இலங்கையின் - மட்டக்களப்பு தேசத்தில் நிலைபெற்ற சேரநாட்டுத் தாய்வழி மரபு

கவிக்கோ வெல்லவூர்க்கோபால்
(தேசியக் கலைஞர், கலாபூஷண் - எஸ்.கோபாலசிங்கம்)
ஓய்வுநிலை நிருவாக அலுவலர், 
மட்டக்களப்பு, 
இலங்கை.


(1) சேரநாடு (2) தொண்டைநாடு (3) சோழநாடு (4) பாண்டிநாடு


பண்டைய முத்தமிழ் நாடுகளில் முதன்மை பெற்று விளங்கிய சேரநாடு நீண்டகால வரலாற்றுப் பெருமையைக் கொண்டது. சேரநாட்டின் எல்லைகள் குறித்து பெருந்தொகைப் பாடலொன்று பின்வருமாறு குறிப்பிடும்.

வடக்குத் திசைபழனி வான்கீழ் தென்காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச்
சேரநாட் டெல்லையெனச் செப்பு

தொல்காப்பியம் கூறும் தமிழ் வழங்கு பன்னிரு நாடுகளில் வேணாடு, கர்க்கா நாடு, குட்டநாடு, குடநாடு, பூழி நாடு ஆகிய ஐந்து நாடுகளை அன்றைய சேரநாடு கொண்டிருந்தது. சங்க இலக்கியச் சான்றுகளின்படி சேர மன்னர்களின் வரலாற்றுக் காலத்தை கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். சேரநாட்டின் பூர்வீகச் சமூகமான நாகரைத் தொடர்ந்து, மலைவேடர், மலையரசர், உல்லடர், மலைப் பண்டாரம், மலைப்புலையர், கணிக்கர், இருளர், பணியர், காடவர், முத்துவனார், குறும்பர், பறையர் போன்றோர் ஆதிக்குடிகளக அறியப்படுகின்றனர். நாயர், பணிக்கர், முக்குவர், நாடார், மழவர், பரவர் போன்றோர் மரபுவழிச் சமூகங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். நம்பூதிரிகள், பிள்ளைகள், மேனன், பிராமணர், கம்மாளர், செட்டிகள் போன்றோர் கிறிஸ்துவுக்கு முற்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு சென்று குடியேறியவர்களாகின்றனர்.

மட்டக்களப்பு தேசத்தில் தொடக்ககால ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படும் சேரநாட்டுத் தளபதி கூத்திகனுடைய ஆட்சிக்காலமான கி.மு 236 தொடக்கம் சேரநாட்டுக் குடியேற்றங்கள் இங்கு இடம்பெற்று வந்ததாக ஆய்வுகள் வெளிப்படுத்தும். மட்டக்களப்பு வரலாறு அறியப்பட்ட காலம் முதலே இதன் சமூக வரலாற்றுத் தளத்துள் சேரநாடு இணைக்கப்படுவதுவும் அதுமுதல் கொண்டு அதன் பண்பாட்டு அம்சங்களில் இத்தேசம் கட்டுண்டு போனதும் பலர் அறிந்ததே.

களப்புகளும், கரைச்சைகளும், வாவிகளும், ஏரிகளுமாய் தெங்கும் வாழையும் நெல்லும் பசுமைகொள்ளக் காட்சி தரும் விவசாயக் கிராமங்களும் அங்கே பெரிதும் சிறிதுமாய் காட்சிதரும் ஓட்டு வீடுகளும், கூரைவேய்ந்த குச்சு வீடுகளும், சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்களும் எந்தவித வேறுபாட்டினையும் தோற்றுவிக்காது. வீடுகளின் அமைப்புக்கள் கூட அருகிலுள்ள தமிழ் நாட்டைப் போலல்லாது மட்டக்களப்புத் தேசத்தையே நினைவுறுத்தும்.

கேரளத்து மக்களது பேச்சு வடிவமும் உச்சரிப்பும் ஓசை நயமும் முழுக்க முழுக்க மட்டக்களப்பை  ஒத்திருப்பதுவும், மட்டக்களப்புத் தேசத்தின் பழந்தமிழ் சொல்வளம் அங்கு நிலைபெற்றிருப்பதுவும் நம்மைப் பிரமிக்கச் செய்யும். தேங்காய்த் துருவல், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் என தேங்காயையே முக்கியப்படுத்தும் உணவு வகைகளும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் பூசுதலும், சோறு, பால், தயிர் என்பவற்றோடு இனிப்பு மற்றும் கனி வகைகளைக் கலந்து உண்ணுதலும் மட்டக்களப்பு தேசத்தையே நிகர்த்திருக்கும்.

மருமக்க(ள்) தாயமும் தாய்வழி முதுசொமும்

உலகின் பல்வேறு சமூகங்களின் குடும்ப உறவுமுறைகள் தொடர்பாக அறிவியல் ரீதியான கற்கை நெறிகளை ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொண்ட தலைச்சிறந்த சமூகவியலாளர்களான மோர்கன் மற்றும் ஏஞ்சல் போன்றோர் மிகவும் முற்பட்ட காலம் முதலே உலகில் தாய்வழி மரபுகள் தோற்றம் பெற்றதெனவும் அவற்றிலிருந்தே சமூக அல்லது குடும்பத் தலைமைத்துவம் உருவானதெனவும் கருதுகின்றனர். தாய்வழி மரபானது (Matrilineal System) பழமையான சமூகங்களின் நீண்டகாலப் பண்பாட்டினை அடியொற்றி வந்த பேணுகையாகும். இத்தாய்வழி மரபின் சிறப்பியல்பாக அமைவதே இந்திய நாட்டில் சேரநாடு என அறியப்பட்ட கேரளத்தின் மருமக்க(ள்) தாயமும் ஈழத்தே பண்டைய மட்டக்களப்புத் தேசம் மற்றும் புத்தளப் பிரதேசம் என்பவற்றின் தாய்வழி முதுசொமும் ஆகும். இதில் மருமக்கள் தாயம் என்பது மருமக்கள்வழி சொத்துரிமை எனப் பொருள்படும். அதேபோல் தாய்வழி முதுசொம் என்பது தாய்வழிப் பழமையான சொத்துரிமை எனப் பொருள்படும். இவை இரண்டுமே ஒரே அர்த்தப்பாட்டினைக் கொண்டவையாகும். தாய்வழி முதுசொத்தை சட்டவாக்கமாகக் கொண்டமைந்த  முக்குவ தேசவழமைச் சட்டம் முழுக்க முழுக்க சேரத்தின் மருமக்கள் தாயச் சட்டத்தையே அடியொற்றியதாகும்.

கேரளச் சமூக வரலாறு தொடர்பாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் எல். கே. பாலரெத்தினம், பேராசிரியர் எல். ஏ. கிருஷ்ன ஐயர் போன்ற சமூகவியலாளர்கள் தாய்வழி மரபுகளின் முக்கியத்துவம்மிக்க மருமக்க(ள்)தாயம் நீண்டகாலம் முதலே சேரநாடு எனப்பட்ட கேரளத்தின் பண்டைய சமூகங்களின் பேணுகையில் இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். சென்னை மாநில சட்ட நிருவாகக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி, அதன் பின்னர் கேரளம், திருவனந்தபுரத்தில் சட்டத் தொழில் புரிந்த சட்டமேதை பத்மநாபமேனன் 1908ல் திருவாங்கூர் மருமக்க(ள்)தாய விசாரணக்குழுவின் உறுப்பினராக, அன்றைய ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட போது அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், கேரளத்தின் தாய்வழி மரபான இம்முறைமை ஏலவே நீண்டகால நடைமுறையிலிருந்தாலும் சேரமான் ஆட்சிக்காலத்துக்குப் பிற்பட்டே சிறப்பான நடைமுறைக்கு உட்பட்டிருப்பதாக தனது கொச்சி ராஜ்சிய சரிதம் எனும் நூலில் (Kochi Rajya charitham - 1912) குறிப்பிடுகின்றார். இக்காலம் இலங்கையில் கலிங்க மாகோனின் ஆட்சிக்காலமான கி.பி 13ஆம் நூற்றாண்டைக் குறிப்பதாக அமையும்.

