மட்டக்களப்பில் கூத்துக்கலையின் செம்மைப்படுத்தலும் மீளுருவாக்கமும்


கூத்துக்கலையர்னது 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து செம்மையாக்கம் என்ற பெயரோடும் அதனைத் தொடர்ந்து சிற்சில மாற்றங்களுடன் சமூக உள்ளடக்கத்துடனும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து மீளுருவாக்கம் எனும் பரிமாணத்துடன் மட்டக்களப்புக் கூத்தரங்கானது அன்றாடம் செயற்பாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது.
          மட்டக்களப்புப் பிரதேசத்தில் தென்மோடிக்கூத்து, வடமோடி, பறைமேளக்கூத்து, வசந்தன்கூத்து, மகிடிக்கூத்து ஆற்றுகை செய்யப்பட யாழ்ப்பாண பிரதேச வடமராட்சியில் காத்தான்கூத்தும் பருத்தித்துறையில் நாட்டைக்கூத்தும் ஏனைய தென்மோடி, வடமோடி, மகிடிக்கூத்து என்பனவும் நிகழ்த்தப்பட வன்னியில் கோவலன்கூத்தும் காத்தான்கூத்தும்த தென்மோடிக்கூத்தும் ஆடப்பட மன்னார் பேசாலையில் உடக்குபாஸ் கூத்துடன் ஏனைய வாசாப்பு , வடபாங்கு, தென்பாங்கு என்பனவும் பயில்நிலையிலுள்ளன.

   மலையகப் பெருந்தோட்டங்களில் காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் போன்றனவும் ஆடப்பட்டவண்ணமுள்ளன. சிற்சில இடங்களில் ஐரோப்பியர்களின் வருகை (1505 -1948) காரணமாக கூத்துக்கள் பாரம்பரியக்கூத்துக்குரிய அடிப்படை இயல்புகளை இழக்கலாயின.
  
  கூத்து, கூத்தரங்கத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே செம்மையாக்கம், சமூக உள்ளடக்கம் மீளுருவாக்கம் என்ற சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எம்மவர் மத்தியிலிருந்து தோன்றிய கொள்கைகளாகவுள்ளன. 

       ஈழத்திலே பயில்நிலையிலுள்ள கூத்து மரபானது பிரதேசத்துக்கு பிரதேசம் ஆடல் பாடல் மேடையமைப்பு, அவைக்காற்றுகை முறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிரதேசங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலையகம், மன்னார்) தத்தமக்குரிய இயல்புகளையுள்வாங்கி இன்றுவரை நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது. 

        கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்புத்தமிழர் மத்தியிலே ஆடப்படும் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து போன்றவை அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஊர்களிலும் நகர்ப்புறங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது.இத்தன்மையினை ஏனைய பிரதேசக் கூத்துக்களில் காணமுடியாதுள்ளது.
        கூத்தரங்குகளை மரபுவழிக்கலையெனவும், பாரம்பரியக்கலையெனவும்  உயிரணுவின் அரங்க வடிவங்கள் எனவும் அழைக்கலாம். 

இலங்கையரங்க வரலாற்றில் கலாசார அமைச்சின் கீழ் கலைக்கழகம் 1956 இல் நிறுவப்பட்டதோடு அதன் தலைவராக கந்தசாமி கணபதிப்பிள்ளை விளங்க 1957 - 1974 வரையான காலப்பகுதியில் தலைவராக சு.வித்தியானந்தன் அவர்கள் விளங்க 1975 இல் தலைவராக கா.சிவத்தம்பி விளங்கினார் என்றால் மிகையாகாது. வித்தியானந்தன் அவர்கள் 1957 ஆம் ஆண்டு காலத்தில் கலைக்கழகத் தலைவராக இருந்த காலப்பகுதிக்குள் கூத்தைப் பேணவும் அது பிறந்த இடத்திலேயே(ஊர்களில்) செல்வாக்குப் பெறவும் நகர்ப்புற மக்களின் செல்வாக்குப் பெறவும் உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது. சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் கூத்து செம்மையாக்கத்தின் மூலம் கூத்தை மக்கள் கலையாக மக்களிடத்தே தக்க வைத்தக்கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார் எனலாம்.

