காட்டிப் பாடாவிட்டால் மத்தளத்தால் அடித்துவிடுவார். இதனால் சரியாக ஆடிமுப்பதாக' இதில் வளவீமனுக்காடியவர் குறிப்பிட்டார். அனுபவமும் செவியேறலும் கொண்ட மானாகர் அண்ணாவியார் மிகத் தரமானப் பாடல்களை உள்வாங்கி பழக்குபவர். இதனைத் தொடர்ந்து பல ஞாபங்கள் கோர்வையாக வெளிக்கிளம்பின. கூத்து உருவாக்கத்திற்கான களரியடித்தல் வெளி இவ்வாறான ஞாபகப்படுத்தலையும் சிந்தனைக் கிளறலையும் கதை சொல்லுதலையும் இயல்பாகக் கொடுக்கும். இதன் உயிர்த்துவத்தை இதில் காணமுடிந்தது. 'பகாசுரன் சண்டையில் பகாசூரனுக்கு ஆடிய கூத்துக்காரர் மிகவும் தரமான ஆட்டக்காரர். சண்டைக்கட்டங்களை வீரத்துடன் எடுத்துக்காட்டும் திறன் படைத்தவர். இவர் 2ம் களரியின்போது அவரது சண்டைக் கட்டம் முடிந்ததும் பார்த்திருந்த ஊர் மக்களின் அறம்பட்டு இறந்துவிட்டதாகவும்' கு.இந்திரன் எனும் கூத்தர் குறிப்பிட்டார். பழைய கதை இளம் சமூகத்திற்குக் கையளிக்கும் வெளியாகவும் அமைந்தது.
இன்றைய களரிடித்தலின்போது ஆட்டம் பாட்டு தவறும் பட்சத்தில் அதனை அண்ணாவியாரும், கொப்பிக்காரரும் சொல்லிக்கொடுப்பதற்கு அப்பால், சுற்றியிருந்து பார்த்த கூத்தர்களும் அண்ணாவிமாரும் குறுக்கிட்டு திருத்திச் சொல்லிக்கொடுத்தனர். பாடல் தவறும் பட்சத்தில் பாடலைப்பாடிக் காட்டி திருத்தினர். இவர்கள் ஏற்கனவே கூத்தில் அனுபவம் பெற்றவர்களாவர். சில வேளைகளில் கூத்துக்காரன் பாடி முடிப்பதற்கு முன்னர் பார்போருக்குள் இருந்து பாட்டுத்தெரிந்தவர் அப்பாடலைப் பாடி முடித்துவிடுவார். இது அவர் கூத்தில் அனுபவம் உடையவர் என்றும் அவரது திறனை அவ்விடத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
முன்னீடுகாரர் மிகவும் கண்காணிப்புடன் தனது நிருருவாக வேலைகளை முன்னெடுத்தார். அத்தோடு, கூத்தாடும்போதும் கூத்தர்கள் தவறுவிடும்போதும் அதனைப் பாடிக்காட்டி உறுக்கி எடுத்துக் கொடுத்தார். 
ஒரு கூத்துக்காரர் தனது கூத்துக்கான வரவு முடிந்த பின்னர் அவர் அவசரமாகச் செல்லவேண்டியிருந்ததால், அண்ணாவியார் மூலம் முன்னீடுகாரரை அணுகி தயவுடன் சென்று கூத்து முடியும் முன்னர் வருவதாக அனுமதி கேட்டு அவரது அனுமதியுடன் சென்றதையும் அவதானிக்க முடிந்தது. இது கூத்தின் முகாமைத்துவத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியது.