பண்டைய மட்டக்களப்புத் தேசம் மற்றும் புத்தளப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அவற்றின் சமூகப் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் சேரத்தின் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பது அறியப்பட்டதாகும். ஆதாரப்படுத்தப்பட்ட மட்டக்களப்பின் வரலாற்றில் கி.மு 3ஆம் நூற்றாண்டு, கி.பி 2ஆம் நூற்றாண்டு, கி.பி 5ஆம் நூற்றாண்டு, கி.பி 6ஆம் நூற்றாண்டு, கி.பி 10ஆம் நூற்றாண்டு, கி.பி 11ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 13ஆம் நூற்றாண்டு ஆகியவற்றில் சேரத்திற்கும் மட்டக்களப்பிற்கும் இருந்த தொடர்புகளை மட்டக்களப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ளமுடியும். முக்குவர், பணிக்கர், நாயர், மழவர் போன்றோர் சேரநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களில் முக்கிய சாதியினராகின்றனர். இச்சமூகங்களின் பிணைப்பே சேரத்தின் தாய்வழி மரபுகளை இங்கு வலுவோடு வளர்த்தெடுக்க முக்கியக் காரணங்களாயமைந்தன. பண்டைக்காலம் முதலே சேரத்திற்கும் கலிங்கத்திற்கும் இருந்த இறுக்கமான தொடர்பும், மட்டக்களப்பையும் சேரநாட்டையும் இணைக்கப் பெருமளவு உதவியுள்ளமையை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மட்டக்களப்புத் தேசம் மலையர் குக நாடு என அழைக்கப்பட்டதன் அர்த்தப்பாடு இதன்மூலம் வெளிப்படவே செய்யும். மலையர் என்பது மலைநாட்டினரான சேரத்துக் குடிகளையும், குகர் என்பது கலிங்கக் குடிகளையும் அடையாளப்படுத்தவதாக அமையும்.

கேரளத்தில் மரபு வழியாக விவசாயத்தை மேற்கொண்டிருந்த நிலவுடைமைச் சமூகமாக நாயர் சமூகம் அடையாளப்படுத்தப்படுவதைப் போன்றே மட்டக்களப்புத் தேசத்திலும், புத்தளப் பிரதேசத்திலும் நிலவுடமைச் சமூகமாக முக்குக சமூகம் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் கேரளத்து சமூகத்தளத்தில் காராளர்களான நாயர்கள் ஒரேயினத்தை அடியொற்றி வந்த தனிச் சமூகமாக அடையாளப் படுத்தப்படுவதைப் போன்று இலங்கையில் முக்குக சமூகம் அடையாளப் படுத்தப்படவில்லை. கேரள சமூக ஆய்வுகளில் நாகர் இனத்தின் வேளாண் தொழிலை மேற்கொண்டிருந்த பிரிவினரே நாயர் சமூகமென  ஐயத்துக்கிடமின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவுறுத்தப்பட்ட மட்டக்களப்பின் சமூக வரலாற்று  ஆய்வுகளின்படி, மட்டக்களப்பின் முக்குக சமூகமானது பண்டைய கலிங்கத்தினதும் முத்தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளினதும் மரபு வழிச் சமூகங்களது ஒருங்கிணைப்பாகவே கொள்ளப்படுகின்றது. இதில் பண்டைய ஈழத்தில் நிலை கொண்டிருந்த இயக்கர், நாகருடன் கலிங்கத்தின் மரபு வழி சார்ந்த கலிங்கர் மற்றும் கங்கர் சமூகங்களும், சோழநாட்டின் வன்னியச் சமூகமான படையாட்சியரும் சேரத்தின் முக்குவர், பணிக்கர், நாயர் மற்றும் மழவர் சமூகங்களும் காலத்துக்குக் காலம் இணைந்து  பிணைப்புற்றிருப்பது ஆய்வுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

கி.பி 1811 தொடக்கம் 1820 வரையும் இலங்கையின் பிரதம நீதியரசராகப் பணியாற்றிய சேர் அலக்சாந்தர் ஜோன்ஸ்ரன் அவர்களது முக்குகர் தொடர்பிலான கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தலைச்சிறந்த சட்டமேதையான இவர் 1800க்கு சற்று முன்னும் பின்னும் கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த சென்னை மாநிலத்தில் ஆங்கில அரசின் முக்கிய நீதித்துறை அலுவலராகப் பணியாற்றி, அதன் பின்னர் இலங்கைக்கு வந்தவர். இலங்கையின் தேசவழமைச் சட்டங்கள் மற்றும் வழக்காறுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் தனது Ceylon Native Laws and Customs எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“முக்குவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டு மலபாரிலிருந்து இங்கு வந்து மட்டக்களப்பிலும், புத்தளத்திலும் குடியேறி மட்டக்களப்புப் பிரதேசத்தில் பெரும்பான்மயான நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்ததோடு, அப்பிரதேசத்தின் ஆட்சி நிருவாகத்தையும் படிப்படியாக தம்மிடம் வசப்படுத்தினர். முக்குகரே ஆசியாவின் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் முதலாவது சுதேசியக் குடிகளாக ஐரோப்பிய அரசாங்கம் ஒன்றினால் அதிகாரமளிக்கப்பட்டுத் தமது சொந்த நாட்டு அரசாங்கத்தின் சட்டவாக்கசபையின் உறுப்பினராகவும் ஆகினர். அப்பிரதேச முக்குகக் குடும்பங்களின் எல்லாத் தலைவர்களும் தமது பிரதேச  அரசின் உறுப்பினர்களாகவிருந்து அச்சபையை நிருவகித்தனர்”

Mukkuvars of Batticaloa centuries ago came from Malabar coast and settled in Puttalam and Battcalaoa in the Eastern Province, they not only became proprietors of almost  all the lands  in the province ,but  they  gradually acquired the complete Government of the Province. The Mukkuvars may be considered the first native in any part of Asia who were  authorized  by  a  European Government,  to become members of  a  legislative assembly  for the Government of  their  Own Country infact it consisted of a provincial Council of which all  the heads Mukkuva  families of the district  were members of the Government of their own province.

- Sir Alexandar Jhonstan- (Chief Justice 1811- 1820),  (Ceylon Native Laws and Customs)

இலங்கையின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் முக்குகர் குறித்த தனது  இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும்  ஆய்வு நூலில்,
        
“கிழக்கு மாகாணத்திலே நிலமும் வேளாண்மையும் முக்குகரின் வாழ்க்கைக்கு ஆதாரமாகியுள்ளன. முக்குகரே மட்டக்களப்பில் நில உடமையாளரகவிருந்து ஆதிக்கம் செலுத்தியமை அவர்களது வாழ்வு முறைகளையும் வழமைகளையும் மேம்படுத்தி அவர்களையே ஏனையோரும் பின்பற்றுவதற்கு வழி வகுத்தது. இதனால், முக்குகரின் சாதியமைப்பு தனித்துவம் மிக்கதாக விளங்கியது. இதனுடன் இணைந்ததாக அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆதிக்கம் இவர்களை முதன்மைப்படுத்தியிருந்தது”      

எனக் குறிப்பிடுகின்றார்.

அமெரிக்க நாட்டின் பிறின்ஸ்ரன் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியரான கலாநிதி மார்க் விற்றாகர் (Prof. Mark P.Whitakar) அவரது ஆய்வு நூலான East Cost Sri Lankan Tamil Temple எனும் நூலில் போர்த்துக்கேயர் மட்டக்களப்பைத் தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்திய போது இங்கு மேலாண்மைச் சமூகமாகவிருந்த முக்குக சமூகத்தின் தலைவர்களான போடிமாரே நிலவுடமையாளர்களாக இருந்தனரெனவும், கிழக்கின் கரையோரப் பிரதேசத்தின் பெருமளவு நிலபுலங்கள் அவர்கள் வசமேயிருந்ததெனவும், அதன் பின்னர் ஆங்கில அரசின் காலத்திலேயே அதிகளவு காணிகள் ஏனையோருக்கு வழங்கப்பட்டதாகவும் 1870 முதல் 1921 வரையான காலப்பகுதியில் மட்டும் 32406 ஏக்கர் அரச காணி ஏனய தனியாருக்கு நெற்செய்கையின் பொருட்டு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகவும் அன்றைய அரசு ஆவணங்களைச் சான்றுபடுத்திக் குறிப்பிடுகின்றார்.