   இன்றைய காலப்பகுதியில் ஊர்களுக்குள் கூத்து சார்ந்து செயற்படுபவர்களுள் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களும் முக்கியமானவராகின்றார். அதாவது இன்று நேற்றல்ல சுமார் 1990 காலப்பகுதியிலிருந்து கூத்து சார்ந்து ஊர்களுக்குள் செயற்பட்டு வருகின்றார். கிரேக்கரங்கு உரோம அரங்கு, மத்தியகால அரங்கு, மறுமலர்ச்சிக்கால அரங்கு போன்ற அரங்கங்களை விட கூத்தரங்கமானது காத்திரமான அரங்காகவுள்ளதோடு கற்றுக்கொள்வதற்கு தேவையான நிறைய விடயங்களை கூத்தரங்கு உட்கொண்டுள்ளது என கூறுகின்றார். 
        சி.ஜெயசங்கரின் கூத்து மீளுருவாக்கம் பற்றி கூறும்போது “கூத்துக் கலையை அதாவது கூத்தின் அடிப்படையை மாற்றாமல் அதே நேரம் கட்டாயம் மாற்ற வேண்டிய கருத்துக்களை மாற்றி மீள உருவாக்குவதே கூத்து மீளுருவாக்கம் என குறிப்பிடுகின்றார்”.

 கூத்து மீளுருவாக்கம் எனும் இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தியல் எண்ணக்கருவானது 2002 ஆம் ஆண்டிலிருந்து இடையறாது வளர்ச்சியடைந்து செல்கின்றது. கூத்தரங்கின் சமுதாய அரங்க தன்மைகளையும் சமுதாய பல்கலைக்கழக அம்சங்களையும் சமகாலத்திற்குரிய வகையில் கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டு முறையாகவும் முன்னெடுக்கப்படும் சமுதாய அரங்கச் செயற்பாடே கூத்து மீளுருவாக்கமாகும்.

கலாநிதி.சி.ஜெயசங்கர்
  சி.ஜெயசங்கர் தனது சிந்தனைக்கமைவாகவும் கூத்து சமூகங்களது வரவேற்புக்கும் இணங்க 2002 இல் இருந்து சிம்மாசனப்போர் சீதை சூர்ப்பனகை வதை, அபிமன்யு இலக்கணன் வதம், அல்லியின் எதிர்வாதம், சுபத்திரை கல்யாணம் போன்ற கூத்துக்களையும் சிறுவர் கூத்தான மழைப்பழத்தையும் தயாரித்துமுள்ளார். திறந்த வெளியில் மனிதர்கள் கூடிக்களிக்கும் களங்களாக கூத்தரங்குகளை சமகால நோக்கில் வன்மையாக பயன்படுத்துவதோடு முழுக்க முழுக்க சமுதாய ஆதரவிலும் அர்ப்பணிப்பிலும் இயங்குவனவாகவே மீளுருவாக்கக் கூத்துக்கள் உள்ளன.

        மட்டக்களப்பில் 2002 இல் இருந்து இன்று வரைக்கும் தொடர் செயற்பாடாக பல்வேறு பிரதேசங்களிலும் மீளுருவாக்கக்கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்பட்டவண்ணமுள்ளன. கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளில் பங்கெடுத்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய திறனாளுமைகளை நாள்தோறும் பெற்றவண்ணமுள்ளனர். பெண் பிள்ளைகள் கூத்தாடுவதை விரும்பாத கூத்தாடினால் இழிவாகப் பார்க்கின்ற இந்த பொதுவான சூழலில் கூத்தாற்றுகைகளை செய்தது மட்டுமல்லாமல் கூத்தை எழுதுகின்ற ஆளுமையாளர்களாக உருவாக்கப்பெற்றிருக்கின்றமை மீளுருவாக்கக் கூத்தரங்கு பெற்று தந்த படிப்பினையாகவுள்ளது.

                இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஏனைய பல்கலைக்கழகங்களை விட மட்டக்களப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் செயற்பாடு சார்ந்து கல்வி கற்பதனை காணமுடிகின்றது. அதாவது களத்தில் இறங்கி மக்களுடன் வாழ்ந்து வேலை செய்யும் தன்மையினை ஏனைய கலைப்பாடங்களை விட நுண்கலைப்பாடம் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றது என்பதே உண்மையான விடயமுமாகும். மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் தன்மையானது, மனித மனங்களை அறியும் தன்மையானது அழகியற் துறை சார்ந்து, உளவியற் துறை சார்ந்து வேலை செய்பவர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் கூத்து சார்ந்த செயற்பாடுகளில்(தென்மோடிக்கூத்து, வடமோடிக்கூத்து, வசந்தன் கூத்து, காத்தான்கூத்து, புலிக்கூத்து) ஈடுபட்டவண்ணமுள்ளனர் என்பதனை கூத்துச்சமூகங்களும், பல பிரதேச சமூகங்களும் அறிந்தவண்ணமுள்ளது.

    அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் கடந்த ஐந்து வருட காலமாக (2011, 2012, 2013, 2014, 2015) ஆலய முன்றலில் நான்கைந்து நாட்களுக்கு பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளையும் கைப்பணிக் காட்சிக்கூடத்தினையும் (மரபுவழி வாத்தியக்கருவிகள் கைத்தறி வேலைப்பாடுகள்  உள்ளூர்பொருளாதாரம்) செய்து கோயிற்திருவிழாவுக்கு வரும் பல்லின சமூகங்களை பண்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தி வருவதனை பலரும் கண்ணுற்றிருப்பர்.
         
பேராசிரியர்.சி.மௌனகுரு
வித்தியானந்தன் அவர்கள் தனது அறிவுக்கெட்டிய வகையில் சமூகத்தின் தேவைக்கேற்ப கூத்தை செம்மைப்படுத்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்(1931.11.15) பாடசாலை மாணக்கருக்கு ஏற்ப கல்வியியல் அரங்கினை உருவாக்க பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் கூத்தின் வடிவத்துள் சமகால பிரச்சினைகளை நாடகமாக்க சி.ஜெயசங்கர் அவர்கள் இயந்திர மயமான தற்கால சூழலுக்கேற்ப கூத்தை அடிப்படையாக வைத்து மீளுருவாக்கக் கூத்துக்களை சமூகக்கலையாக சமூகத்திடத்தே கொண்டு செல்லும் நோக்கோடு கூத்தரங்குகளை பயன்படுத்தி வருகின்றார்.சி.ஜெயசங்கர் அவர்கள் சமூகத்தினுள்ளே வாழும் பாரம்பரியக் கலை வடிவங்களை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு அன்றிலிருந்து(1990) இன்று வரைக்கும் பிறர் அறியாத பாரம்பரியக்கலை வடிவங்களை(வாகரை அம்பந்தனாவெளி புலிக்கூத்து) பிற சமூகங்களும் அறிய வேண்டும் , பார்க்க வேண்டும் என்ற பரந்த நோக்கோடு மரபுவழிக் கலைகளை நிகழ்த்த அச்சமூகத்தை அன்றாடம் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவண்ணமுள்ளார்.
     கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கூத்தின் உயிர்த்துடிப்போடு வட்டக்களரியரங்கில் சிம்மாசனப்போர் சீதை சூர்ப்பனகை வதை, அபிமன்யு இலக்கணன் வதம் அல்லியின் எதிர்வாதம் சுபத்திரை கல்யாணம் போன்ற மீளுருவாக்கக் கூத்துக்களை தயாரித்ததோடு மழைப்பழம்(வடமோடி) எனும் சிறுவர் கூத்தினையும் தயாரித்திருந்தார்.
    ஈழக்கூத்தின் கூத்துப்பரிமாணமாக மூன்று ஆளுமையாளர்களின் (பேரா.சு.வித்தியானந்தன்,  பேராசிரியர்.சி.மௌனகுரு, கலாநிதி சி.ஜெயசங்கர்) செயற்பாடு அமைந்துள்ள போதும் பெருவாரியாக இரு பெரும் திருப்புமுனைகளே(செம்மையாக்கம், மீளுருவாக்கம்) உள்ளங்கை நெல்லிக்கனி போல தெட்டத்தெளிவாக தென்படுகின்றது என்பதை மனங்கொள்ள வேண்டும்.
     