40 வருடத்திற்கு முன்னர் ஆடிய வாளவீமன் கூத்திற்கு உடுப்புக்கட்டியவர் வேலியார் (சூசைப்பிள்ளையின் நண்பர்) என்றும் கரப்புடுப்பும் பூமுடியும் கொண்டு ஆடப்பட்டது என்றும் கூறப்பட்டது. கரப்புடுப்பைக் அணிந்து 'ததித் துளாதக ததிங்கிணத் திமிதக, ததித் துளாதக ததிங்கிணத் திமிதக' எனும் தாளத்திற்கு ஆடும்போது அது மிக அழகாகவும் காத்திரமாகவும் அமையும்.
வழமைபோல் உணவு தந்து உபசரிக்கப்பட்டது. இது மிக முக்கியமான செயற்பாடாக களரியடித்தலின்போது நடைபெறும். இது எட்டாவது களரியாகக் காணப்பட்டதால் இன்றைய தினத்திற்குரிய 'சோத்துமுறை'க்குரியவர் சமைத்து தனக்கான கடமையினைச் செய்தார்.
இக்கூத்தில் கட்டியக்காரனுக்கு அ.யோதிசீலனும், கிருஸ்ணருக்கு வி.தியாகராசாவும், லக்சுமிக்கு சு.முகுந்தனும், சுந்தரிக்கு கு.கருணாகரனும், தோழிமாருக்கு அ.யோதிசீலனும், க.நகுலேஸ்வரனும், அருச்சுனனுக்கு ரிலக்சனும், சுபத்திரைக்கு ம.செல்வக்குமாரும், சின்ன வாளவீமனுக்கு அ.பேரானந்தராஜனும், கன்னனுக்கு கோ.ஜெகதீசனும், துரியோதனனுக்கு அ.அழகுதுரையும், துரியன் பெண்சாதிக்கு சு.முகுந்தனும், புலேந்திரனுக்கு ச.மேகநாதனும், இலக்கணகுமாரனுக்கு சி.அரசதுரையும், இலக்கணகுமாரனின் தோழனுக்கு ச.டினேஸ்நாந்தும், பறையறைவோனுக்கும் வல்லரக்கனுக்கும் கோ.ஞானசெல்வமும், பெரிய வாளவீமனுக்கு சி.சுந்தரலிங்கமும் கடோற்கஜனுக்கு கெ.புவனசிங்கமும், அரவானுக்கு கு.இந்திரனும், தொந்திச்செட்டிக்கு க.சுவுந்தராசாவும் நாட்புடையருக்கு கு.இந்திரனும் கெ.புவனசிங்கமும், கிழவிக்கு ம.செல்வக்குமாரும் ஆடுகின்றனர். மிகப் பெரிய குழுவை உள்வாங்கி ஒன்று கூடி நாடத்தும் போது அதன் ஒற்றுமையையும், கூடிச் செயற்படுவதையும், முகாமைத்துவத்தின் வினைத்திறனையும் எடுத்துக்காட்டுகின்றது. கூத்தர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட கூத்தினை (பாத்திரத்தை) உடல் அசைவுடனும் குரல் வெளிப்பாட்டுடனும் களரி வெளியில் ஆடி நடிப்பை வெளிப்படுத்தி பாத்திர உருவாக்கத்தைக் கொண்டுவருகின்றமை சிறப்பம்சமாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் இக்கூத்தில் ஆடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. புதிதாகக் கூத்தாடும் கூத்தர்களுக்கு அண்ணாவியாரும் மூத்த கூத்தர்களும் பாத்திரவாக்கத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு சூழமைவிலும் கதை ஓட்டத்திலும் ஆடியும் பாடியும் நடித்தும் காட்டி சொல்லிக்கொடுக்கப்பட்டது. கொச்சகம், கொச்சகத்தரு வரும் முறை முக்கியமானது இதனை எடுத்துக்காட்டி வெளிப்படுத்தப்பட்டது. வல்லரக்கனுக்கு ஆடும்போது, 'இறுக்கமாகவும் வேகமாகவும் கோபத்தோடும் பாடி வீரத்துடன்' ஆடச்சொல்லிக் கொடுக்கப்பட்டது. 'மண்டைகிளிய அடிப்பேன்...' எனும் பாட்டிற்கு கூத்துக்காரர் சரியாக உணர்ந்து செய்யாததால், ஒரு கூத்தர் 'எது மண்டை' எனக் கேட்டு சரியாக செய்து காட்டினார். இது கூத்தின் உரையாடல் அரங்கப் பாணியை (Forum Theatre style) வெளிப்படுத்தியது.