மருமக்க(ள்)தாயச் சட்டமும் முக்குகச் சட்டமும்
      
மருமக்க(ள்) தாயச் சட்டமும், முக்குகச் சட்டமும் பெரும்பாலும் சொத்துடமை சார்ந்த சமூகச் சட்டமாகவே அமைகின்றது. சொத்துரிமை வகை, சீதனமாகக் கொடுக்கப்படுகின்ற வகை, காணி ஆட்சிப்படுத்தல் மற்றும் கையாளல் வகை, காணி நன்கொடை வகை, காணி ஒற்றி பிடிக்கின்ற வகை, தொண்டூழியம் புரிபவர்களுக்கு செய்கையின்பொருட்டு காணி வழங்கல் வகை, வட்டி அறவீட்டு வகை, தேசவழமைத் திருமணம் என அவற்றின் பாகுபாடு அமையும். முக்குகச் சட்டத்தில் தாய்வழிச் சோம், தாய்வழிமுதுசொம், தேட்டம் என்பவற்றிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வியாக்கியானம் முழுக்க முழுக்க மருமக்க(ள்) தாயத்தை ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். தாய்வழி முதுசொக் காணிகள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பரவணி முதுசம், பரவணிக் காணி, முக்குக முதுசம், முக்குகக் காணி என அழைக்கப்பட்டதைப் போன்று கேரளத்தில் இது தராவத்து, தாயக் காணி, நாயர் காணி, மருமக்க காணி, நாடுகாணி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது. தரா என்பது பரம்பரைக் காணியையும், வத்து என்பது அதில் பெறப்படும் விளைச்சலையும் குறிப்பதாக அமையும். எனினும், பின்னர் அச்சொத்துக்களே தராவத்து என்ற பெயருக்கு உரியதாயிற்று.

மருமக்க(ள்) தாயமும், தராவத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தென்னிந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டறிஞர்கள் இதனைக் கேரளாவின் சமூகப் பாரம்பரியம் மிக்க தனித்துவமான தன்மைகள் எனக் குறிப்பிட்டனர். ஆங்கிலேயரான புச்சன் பிரான்சிஸ் (Buchen Francis)  தனது பிரயாணக்   குறிப்புகளில் (A Journey from Madras through Mysore,Canara and Malabar -1803) இது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.  

முசாகா காவியத்தை எழுதிய அத்துல கி.பி 11ஆம் நூற்றாண்டில் முசாகா அரச வம்சத்தினரும் சொத்துடமையில் மருமக்க(ள்) தாய நடைமுறையினையே பின்பற்றியதாகக் குறிப்பிடுகின்றார். கேரளத்தின் மத்தியகாலம் முதல் அங்குள்ள சில முக்கிய சமூகங்களும் இம்மரபினைப் பின்பற்றியுள்ளமை ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கேரள இந்துக் குடும்பங்களில் சமூகப் பிணைப்புற்ற முஸ்லிம்களும் லட்சத்தீவுகளில் குடியேறிய கேரள மக்களும் மருமக்க(ள்) தாய நடைமுறைகளையே பின்பற்றினர். கேரளத்தை அண்டிய தென்காசி போன்ற பாண்டிநாட்டு எல்லைப் பகுதிகளிலும், இந்நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதையும் காணலாம். இப்பகுதிகள் காலத்துக்குக் காலம் சேரநாட்டுடன் இணைந்திருந்தமையே இதற்கான கரணமாகும். திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடிய  திரிகூட ராசப்ப கவிராயருக்குக் கொல்லம் ஆண்டான 1717 தை மாதம் 11ஆம் நாள் மதுரை மன்னர் சிறி விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் செப்புப் பட்டயம் எழுதி வழங்கப்பட்ட நிலக்கொடையான குற்றாலம் மேலைச் செம்பகக்கா பகுதியின் கருப்புக் காட்டைச் சேர்ந்த ஊத்துமேடு எனும் நன்செய் புன்செய் நிலங்கள் இராசப்ப கவிராயரின் மறைவுக்குப் பின்னர் அவரது மனவி மற்றும் மக்கள் வழியில் சேராமல் மருமக்க(ள்) தாய நடைமுறைக்கு அமைவாக அவரது தாய்வழியில் பெண்ணடி முதுசொமாக மாறியிருப்பது இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இது முழுக்க முழுக்க  முக்குகச் சட்டத்தின் தாய்வழி முதுசொத்திலுள்ள உரிமை வகை முதலாம் பிரிவில் சொல்லப்படுகின்ற,  

ஒரு தலைமைக்காரனுக்கு ராசாக்களால் கிடைத்திருக்கின்ற உறுதி ஒப்பந்தங்களும், முதுசமான ஊர்க்காணி உடமைகளும் அந்தத் தலைமைக்காரனுக்குப் பிற்காலம் அவன் சகோதரங்களுக்கும் மருமக்களுக்கும் தாய்வழி முதுசொமாய்ச் சேரும் எனும் சட்டப் பிரிவினுக்கு உட்பட்டிருப்பதைக் காணலாம்.     

         
கேரளத்தின் மருமக்க(ள்) தாயச் சட்டத்திலும், மட்டக்களப்பின் முக்குகச் சட்டத்திலும் நடப்புக் காலத்தேயிருக்கும் பரம்பரைச் சொத்துப் போக அக்காலத்தே பெறப்பட்ட அல்லது தேடப்பட்ட சொத்து தேட்டம் என்ற பெயரினைப் பெறும். அது பின்னர் மட்டக்களப்பில் மாதாவழி முதுசொமாகவும், கேரளத்தில் தாயக் காணியாகவும் மாறும். பராமரிப்பு முறை ஆரம்பத்தில் தாயிலிருந்து மூத்த மகனுக்கும், அதன் பின்னர் அடுத்த மகனுக்கும் செல்லும். பின்னர் வயது முறைக்கேற்ப பெண்மக்களின் மகன்மாருக்கு தாய்வழி மாமா, மருமகன் எனக் கைமாறும். இதன் முக்கியத்துவம் என்னவெனில் தாய்வழிச் சொத்துக்களின் பராமரிப்பு உரிமையானது சகோதரிகளைச் சார்ந்தே பெண்வழியாக அமையும் என்பதே. “ஆண்வழி நின்றுபோம் பெண்வழி இருந்துபோம்” எனும் மட்டக்களப்பின் முதுமொழியானது இதன் அர்த்தப்பாட்டை விளக்கி நிற்கும். தாய்வழிச் சொத்துக்கள், மாமன் மருமகன் வழியில் நின்றாலும், அது பெண் வழியிலேயே நிலையாக இருக்கும் என்பதுவே அதன் வெளிப்பாடாகும். இதனாலேயே கேரளத்திலும், மட்டக்களப்பிலும் திருமணமான பெண் கணவன் வீடு செல்லாமல் தாய் வீட்டில் தங்கும் நிலை உருவானது எனலாம்.

மருமக்க(ள்) தாயத்தைப் பொறுத்தவரை தராவத்தம்மா எனும் பெண் வழித் தலைமைத்துவமே முன்னர் நடைமுறையில் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமாள்களின் ஆட்சிக் காலத்தே ஏற்பட்ட சோழர்தம் ஆதிக்கத் தன்மையின் விளைவாகவே ஆண் பராபரிப்பு தலைமைத்துவம் மருமக்க(ள்) தாயத்துள் ஊடுருவியதாகப் பேராசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை (Studies in Kerala History) கருதும் வேளையில் கேரளத்தின் தாய்வழி மரபின் தொடர்ச்சியாகவே சமூகத் தலைமைத்துவம் அல்லது குடும்பத் தலைமைத்துவத்தைக் கொள்ள வேண்டுமென கே. பி. பத்மநாபமேனன் (History of Kerala) குறிப்பிடுவார். எனினும், பண்டைய கேரள மரபுவழிச் சமூகங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட  எழுச்சியின் புதிய பரிணாமம் அல்லது மாறுதலின் உந்துதலே கி.பி 9ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து தனித்தன்மை மிக்க இவ்வழக்காற்றினுக்கு வித்திட்டிருக்க வேண்டுமேயன்றி, வேறு எக்காரணமும் அமைய முடியாதென்பது கே. எஸ். மத்தியூ போன்ற (Societies in Medieval Malabar) புதிய தலைமுறை ஆய்வாளர்களின் முடிவாகத் தெரிகின்றது.  