பேராசிரியர்.வித்தியானந்தன்
 வித்தியானந்தனின் செம்மையாக்கமானது ஒரு பரிமாணமாக அமைய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு பணியானது இன்னொரு பரிமாணமாக அமைகின்றது. அதாவது ஈழக் கூத்தில் இருவரது சிந்தனைகள் உள்வாங்கப்பட்டுள்ளதை கூத்து சமூகங்களும் கல்வியியலாளர்களும் பெரிதும் அறிந்திருப்பர்.இதன் பிற்பாடும் பிற்பட்ட காலத்திலும் ஆளுமையாளர்களது சிந்தனைக்கேற்ப இன்னுமொரு பரிமாணமும் தோன்றலாம். அது இயல்பும் நியதியுமாகும். 

  கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்கள் (1965.12.29) கூத்தின் அழகியலை உள்வாங்கி கருத்தியல் ரீதியாக மீளுருவாக்கக் கூத்துக்களை வட்டக்களரியிலேயே நிகழ்த்தி பாரம்பரியக்கூத்துக்கு உயிரைக் கொடுத்ததன் காரணமாக மீளுருவாக்கக்கூத்துக்கள் பல சமூகங்கள் மத்தியில் வெற்றிபெற்ற வண்ணமுள்ளன.
   கிழக்குமாகாணத்தில் கோயில் சடங்குக்காலங்களிலும் ஏனைய விசேட நாட்களிலும்பாரம்பரியக்கூத்தாற்றுகைகள் அந்தந்த பிரதேசங்களில் பரவலாக ஆடப்படு வருவதை காணக்கூடியதாகவுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் கூத்தரங்கத்தை சமூகங்களினுள்ளே வாழ்தலுக்காக வைத்துக்கொள்ளும் தன்மையினை மீளுருவாக்கக் கூத்துக்கள் செய்த வண்ணமுள்ளன என்றால் மிகையாகாது.
   இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் எண்ணக்கருவுக்கு பாரம்பரியக் கலைகளினதும் கலைஞர்களினதும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த மடை எனும் பெருவிழாவை 2013 ஒக்டோபர் காலப்பகுதியில் ஒழுங்குசெய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் மடை எனும் எண்ணக்கருவானது இலங்கையிலுள்ள மக்களின் கலாசார சங்கமமாக அமைந்தது. அதாவது வேடர் சமூகம், அருந்ததியர் சமூகம்,  இஸ்லாமிய சமூகம், குறவர் சமூகம், பறங்கியர் சமூகம் என பன்மைத்தன்மையான நம் பண்பாட்டினை உணரவும் ஒருவரையொருவர் கௌரவிக்கவும் தங்கள் தங்கள் அனுபவங்களை பரிமாறவும் சேர்ந்து மகிழவும் மடை மூலமாக களமமைத்துக்கொடுத்திருந்தார். இத்தன்மையானது சமூகங்களுக்கு பேறும் பேறாக அமைந்திருந்தது.
          மடை எனும் பாரம்பரியக்கலைகளின் திருவிழாவில் ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள்,  கலந்துரையாடல்கள் என்பனவற்றை ஒழுங்குசெய்து வெகுசிறப்பாக செய்திருந்தனர்.கூத்துக்கலையானது 17 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததைப் போலவே இன்றும் தொடர் செயற்பாடாக ஆடப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே குறிப்பாக அச்சமூகத்தை கட்டாயப்படுத்தாமல் அச்சமூகங்களின் வரவேற்புக்கும் ஆசைக்கு இணங்க அம்மக்களினாலேயே பல பிரதேசங்களிலும் ( கன்னன்குடா, மகிழடித்தீவு,  கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, முனைக்காடு, வந்தாறுமூலை, துறைநீலாவணை) சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக கோயிற் சடங்கின் போது பெருவாரியாக கூத்தாடப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
    சுருக்கமாகக்கூறின் ஈழக்கூத்தரங்கானது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தத்தமக்குரிய அடிப்படைப்பண்புகளுடன் ஆடப்பட்டு வரும் வேளையில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களுக்கான தேசியவுணர்வின் சொந்தப் பண்பாடு பற்றி பிரக்ஞை ஏற்பட்டதன் காரணமாகவே செம்மையாக்கம் எனும் பதம் உருவாகியது. சமூக சமகாலக் கதைகளை புகுத்தியதனாலேயே சமூக உள்ளடக்கம் எனும் பதமும் உருவாகியது. கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்கள் “பாரம்பரியக்கலையிலக்கியங்கள்,  ஆற்றுகைகள் சார்ந்து வருங்கால இளஞ்சந்ததியினர் செயற்படவேண்டும் என்ற நோக்கிலும் பாரம்பரியக் கலையாற்றுகைகள் என்றென்றும் மக்கள் மத்தியில் வாழவேண்டும் என்ற எண்ணக்கருவை மையமாக வைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
     அதாவது ஊர்க்கூத்துக்காரர்களுடனும் பாரம்பரியக் கலைஞர்களுடனும்,  கலைஞர்களுடனும் (ஓவியக் கலைஞர்கள் சிற்பக் கலைஞர்கள் கட்டிடக் கலைஞர்கள் நடனக் கலைஞர்கள்) வருங்கால இளம் தலைமுறையினருடனும் இணைந்து பல்வேறு கலை வடிவங்களைஇபல்வேறு இனங்களை சமூகத்தினுள் தேடியலைகின்றார். அதாவது இல்லாத விடயங்களை தேடமால் இருக்கின்ற சமூகத்துக்குத் தேவையான கலையாற்றுகைகளை நிகழ்த்த பல்வேறு துறைசார்ந்து செயற்படுகின்றார். சான்றாக புலிக்கூத்தினையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.  