அதன்போது, வெளியில் நின்ற அரசடித்தீவைச் சேர்ந்த அண்ணாவியார் வீரமாக உடலை அசைத்து ஆடிக்காட்டிச் சொல்லிக்கொடுத்தார். மற்றுமொருவர் 'இறுக்கமான் கடினமான பாட்டுக்களைக் கூத்துக்காரர் பாடமாக்க வேண்டும். துண்டு துண்டாக்கணும். அப்போதுதான் தெளிவாகவும் அழுத்தமாகவும் பாட முடியும்' என வெளியில் நின்று விதந்துரைத்தார். துண்டு துண்டாகப் பாடி உரையாடும் முறைமையை ஸ்ரனிஸ்லாவஸ்க்கி கூறி நடிப்பைக் கொண்டுவர அவசியம் என்றார். கூத்தர்கள் மத்தியில் இவை மிக இலகுவாகப் பயிலப்படுவதை அறியலாம். 'கதாயுதத்தை மாற்றி வலது கையால் நடித்துக்காட்டு' என்று மற்றுமொரு கூத்தர் எடுத்துக் கூறி கூத்தின் அழகியல் வெளிப்பாட்டை இன்னுமொரு தளத்திற்குக் கொண்டுவந்தமை சிறப்பம்சமாகும். 'வேகமான கூத்து நிற்காது ஆட வேண்டும்' என களரிக்கு வெளியில் இருந்து கூத்துப் பார்த்தவர் தனது கூத்து வாலாயத்தை வெளிப்படுதினார். கூட்டு இணைவினால் கூத்தின் பாத்திரவாக்கம் வலுவாக்கப்படுவதை கூத்தரங்கின் களரியடித்தல் வெளி கற்றுத்தந்தது.
அத்தோடு, இந்த களரியடிக்கும் வெளி தமது நட்பை வலுப்படுத்தியது. வேறு ஊர்களில் ஆடப்படும், ஆடப்பட்ட கூத்துக்கள் பற்றியும் பேசுக்கொள்ளப்பட்டது. மகிழடித்தீவில் அலங்காரரூபன் நாடகம் தென்மோடிக் கூத்து ஆடப்படுவதாகவும், மணப்பிட்டியில் 'வைகுந்தம்' வடமோடிக் கூத்து ஆடுவதாகவும் வெள்ளிக்கிழமை சதங்கை அணி விழா நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இது வௌ;வேறு ஊர்களில் கூத்து ஆடும் விதத்தினை வலுப்படுத்தியது.
தென்மோடிக் கூத்தில் சண்டை கட்டங்கள் அதிகம் உள்ள கூத்து வாளவீமன் நாடகம் தென்மோடிக் கூத்திலாகும். இதனை இதன் களரியடித்தலின்போது உணரமுடிந்தது. இவ்வாறான காட்சிகளில் கொச்சகம், பொடியடி, ஒற்றைச் சீர், நாலடி, வாள் சுழற்றியாடுதல் என்பன வெளிப்படும். பாட்டுக்கான மெட்டுக்கள் வித்தியாசமானதாகவும் அமையும்.