மிக நீண்ட காலமாக நாயர் சமூகத்தினுக்குரிய தராவத்து எனும் பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்பும் தலைமைப் பொறுப்பும் குடும்பத்தில் மூத்த பெண்ணிடமே ஒப்படைக்கும் வழக்கம் இருந்து வந்தது. அவர் தராவத்தம்மா என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டிருந்தார். காலப்போக்கில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அச்சொத்துக்களைப் பாதுகாத்து பாராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்புக்கள் காரணமாக தராவத்தம்மாவுடன் தராவத்துக்காரன் எனும் ஆண் தலைமைத்துவமும் உருவானது. இது வயது மூப்பின் அடிப்படையில் தாய்மாமன் மற்றும் சகோதரி வழி மருமகன் எனும் உறவுமுறைக்குள் வருவதாக அமைந்தது.    

கி.பி 4ஆம் நூற்றாண்டு வாக்கில் குடியேறி விரிவாக்கம் பெற்று நாயர் சமூகப்  பெண்களை சம்பந்த முறைத் திருமணம் செய்து ஒருபுறம் தந்தை வழிப் பேணுகையை முதன்மைப்படுத்தியும், மறுபுறம் மருமக்க(ள்) தாயப் பயன்களை அனுபவித்தும் வாழ்ந்த நம்பூதிரிப் பிராமணர்களின் செல்வாக்கு தாய்வழி மருமக்க(ள்) தாயத்துள் ஊடுருவிய தன்மையினையும் அதன்மூலம் உணரப்பட்ட வேறுபாட்டின் முக்கியத்துவத்தையும் இங்கு கவனத்தில் கொள்ளுவது அவசியமானதாகும். பிரமாஸ்வம் எனப்படும் பிராமணர்களுக்கு உரித்தாகக் கொள்ளப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்களாக மாறிய நம்பூதிரிகள் தங்களது சொத்துக்கள் தங்கள் சமூகத்திலிருந்து சிதறுண்டு போகாமல் தடுப்பதற்காகத் தங்களது சொத்துக்களுக்கு தந்தை வழி வாரிசு உரிமை கொண்ட மூத்த புதல்வர்களை நம்பூதிரிச் சமூகத்தில் முறையான திருமண பந்தத்திற்கு உட்படுத்தினர். இளைய புதல்வர்களை சம்பந்த முறை எனும் பெயரில் நாயர் சமூகப் பெண்களை தாரமாய்க் கொள்ள அனுமதித்தனர். நாயர் சமூகத்தில் பிறக்கும் தங்களது பிள்ளைகளை மருமக்க(ள்) தாய நடைமுறைக்கு உட்படுத்துவதன் மூலம் மனைவியையும் மக்களையும் பராமரிக்கும் பெரும் பொறுப்பிலிருந்து விடுபடும் வாய்ப்பினையும், உழையாதிருந்து உண்டுகளிக்கும் வாழ்வையும் அவர்கள் பெற்றனர். இதில் முக்கியப்படுத்தத்தக்க அம்சம் யாதெனில் நம்பஸ்ரீதிரிகளுக்குரிய பிரமாஸ்வம் எனும் பரம்பரைச் சொத்தின் பலன்களை, அவர்களது நாயர் சமூக மனைவி மக்கள் அனுபவிக்க மறுக்கப்பட்டமையே ஆகும். அத்தோடு நம்புஸ்ரீதிரிகளை மணம் முடித்த நம்புஸ்ரீதிரிப் பெண்கள் கணவன் வீட்டில் வாழும் உரிமையினைக் கொண்டிருக்க, நம்பூதிரிகளை மணம் முடித்த நாயர் பெண்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டு தொடர்ந்து தாய்வீட்டிலேயே வாழ வேண்டியவர்களாயினர். அத்தோடு அவர்களது பிள்ளைகளும் நம்பூதிரி ஈற்றுப்பெயர் மறுக்கப்பட்டு நாயர் ஈற்றுப் பெயரினையே கொண்டவர்களாயினர்.     

மட்டக்களப்புத் தேசத்தைப் பொறுத்தவரை இங்குள்ள சமூகக் கட்டமைப்பு அது போன்ற வாழ்க்கை முறைக்கு வழியமைக்கவில்லையென்றே கூற வேண்டும். இங்கு திருமண பந்தமென்பது பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகம் சார்ந்தே அமைந்திருந்தது. கி.பி 13ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்த காலத்தே அது மேலும் வலுப்பெறலானது. ஒவ்வோர் சமூகத்திலும் கலிங்க மாகோன் வகுத்த ஏழு குடிமுறைகள் சீரானதும் அறிவுப் பூர்வமானதுமான ஒரு சமூகக் கட்டமைப்பைத் தோற்றுவிக்க வழி வகுத்தது. ஒரு சமூகம் அதனது குடிமுறைக்குள் ஒத்த குடியில் திருமணம் செய்யலாகாது எனும்  நியதியானது ஒரு முக்கிய சமூக நெறிமுறையாகக் கொள்ளப்பட்டது. இதனால் கேரளத்தில் நாயர் சமூகத் திருமணங்களின் போது அடிக்கடி சிக்கல்களைத் தோற்றுவித்த மருமக்க(ள்) தாய நடைமுறைகள் மட்டக்களப்புத் தேசத்தில் முக்குகச் சட்ட நெறிமுறைகளால் சீராகவும் வலுவாகவும் வளர்ச்சி பெற வாய்ப்பாக அமைந்திருந்தது.

இலங்கையில் முக்குகச் சட்டம் நடைமுறையிலிருந்த பிரதேசங்கள்


மட்டக்களப்புத் தேசத்தில் வெல்லசை, விந்தனைப் பிரிவுகள் உட்பட்ட மன்னன்பிட்டி தொடக்கம் கட்டகாமம் வரையும் திருகோணமலைப் பிரதேசத்தில் கொட்டியாரப்பற்று, தம்பலகாமம் பற்று, கட்டுக்குளம் பற்றிலும் புத்தளத்தின் எல்லா ஏழு பற்றுக்களிலும் தாய்வழி வழக்காறுகளை முதன்மைப்படுத்திய முக்குகச் சட்டம் குறித்து ஆங்கில ஆட்சிக் காலத்தில் இலங்கையின் உயர்நீதிமன்ற வழக்குரைஞராகக் கடமையற்றிய சி.பிரிட்டோ (Mukkuvas Law _C.Britto – 1876), சட்ட வல்லுநர் எஸ்.டபிள்யூ. தம்பையா (Laws and Customs of Tamils of Ceylonகலாநிதி டெனிஸ் மக் கில்வரி tup (Mukkuva Vannikai – Dr.Dennis B Mc Gilwary),சட்டவறிஞர் முனைவர் எஸ்.பாவேந்தன் (கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள்) ஆகியோர் வெகுவாக ஆராய்ந்தனர்.

இச்சட்டம் குறித்துக் கவனம் செலுத்திய சி. பிரிட்டோ, மாதாவழி முதுசொம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் பண்டைய ரோமன் டச்சுச் சட்டத்தில் தென்படுவதாகவும், தெற்கு ஒல்லாந்தில் காணப்படும் வாரிசு சொத்துடமையினை இது ஒத்திருப்பதாகவும் கண்டறிந்தார். கணவன் மனைவியிடத்தே நேரடி வாரிசுகள் இல்லாதிருக்கின்ற போது அவர்களது சொத்துடைமைகள் எவ்வாறு பங்கிடப்படல் வேண்டுமென இச்சட்டம் கூறும் வியாக்கியானங்களும் வரையறைகளும் வியந்து நோக்கத்தக்கவையாகவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். மேலும் இச்சட்ட நடைமுறைகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட இலங்கையின் அன்றைய பிரதம நீதியரசர் சேர் அலக்சாந்தர் ஜோன்ஸ்ரன் மூத்தோர் கூடம் எனும் சமூகப் பெரியோர்கள் மூலமே இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதாக குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இதுவே மட்டக்களப்பிலும்,புத்தளப் பிரதேசத்திலும் முத்திர கூடம் என அழைக்கப்பட்டது. 

சட்டவறிஞர் முனைவர் எஸ். பாவேந்தன் கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள் தொடர்பான தனது முனைவர் பட்ட ஆய்வில் (1999)பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 


பாரம்பரியம் மிக்க மரபுவழிச் சமூகங்களுக்குரிய வழக்காறுகளின் அடிப்படையில் அச்சமூகங்களை நிலையான ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்துப் பேணுவதற்கு நீண்டகால அனுபவ நெறிப்படுத்துகையில் உருவானவையே தேசிய மரபுவழிச் சட்டங்கள் ஆகும். தேசியச் சமூகம் என்பது (National Community)பல்வேறு அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பினும் மிக முக்கியமாக அது மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக அமையும்.
      