                      சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் பல்வேறு செயற்பாடுகளுள் மீளுருவாக்கம் என்பதும் சிறு உயிர்த்துணிக்கையாகவுள்ளது. அதாவது கட்டமைக்கப்பட்ட, புனையப்பட்ட புராண இதிகாச கதைகளை, பாத்திரப்படைப்புகளுக்கூடாக மீளுருவாக்கம் செய்கின்றார். தலித்தியம், பெண்ணியம், சர்யலிசம் சார்ந்து பாத்திரப்படைப்புகளை கூத்துச்சமூகத்துடன் கலந்துரையாடி சமூகத்தின் தேவை கருதியே படைக்கின்றார்.

        புராண இதிகாச பாத்திரங்கள்(கண்ணகி – பாண்டியன் ,சீதை - இராமன் இபாஞ்சாலி , சுபத்திரை, அல்லி, சூர்ப்பனகை) கேள்வி கேட்பது போன்று தனது மீளுருவாக்கக் கூத்துப் பாத்திரங்களுக்கூடாக தட்டியெழுப்பி சமூதாயத்தை கேள்வி கேட்க வைக்கின்றார். குறிப்பாக பாத்திரப் படைப்புகளுக்கு ஊடாக மனித சமூதாயத்தை எதிர்க்கணைகளை தொடுக்க வைக்கின்றார். 
          பாரம்பரியக் கலையிலக்கியங்களை எம் கலாசாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அண்ணாவிமார்களை, கூத்து சமூகங்களை, கூத்து சார்ந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்க வழிவகுப்பதோடு கூத்து சமூகங்களது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட பண்பாட்டுச் செயலக உயரதிகாரிகள் கூத்து சமூகங்களின் மீதும் பார்வையை திசை திருப்புவதன் மூலம் கூத்து சமூகங்கங்களை. கூத்துக்கலையை சமூகங்களுக்குள் தக்க வைக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 
  கூத்துக்கலையானது அன்றிலிருந்து இன்றுவரை உயிர்நாடியுடன் சமூகத்திற்குள்ளே வாழ்ந்து வருகின்றது என்றால் மிகையாகாது.


பாக்கியராஜா மோகனதாஸ்
துறைநீலாவணை