களரி அடித்தலின்போது வேறு அண்ணாவிமாரும் மத்தள அடிக்கத் தெரிந்த கூத்தரும் மத்தளத்தை அண்ணாவியாரிடம் இருந்து மாறிக் கட்டி அடிக்கும் போக்கு உண்டு. இது பழக்கும் பிரதம அண்ணாவியாருக்கு ஓய்வைத் தருவதோடு புதிதாக வந்து மத்தளம் அடிக்கும் அண்ணாவியார் தனக்கான ஆளுமை, திறன், ஆற்றலை வெளிப்படுத்தி அடையாளப்படுத்தும் களமாகவும் உள்ளது. அரசடித்தீவைச் சேர்ந்த க.தங்கராசா அண்ணாவியார் மத்தளம் அடித்து பழக்குவதற்கு பெரும் துணை புரிந்தார். இவர் அண்மையில் குருக்கேத்தின்போர் வடமோடிக் கூத்து பழக்கி 25க்கு மேற்பட்ட களரியேற்றப்பட்டது. நான் குருக்கள்மடத்தில் ஆடப்பட்ட குருக்கேத்திரன்போர் கூத்தில் குருக்கேத்திரனுக்கு ஆடியதையும் உரையாடினேன். தங்கராசா அண்ணாவியாரை உருவாக்கிய அண்ணாவிமார்களான மானாகர், வைரமுத்து ஆகியோர் முக்கியமானவர்கள் எனப்பட்டது. தங்கராசா அண்ணாவியார் அரசடித்தீவில் 17ம் 18ம் போர், குருக்கேத்திரன்போர், நல்லதங்கால் நாடகம், தக்கன் யாகம் ஆகிய கூத்துக்களைப் பழக்கியுள்ளார்.
இக்கூத்தில் வாளவீமனுக்கு ஆடும் சுந்தரலிங்கம் மகவும் தரமான கூத்துக்காரன். இவர் மட்டக்களப்பின் பிரபலமான மூத்த அண்ணாவிமார்களான நாகமணிப்போடி, நோஞ்சிப்போடி ஆகியோரிடம் கூத்துப் பழகி கைதேர்ந்த கூத்துக்காரராக விளங்குகின்றார். 1963ம் ஆண்டு பிறந்த இவர் 22வது வயதில் இரணியசம்காரத்தில் கிருஸ்ணருக்கு, நரசிங்கருக்கும் ஆடியவர். இதனைப் பழக்கியவர் நோஞ்சிப்போடி அண்ணாவியார். அதன் பின்னர் அலங்காரரூபன் நாடகம் பழக்கப்பட்டது. இதனைப் பழக்கியவர் நாகமணிப்போடி அண்ணாவியார். இதில் அலங்காரரூபனுக்கு ஆடுடினார். இக்கூத்து 26 இடங்களில் களரியோற்றப்பட்டது. இராமர் அண்ணாவியார் பழக்கிய குருக்கேத்திரன் போரில் அருச்சுனனுக்கும், மதுரவாசன் நாடகத்தில் வீமனுக்கும் ஆடிப் புகழீட்டினார். 2012இல் பொன்னம்பலம் அண்ணாவியார் பழக்கிய நொண்டி நாடகத்தில் நொண்டிக்கு ஆடி புகழீட்டி பெருமை சேர்த்தவர். 2017 வாளவீமன் நாடகத்தில் பெரிய வளவீமனுக்கும் ஆடுகின்றமையும் குறிப்படத்தக்கது. 
எனவே, கூத்துருவாக்கத்திற்கான களரியடித்தல் வெளி பல்வகைமை செய்பாடுகளை வளர்தெடுக்கும் களமாகும். கூத்தின் ஆற்றுகை அழகியல் மாத்திரமால்ல அதன் சமுதாயச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தி செயற்படவைக்க உதவுகின்றது. ஊர்சார்ந்த கூத்துச்சார்ந்த கதைகளை பரிமாற்றும் வெளியாகவும் உள்ளது. இவ்வாறு கூட்டாகச் சேர்;ந்து செயற்ப்படுவதை கூத்து வெளியில் காணலாம். இது படைப்பாக்க ஆற்றலை வெளிப்படுத்தும் முறைமையாகும்.

திரு சு.சந்திரகுமார்,
முதுநிலை விரிவுரையாளர்,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.