1. தேசிய மரபுரிமை சார்ந்த சமூகக் கட்டமைப்பு


2. பிரதேசத்துக்குரியதான சிறப்புக்குறித்த வழக்காறுகளின் முக்கியத்துவம்


3. மேற்படி இரண்டிற்குமான பேணுகையும் பாதுகாப்பும்

ஈழத்தில் சிங்களவர்களுக்குத் தனிச் சமூகச் சட்டங்கள் இருந்ததைப்போல தமிழர் வாழ் பிரதேசங்களில் இத்தன்மை கொண்ட இருவித சட்டங்கள் ஒரு நீண்டகாலப் பகுதியில் நடைமுறையிலிருந்ததுவும்,அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயரும், பின்வந்த டச்சுக்காரரும் தங்கள் நிருவாக முறைக்குள் அவற்றைப் புகுத்தியதும், அங்கு வாழ்ந்த தமிழர்கள் தேசியப் பாரம்பரியம் மிக்க பண்டைய சமூகத்தினர் என்பதனை வெளிக்காட்டுகின்றது. யாழ்ப்பாணத்தில் பேணப்பட்ட சட்டம் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம் எனப் பெயர் பெற கிழக்கு மற்றும் வடமேற்குப் பிரதேசங்களில் பேணப்பட்ட சட்டம் முக்குகச் சட்டம் என்ற சமூகப்  பெயரினைப் பெறுகின்றது.

முக்குகச் சட்டம் பெரும்பாலும் நில உடமைகள், பங்கீடுகள்,பராரிப்புகள், செய்கைகள், கொடுக்கல் வாங்கல்கள், உடமைமாற்றம், பணிகளுக்கான கூலிகள், பிணக்குகளைத் தீர்த்தல்,குடியியல் தண்டனைகள் என்பவற்றைச் சார்ந்தே அமைகின்றது. இச்சட்டங்களின் தேடலின் ஊடே கட்டுக்கோப்பும் அரவணைப்பும் தாய்வழி இன உணர்வின் இறுக்கமும் கொண்ட ஒரு பண்;பட்ட சமூகத்தன்மை நாகரீக மிடுக்குடன் வெளிப்படுகின்றது. யாழ்ப்பாண மேல்மட்டத்தினராகக் கருதப்பட்ட பல வேளாளர்களை போர்த்துக்கேயர் தங்கள் நிருவாகத்தில் முக்கிய பதவிகளில் சேர்த்துக் கொண்டதைப் போல மட்டக்களப்பில் மேல்மட்டத்தினராக அன்றிருந்த முக்குகர்களைச் சேர்த்துக் கொண்டமைக்கு எதுவித சான்றுகளும் கிட்டவில்லை. சுதந்திர வேட்கைமிக்க மட்டக்களப்பின் முக்குகப் போடிகளை நம்பகத்தன்மை அற்றவர்கள் எனக் கருதியதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். மேலும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்களுக்குச் சார்பான பலருக்கு தொம் முதலி பட்டத்தை வழங்கிய நிலையில் மட்டக்களப்பில் ஒருவரேனும் போர்த்துக்கேயருக்கு சார்பாக இப்பட்டத்தைப் பெறவில்லை என்பது தெரியவருகின்றது இவ்வாறு பாவேந்தன் முக்குகச் சட்டம்பற்றி விளக்கிச் செல்கின்றார்.

கேரளத்துக்கும் மட்டக்களப்புக்கும் உரியதான போடி முறைமை 
      
காணி உடமையாளர்களான கேரளத்தின் நாயர் சமூகத்திலும்,மட்டக்களப்பின் முக்குக சமூகத்திலும் ஏற்பட்ட போடி முறைமை குறித்தும் இங்கு கவனம் கொள்வது இதில் முக்கியமானதாகும். போடி முறைமையானது மருமக்க(ள்)தாய நெறிமுறைகளை அடியொற்றி வந்த ஒரு தலைமைத்துவ சிறப்பம்சமாகவே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது. பண்டைய சேரநாட்டிலிருந்தே மட்டக்களப்புக்கு இது அறிமுகமாகியிருக்கவேண்டுமென்பது ஒரு பொதுவான கருத்தாகவும் உள்ளது. நிலவுடமையாளரைக் குறிக்கும் போக்தா என்ற மலையாளச் சொல்லே திரிந்து போடியானதென பேராசிரியர் வேலுப்பிள்ளை போன்றவர்கள் கருதுவர். கேரளத்தின் நாடுடையார், நாடுவழி,ஊரலர் எனும் ஊர்ப்போடி, போடிவாள் அல்லது போடுவாள், போடி போன்ற தலைமைத்துவங்களைப் போன்றே மட்டக்களப்பின்  உடையார்,  ஊர்ப்போடி, போடிகள், போடி என்ற தலைமைத்துவ அமைப்பு விளங்குகின்றது. கேரளத்தில் போடுவாள், போடி எனப் பெயருக்குப் பின்னால் வரும் ஈற்றுப் பெயரினை ஒத்ததாகவே மட்டக்களப்பிலும் பெயருக்குப் பின்னால் போடிகள், போடி என்ற ஈற்றுப் பெயரும் அமைகின்றது.

கேரளத்தை ஒட்டியதாக பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்டுள்ள திருநெல்வேலி, இராமநாதபரம் மற்றும் தென்மதுரைப் பிரதேசங்களில் அன்றைய காலகட்டத்தே இதற்கான அடையாளங்கள் தென்படவே செய்கின்றன. அப்பிரதேசங்களில் போடியென்பது கௌரவத்துக்குரிய பெயராக மாத்திரமன்றி,விருதுக்குரிய பெயராகவும் குறிப்பிடப்படுகின்றது. நாயக்கர் ஆட்சிக் காலத்தே போடி என்பது விருதுக்குரிய பெயராக விளங்கியிருப்பதை தமிழகத்தின் இன்றைய தேனி மாவட்டத்திலுள்ள பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்டுள்ள போடிநாயக்கன் ஊர் வரலாறு நமக்குத்   தெளிவுபடுத்துகின்றது. மதுரையில் திருமலை நாயக்கரது ஆட்சிக் காலத்தே பாண்டி நாட்டின் சில எல்லைக் கிராமங்களில் இரவு வேளையில் புலியொன்று வந்து கால்நடைகளைக் கொன்று தின்பதோடு மக்களையும் தொல்லைக்குள்ளாக்கி வந்தது. உயிருக்கு அஞ்சிய அப்பகுதி மக்கள் மாலைபட்டதும்  அயல் கிராமங்களுக்குச் சென்று தஞ்சமடைவது வழக்கமாகியிருந்தது. இதனால், சிலர் மதுரைக்குச்சென்று திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர். மன்னர் தனது படைவீரர்களில் துணிச்சல் மிக்க வீரன் ஒருவனை அம்மக்களுடன் அனுப்பி வைத்தான். அவன் அம்மக்களுக்கு பாதுகாப்பளித்ததோடு,அப்புலியுடன் பொருது அதனைக் கொன்றான். மன்னர் அவனுக்கு போடிநாயக்கன் எனும் விருதளித்து அப்பகுதிக்கு போடிநாயக்கனூர் எனும் நாமம் சூட்டி அவனைப் பாளையக்காரனாகவும் நியமித்தார். இது சுமார் முன்னூறு ஆண்டுகால வரலாறாகும்.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை போடி எனும் பெயர்ச்சிறப்பு இன்றுவரை மதிப்புடனேயே கருதப்படுகின்றது. அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரை போடி என்ற ஈற்றுப் பெயரைக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்குப் பெயரிடுதலை இப்பிரதேச விவசாயப் பெருங்குடியினர் ஒரு பெருமையாகவே கொண்டிருந்தனர். மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிக நீண்டகால நிலவுடமைச் சமூகமாக விளங்கிய முற்குகர் சமூகத்தினையே இப்பெயர் குறிப்பதாக அன்று அமைந்திருப்பினும் பிற்பட்ட காலத்தே நில உடமையாளர்களாக விளங்கிய ஏனையவர்களும் இப்பெயர்ச் சிறப்புக்கு உரியவர்களாயினர்.

கேரளத்தைப் பொறுத்தவரை போடியென்ற ஈற்றுப்பெயர் இல்லாதுபோக, பிராமணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதீயப் பெயரை ஈற்றுப்பெயராக வைக்கும் தன்மையே காரணமாயிற்று. இதன்காரணமாக நாயர், நம்பூதிரி, மேனன், பணிக்கர், பிள்ளை, நாடார்,நம்பியார், ஐயர் போன்ற சாதீய ஈற்றுப் பெயர்கள் இடம்பெறலாயின. எனினும், ஆலய நிருவாகக் கட்டமைப்பினூடாக அவற்றின் அகப்புறச் செயல்பாடுகளுக்கு உரியவர்களாக விளங்கிய அகப் போடிவாள் மற்றும் புறப் போடிவாளும் திருவிதாங்கூர் மன்னன் (17291758) மார்த்தாண்ட வர்மனால் பழி தீர்க்கும் நோக்குடன் பதவியொழிக்கப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாபா ஆலயத்தில் நிருவாகப் பொறுப்பிலிருந்த போடிமாரும், பிற்பட்ட காலத்திலும் போடிமாரின் சிறப்புக் குறித்து அறியச் சான்றாகவுள்ளனர். ஆலய நிருவாகத்திலிருந்த போடிமார்யோகத்தில் போடிமார் என அழைக்கப்பட்டனர். யோகம் என்பது ஆலய நிருவகத்தைக் குறிப்பதாக அமையும். இது குறித்து பேராசிரியர் ரி. கே. கெங்காதரன் தனது Evalution of the Kerala History and Culture எனும் நூலில் விரிவாக  விளக்கியுள்ளார்.

கேரளத்தின் நிலவுடமையாளர்களான இப்போடிமார் பற்றியும்,அவர்களது செயல்பாடுகள் பற்றியும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது குறிப்புகளில் விரிவாக எழுதியிருக்கின்றனர். 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கேரளத்தில் தங்கியிருந்த போர்த்துக்கல் நாட்டவரான டுறேற் பார்போசா (Durate Barbosa)என்பவர் தனது A Description of the Cast of Africa and Malabar  –  எனும் நூலில் இது குறித்துப் பல முக்கிய தகவல்களைத் தந்துள்ளார். அவர் தங்கியிருந்த காலத்தே கேரளத்தில் இருவித போடியமைப்பு தோற்றம் பெற்றிருந்ததையும் மன்னப்போடி  புலப்போடி எனும் உயர்வு தாழ்வு குறித்த அவற்றின் தோற்றப்பாடு பற்றியும் அவர் விரிவாக ஆராய்ந்தார். நிலவுடமையாளர்களான நாயர்ப் போடிமரின் காணிகளில் தாழ்ந்த சாதியினர் கூலிகளாகப் பணிபுரிவர்.  இவர்கள் நாயர் சமூகப் பெண்களுடன் பழகுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. எனினும், சில சந்தர்ப்பங்களில் தடைகளையும் மீறி தவறுகள் நடந்து விடுவதுமுண்டு. இது அறியப்படும் போது அதன்பின் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் ஊரலர் எனும் ஊர்ப்போடியார் தலைமையில் மக்கள் கூடி அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவர். குறித்த தாழ்ந்த சாதி ஆண்மகனை ஒரு கம்பத்தில் கட்டி எல்லோரும் பார்க்கும்படியாக ஊர்ச்சந்தியில் தொங்கவிடுவர். பின்னர் ஊரைச்சுற்றி அவனைக் கொண்டு வருவர். அதன் பின்னர் அவனையும் குறித்த பெண்ணையும் ஊரின் எல்லையில் நிறுத்தி அப்பெண்ணுக்குத் தடியால் அடித்தோ அல்லது கற்களால் எறிந்தோ ஊரைவிட்டு அவ்விருவரையும் விரட்டிவிடுவர்.

இதில் கவனத்தில் கொள்ளப்படத்தக்க முக்கிய அம்சம் யாதெனில் அப்பெண்ணுக்குப் பிறக்கும் வாரிசுகள் மருமக்க(ள்) தாயச் சட்டப்பிரகாரம் தாய்வழிச் சொத்துக்கு உரித்துடையவர் என்பதே. இதில் நாயர் சமூகத்தினர் பொதுவாக உயர்வுநிலை குறித்து மன்னப்போடி என அழைக்கப்பட இவ்வாரிசுகள் தங்களது தந்தைவழித் தொடர்பால் தாழ்ந்த நிலையுடைய புலப்போடி என அழைக்கப்பட்டு தாய்வழிச் சொத்தான தராவத்துக்கு உரித்துடையவராயினர். மன்னப்போடி  புலப்போடி அமைப்பின் செயல்பாடானது மனிதாபிமானத்துக்கும் சமூகப் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட நடைமுறையாகப் பலராலும் கருதப்பட்டமையால் கோட்டயம் மன்னராகவிருந்த கேரளவர்மனால் 1696ல் இந்நடைமுறை முற்றாக ஒழிக்கப்பட்டதாக கேரள வரலாறு பதிவுசெய்துள்ளது.

மட்டக்களப்புத் தேசத்தின் பாரம்பரியம் மிக்க மரபுவழிப்பட்ட வரலாற்றியலில்  போடிமார் மிக்க மதிப்புடையவர்களாவே வாழ்ந்து வந்துள்ளனர். கேரளத்தில் பிராமணர்களால் தோற்றுவிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற சமுதாயக் கட்டமைப்பு மட்டக்களப்பில் தோற்றம் பெறவில்லை. நிலவுடமையாளர்களாகவும், போடிமாராகவும் விளங்கிய முக்குக சமூகத்தினர் ஏனைய சமூகங்களையும் தங்களுடன் அணைத்துக்கொண்டே வாழ்ந்து வந்துள்ளனர்.

மட்டக்களப்புப் போடி கல்வெட்டு குறிப்பிடும் கி.பி 1520ல் கண்டி அரசால் மாருதசேனன் என நாமம் சூட்டப்பட்ட கண்ணாப்போடி மன்னன்பிட்டி தொடக்கம் மாணிக்ககங்கை வரை தன்னாட்சி நிறுவிச் செயல்பட்டதையும் மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்  கால்பதித்த போது அவர்களை முழுமூச்சாக எதிர்த்து உயிரிழந்தும் சிறை சென்றும் சொத்திழப்புக்களுக்கு உள்ளாகியும் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்ட போடிமார் குறித்த தகவல்களையும் மட்டக்களப்பு வரலாறு பதிவுசெய்தேயுள்ளது. கி.பி 1530 தொடக்கம் 1542 வரையான காலப்பகுதியில் கிறிஸ்தவப் பாதிரியார் சைமாவோ கோயம்பரா அவரது தலைமைக்கு எழுதிய கடிதங்கள் போடிமாரின் சிறப்பினை முன்னிறுத்துவதைக் காணலாம். கி.பி 1675ல் இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் தனது நாட்டு அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மட்டக்களப்பின் தலைவர்கள் (போடிகள்) மூர்க்கத்தனம் மிக்கவர்களாகவும், நம்பகத் தன்மை அற்றவர்களாகவும் இருக்கின்றனர் எனவும் ஒல்லாந்தக் கம்பனிகளுக்குத் தொடர்ந்தும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களாகவேயுள்ளனர்; எனவும் குறிப்பிட்டிருப்பது மட்டக்களப்பில் ஒல்லாந்தர் அதிகார நிலைக்கு வந்து முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் ஒரு தனித்துவமான ஆட்சியைத்தங்களால் நிலைநிறுத்த முடியாமலிருந்ததை மெய்ப்பிப்பதாக அமைந்தது. இதன் காரணமாகவேதான் ஒல்லாந்தர் தங்களது ஆட்சியை செவ்வனே கொண்டு செல்ல உள்ளுர் நிருவாகச் செயல்பாடுகளில் போடிமாரிடம் நிருவாகத்தைப் பகிர்ந்தளித்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினர். இதன் பிரதிபலனாக தலைமைப்போடி மற்றும் ஊர்ப்போடி முறைமை மட்டக்களப்பில் அறிமுகமானதுடன் முக்குகச் சட்டமும் சமுதாயச் சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ல்லாந்தரிடமிருந்து மட்டக்களப்பை ஆங்கிலேயர் கைப்பற்றிய போதும் போடிமாரின் பாரிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையே தென்பட்டது. இதன் காரணமாகவே அவர்கள் நிலமைப் போடிகளையும் வன்னியனார் மற்றும் உடையார்களையும் நியமித்து தாய்வழி முதுசொத்தை முன்னிலைப்படுத்திய முக்குகச் சட்டத்தையும் கி.பி 19ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரை குடியியல் விசாரணைகளில்  ஏற்றுக் கொண்டனர்.

மட்டக்களப்புப் பிரதேசத்தின் பாரம்பரிய நிலவுடமை பற்றிய ஆய்வினை மேற்கொண்ட பொருளியல் ஆசான் குமாரவேலு தம்பையா தேரோட்டம் எனும் கொக்கட்டிச்சோலை தன்தோன்றீச்சர கும்பாபிஷேக மலரில் (1998) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
      
வன்னிமையென்ற சுதந்திரச் சிற்றரசுகள் செழிப்புற்றிருந்த காலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட  நிலவுடமை முறையும்,அதன் கட்டமைப்பு வளர்ச்சியும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் நீண்ட மரபுகளுக்கும் வழக்காறுகளுக்கும் காரணமாயமைந்திருந்தன. இத்தகைய பின்னணியில் தோற்றுவிக்கப்பட்டு விருத்தியடைந்த இப்பிரதேசத்தின் மானியமுறைப் பொருளாதாரமானது, பாரம்பரிய மானிய அமைப்பு முறையை ஒத்ததாகவும் நிலமே பிரதான பொருளாதார மூலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. எனினும், ஏனைய மானிய முறையில் காணமுடியாத நில உடமையையும், அதன் ஒழுங்குபடுத்தல்களையும் அவற்றினால் உருவான சமூக விழுமியங்களையும் அடியொற்றிய போடியார் முறை இப்பிரதேசங்களில் தனித்துவம் மிக்கதாகத் தென்பட்டது. இம்முறைமையானது இப்பிரதேசத்திற்கேயுரிய பாரம்பரிய வழக்காறுகளின் உயர்நிலைப் படுத்தப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. ஏனைய பாரம்பரிய தமிழ்ப்பிரதேசங்களில் நிலப் பிரபுத்துவ முறையும் அதனோடியைந்த மானியமுறைப் பண்புகளும் காணப்படுகின்ற நிலையில் மட்டக்களப்புப் பிரதேசத்தே இப்போடியார் முறை உருவாக்கிய மானியமுறையின் வழக்காறுகள் சமூகப் பெறுமானங்களையும், பொருளியல் விருத்தியையும் அடியொற்றியவையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகின்றது. சான்றாக, ஏனைய மானிய முறைப் பொருளாதாரங்களில் ஊழியம் அடிமை முறையாக அல்லது கீழ்நிலைப்படுத்தப்பட்ட சாதாரணக் கூலித் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டதைக் காணக்கூடிய நிலையில் மட்டக்களப்புப் பிரதேசப் போடிமார் மரபுமுறையின் கீழ் இவ்வாறு கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தப்பட்ட ஊழியமானது அவர்களைச் சாதாரண கூலித் தொழிலாளர்கள் என்பதைவிட மனித நேயம்மிக்க மனித உழைப்பினையும் இப்போடிமாரால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதனை மிக முக்கியமாகக் குறிப்பிட்டேயாக வேண்டும். இதனடிப்படையில் பார்க்கின்ற போது,பொதுவாக மட்டக்களப்பின் நிலவுடமையளர்களாக வாழ்ந்த முக்குகப் போடிமார் மிக்க கண்ணியம் மிக்கவர்களாகவும்,மனிதாபிமானம் கொண்டவர்களாகவும் அனைவரையும் சமமாக வழிநடாத்தி தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் என்பதனையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது 

இவ்வாறு குமாரவேலு தம்பையா அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கேரளத்தின் பணியாளரும் மட்டக்களப்பின்  முல்லைக்காரரும்

மருமக்க(ள்)தாய நடைமுறைகளில் பணியாளர் முக்கியத்துவம் பெறுவதைப் போன்றே தாய்வழி முதுசொம் நடைமுறைகளில் முல்லைக்காரர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இது குறித்தும் சற்றுப் பார்ப்பது இங்கு பொருத்தமானதாகும்.

வயல் சார்ந்த நிலப்பகுதி  மருதமெனவும், காடு சார்ந்த நிலப்பகுதி முல்லையெனவும் பெயர்பெறும். மருதநில மக்கள் வேளாண் தொழில் சார்ந்தும், முல்லை நில மக்கள் கால்நடை வளர்ப்புச் சார்ந்தும் வாழ்ந்தவர்கள். மருதநில மக்களின் விவசாயச் செயல்பாடுகளுக்குத் துணை நின்றவர்கள் முல்லை நிலத்தவராவர். இச்செயல்பாடுகள் புதிய கற்காலம் முதலே விரிவுபட்டுள்ளதாக தமிழக வரலாறுகள் தெளிவுபடுத்தும். உழவுக்கான ஏரும் அதனை இழுப்பதற்கான எருதும் முல்லை நிலத்தவரிடமேயிருந்தது. காலப்போக்கில் விவசாயப் பணியாளர்களாக முல்லைக்காரர்கள் மாறக் காரணமாயமைந்தது அவர்களிடமிருந்த இவையிரண்டுமாகும். இவர்கள் அன்று நிலத்தை உழுது பண்படுத்திக் கொடுப்பதற்கான கூலியினை நெல்லாகவோ அன்றேல் பிற தானியங்களாகவோ பெற்றுக் கொண்டனர். பிற்பட்ட காலங்களில் விளைச்சலின் பின் கூலி கொடுக்கும் முறைமையும் அறிமுகமானது. இது விளைச்சலில் குறிப்பிட்ட பங்கு வீதமாகவும் அமைந்தது. படிப்படியாக வேளாண் மக்களிடத்தே நிலவுடமையாளர்கள் உருவான போது புதிய கூலிமுறையும் அறிமுகமானது. பணியாளர்கள் தங்களது உழைப்பின் திறமையால் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இது வழிகோலியது. காலப்போக்கில் நிலவுடமையாளர்களான போடிமார் தங்களது பணியாளர்களுக்குத் தங்கள் வயலில் ஒரு பகுதியைக் கூலிக்காகச் செய்கை பண்ணும் முறையினைக் கொண்டு வந்தனர். கேரளத்தில் இது பணியாளர் விருத்தி என அழைக்கப்பட மட்டக்களப்பில் முல்லைக்காரன் வயல் அல்லது முல்லை வயல் என சங்ககாலச் சிறப்பால் அழைக்கப்படலாயிற்று. பணியாளர் விருத்தி என்பது பணியாளருக்கு இனாமாக வழங்கப்படும் வயல் என்ற அர்த்தத்தை உடையதாகும். பணியாளர் அல்லது முல்லைக்காரர்கள் போடிமாருக்கு மிக்க நெருக்கமுடையவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினர். விவசாய நிலங்களை சிறப்பாகப்பராரிக்கும் பொறுப்புடன் கூலியாட்களைக் கொண்டு வயல் வேலைகளை செவ்வனே மேற்கொள்ளும் கடமையும் அவர்களுக்கிருந்தது. மட்டக்களப்பில் உடமையாளரின்  காணிகள் போடி வயல் என அழைக்கப்படுவதைப் போன்று கேரளத்தில் இக்காணிகள் நாயர் காணி என அழைக்கப்படுவதைக் காணலாம்.
  
கி. பி 17ம் நூற்றாண்டு வரை சிறப்பாகப் பேணப்பட்டு வந்த மருமக்க(ள்)தாய செயல்பாடுகளும் முக்குககச் சட்ட நெறிமுறைகளும் அதன் பின்னர் ஐரோப்பிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த வரி அறவீடுகள்,பொருளாதாரக் கொள்கைகள், மிசநெறிக் கல்வி முறைகள் மற்றும் சமூகச் சட்டதிட்டங்கள் என்பவற்றால் படிப்படியாகத் தளர்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டன. கேரளத்தைப் பொறுத்தவரை நாயர் சமூகத்தில் ஏற்பட்ட புதிய நடைமுறைக் கல்வி எழுச்சியும், அரசுத் தொழில்துறை வருமானமும் சுய உழைப்பு வருவாய் எனும் புதிய பாதைக்குள் அவர்களை இட்டுச் சென்றது. மருமக்கள்தாய தராவத்து மூலம் கிடைக்கின்ற வருமானத்திலும் பல மடங்கு வருமானத்தை சுய உழைப்பு அவர்களுக்கு ஈட்டிக் கொடுக்க தராவத்தின்பால் அவர்களுக்கிருந்த அக்கறை படிப்படியாக விடுபடலானது.

கி. பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே மருமக்கள் தாயத்துக்குட்பட்ட காணிகளின் உரிமைப் பிரச்சனைகள் பரவலாக எழத் தொடங்கின. புதிய நடைமுறைகள் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள் என்பவற்றின் பால் தங்களை வெகுவாக இணைத்துக் கொண்ட கேரளத்து மக்கள் அதிலும் குறிப்பாக நாயர் சமூகத்தினர் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு சுயவருமான வாழ்க்கை முறைக்கு மாறியபின்னர் தாய்வழிச் சொத்துக்களின் பராரிப்பாளர்களாக இருந்தவர்களின் வாரிசுகள் காலப்போக்கில் அக்காணிகளைக் கையகப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளின் பிரதிபலிப்பு நீதிமன்றங்களில் எதிரொலித்தது. முதலில் திருவாங்கூர் அரசு இதற்குத் தீர்வு காணும் நோக்கில் 1912ல் முதலாவது நாயர் சட்டமூலத்தை (1st Nayar Act – 1912) உருவாக்கியது. அதன் மூலம் மருமக்கள்தாய மரபுகளுக்கு ஏற்ற வகையில் பெறப்படும் வருமானமனைத்தும் உரியவர்களுக்கு சென்றடைய வழி பிறந்தது. பின்னர் 1920ல் நிறைவேற்றப்பட்ட கொச்சி நாயர் சட்டமூலம் (Kochi Nayar Regulation Act – 1920)மருமக்க(ள்) தாய சொத்துக்களின் பராபரிப்பாளர்களான தராவத்துக்காரர்களின் ஆதிக்கப்போக்கை பெருமளவு கட்டுப்படுத்துவதாக அமைந்திருந்தது. எனினும் இதில் மென்மேலும் பிரச்சனைகள் நீண்டுகொண்டு சென்றதால் சென்னை சட்ட நிர்ணய சபையில் 1933ல் நிறைவேற்றப்பட்ட மருமக்க(ள்)தாய சட்டமூலத்தின்படி (Marumakkathayam Act – 1933) தராவத்து எனப்படும் தாய்வழிச் சொத்துக்கள் அனைத்தும் உரியவர்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலிருந்த தாய்வழி மரபான மருமக்கள்தாயச் செயல்பாடுகள் கேரளத்திலிருந்து படிப்படியாக விடுபடலாயிற்று. எனினும், தாயக்காணி என்ற பெயரில் கேரளத்துக் கிராமப்பறங்களில் இன்றும் அழைக்கப்படுகின்ற வயல்காணிகள் இன்னும் கூட மருமக்கள்தாயத்தின் சிறப்பினைப்பறைசாற்றுபவையாகவே உள்ளன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் முதலே முக்குகச் சட்டமானது எல்லா நிலையிலும் வலுவிழக்கலானது. இதன் பிரதிபலிப்பாக தாய்வழி மாமன் மருமக்கள் என தாய்வழி முதுசொச் சொத்துக்களின் பராரிப்பாளர்களாக இருந்தவர்களின் வாரிசுகளான தந்தைவழியினர் அச்சொத்துக்களின் பராரிப்பாளர்களாக மாறியதோடு அவற்றின் உரிமையாளர்களாகத் தங்களை நிலைப்படுத்த முற்பட்டனர். இதன் பிரதிபலிப்பாக 1845  தொடக்கம் 1916வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு உயர் நீதிமன்றம் பன்னிரெண்டு வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் போது மாவட்ட நீதிபதி எச். ஓ கிறேடி (H.O.Gradyமேலதிக மாவட்ட நீதிபதி சி. காய் (C. Hai), மேலதிக மாவட்ட நீதிபதி ஏ. முறே(A. Murray) போன்றோர் நீதிபதிகளாகப் பணிபுரிந்துள்ளனர். அனைத்து வழக்குகளும் இதில் முக்குகச் சட்டத்திற்கு அமைவாகவே தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். இதில் பிற்பட்ட மூன்று வழக்குகள் முக்கியத்துவம் பெறுவனவாகும். தாய்வழிச் சொத்துக்களின் பராரிப்பாளர்களாகவிருந்த நிலமை வேலாப்போடியும், நிலமை கமலப்போடியும் மரணமடைந்த பின்னர் அவர்களது சகோதரிகளுக்குச் செல்ல வேண்டிய வயல் நிலங்களையும், தோட்டங்களையும் இரு நிலமைப் போடிகளின் பிள்ளைகளும் கையகப்படுத்தியதால் அவர்களுக்கு எதிராக 10236- 29.10.1845ம் இலக்கமும் 16384 -27.02.1871 இலக்கமும் கொண்ட இரு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவற்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் அச்சொத்துக்களின் பெறுமதி எதிரிகளிடமிருந்து வழக்காளிகளுக்குப்பணமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதி வழக்காக, மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனை என்னும் இடத்திலுள்ள தாய்வழிக் காணி தொடர்பில் 07.02.1916ல் மட்டக்களப்பு உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட 4260ம் இலக்க வழக்கு அமைகின்றது. இதில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் முக்குகச் சட்டத்தை அடியொற்றியதாகவே அமைந்திருந்தது.

மட்டக்களப்புத் தேசத்தில் மிக நீண்ட காலமாக வழக்கிலிருந்த தாய்வழி முதுசொம் நடைமுறைகளின் எச்சத்தை 1990ல் நம்மால் அவதானிக்க முடிந்தது. நீண்ட காலத்திற்கு முன்னர் பராரிப்பாளரின் வாரிசுகளிடம் கைமாறிப் போயிருந்த கோவில்போரதீவு தென்கண்டம் - வெளிப்பற்று தாய்வழிக் காணியொன்று1990ல் உரித்துடைய சகோதரிகளின் பெண்மக்களுக்கு வட்டவிதானையார் மற்றும் ஊர்ப் பெரியவர்களால் சமாதானமான முறையில் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளமை மட்டக்களப்பில் தாய்வழிப் பாரம்பரியத்தை தொடர்ந்தும் நிலை நிறுத்துவதாகவே அமைந்திருந்தது.


சான்றாதாரங்கள்: (கள ஆய்வுத் தகவல்களுடன்)

01. Alexandar Jhonstan  - Ceylon Native Laws and Customs
02. Ayapan. A, - Social Revelution in a Kerala History
03. Barbosa Durate - A Description of the Cast of Africa and Malabar
04. Buchan Francis - A Journey from Madras through Mysore, Canara and Malabar
05. Britto.C, - Mukkuvas Law
06. Dennis B Mc Gilvary - Mukkuvar Vannimai
07. Elamkulam Kunchanpllai – Studies in Kerala History
08. Gangatharan.T.K, - Evolution of Kerala History and Culture
09. Innes.C.A, - Malabar
10. Krishna Iyer. L.A, - Kerala and her people       
11. Krishna Iyer.K.V, - A History of Kerala
12. Mathew.K.S, - Societies in  Medival Malabar
13. Padmanabamenan.K.P, - History of Kerala
14. Mark P. Whitakar - East Cost Sri Lankan Tamil Temple
15. Thambiah.S.W, - Laws and Customs of Tamils
16. இளம்குளம் குஞ்சன்பிள்ளை  சேரசாம்ராஜ்ஜியம் ஒன்பதும் பத்தும் நூற்றாண்டுகளில்(மலையாளம்)                                                                      
17. ஷாஷகான். ஏ. என். எம் - புத்தளம் வரலாறும் மரபுகளும்
18. சிவசண்முகம். ஞா       - மட்டக்களப்பு குகன்குல முக்குகர்  வரலாறும் மரபுகளும்
19. தம்பையா குமாரவேலு  தேரோட்டம் (தான்தோன்றீச்சர கும்பாபிஷேக மலர் -1998)
20. பத்மநாதன்.சி - இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்
21. பாவேந்தன். ஸ் - கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள்
22. வெல்லவூர்க் கோபால் - மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் (திருத்திய 3ம் பதிப்பு)
23. வெல்லவூர்க் கோபால் - மலையாள நாடும் மட்டக்களப்பும்
24. வெல்லவூர்க் கோபால் - தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்