மண்முனைக் கண்ணகி தொடர்பில் எழுப்பப்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்

  -கவிக்கோ வெல்லவூர்க்கோபால்-

மண்முனைக் கண்ணகி தொடர்பில் Batty News  வலையமைப்பில் எழுதப்பட்ட எனது இரு கட்டுரைகள் சார்ந்து Arayampathy Net  ஊடாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கும் மற்றும் ஆரையம்பதி எழுத்தாளர் திரு சபாரெத்தினம் அவர்களால் மண்மனை கண்ணகி தொடர்பிலும் உலகநாச்சி தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட முரண்பாடுகள் மற்றும் அவரது முன்மொழிவுகளுக்கும் பெரியார் மூனாக்கானா ஐயா அவர்களது ஆரையம்பதி கண்ணகி பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடர்பிலும் விளக்கமளிக்கவேண்டியது எனது பாரிய கடமையாகும்.

இதில் எனது விளக்கத்தை ஆயிரக்கணக்கான  வாசகர்கள் புரிந்துகொள்ளும் தன்மைக்கு வரலாற்று ஆய்வின் முறையியல் சார்ந்தும்    சமூகவியல் ஆய்வுகளில் வழிபாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான தேடல்களில் வாய்மொழி மூலங்களின் வகிபாகம் குறித்தும் ஆய்வாளர்கள் நடந்துகொள்ளும் தன்மைக்கு உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் எத்தகைய கோட்பாடுகளை முன்மொழிகின்றனர் என்பதையும் இதில் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது. நமது மட்டக்களப்புத்தேச வரலாறுகள் பொதுவாக விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையைச் சார்ந்தவை எனக் கூறமுடியாது. தொல்லியல், கல்வெட்டுக்கள், நாணயவியல், காலவரிசை போன்ற துல்லிய ஆதாரங்கள் நமக்குப் போதுமானவையல்ல. இதன் அடிப்படையில் வரலாறு சார்ந்த தடயங்கள், களஆய்வுகள், வாய்மொழி மூலங்கள் என்பவற்றில் நாம் அக்கறைகொள்ளவேண்டீயள்ளது. ‘ஒரு ஆய்வாளனைப் பொறுத்தவரையில் அவனால் ஆய்வுசெய்யப்படும் வரலாறு அழிந்துவிட்ட கடந்த காலம் ஆகாது. ஒரு வகையில் நிகழ்காலத்திலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கடந்தகாலமே அது’. என்ற கருத்தினை உலகின் தலைசிறந்த ஆய்வாளர் பேராசிரியர் ஈ.எச்.கார் (1892 – 1982) முன்வைப்பதைப் பார்க்கின்றோம். ஒரு வரலாற்றாய்வாளன் வெளிப்படுத்தும் நிகழ்வுகள் பெரும்பாலும் அவன் நேரில் அறியாதவை. அவனது தேடுதல் நிமித்தம்  தன்னால் நம்பத்தக்கவை என்று நம்பப்படும் சான்றுகளால் முடிவு செய்யப்படுபவை. அவனது சிந்தனையில் உதயமாகும் விளைவுகளாலும் அனுபவத்தாலும் தீரமானிக்கப்படுபவை என்பது ஈ.எச். காரின் கூற்றாகும்.

இன்னுமோர் போற்றத்தக்க ஆய்வாளராகக் கருதப்படுபவர் - ஒரு நீண்ட காலம் தென்னிந்திய சமூகங்களைக் கூடவே அவர்களது நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டியலுடன் விரிவாக ஆய்வுசெய்து ஏழு பிரிவுகளில் (07 Volums) Casts and tribes of South India  எனும் நூலினை வெளிக்கொணர்ந்த சமூகவியல் ஆய்வாளர் Thurston Edcar  (1885 – 1935) ஆவர். அவர் அந்நூலின் மிக நீண்ட முன்னுரையில் நம்பிக்கைகளும் வழிபாட்டியலும் சமூகவியலில் செலுத்தம் வலுவான ஆதிக்கம் குறித்து விரிவாகவே குறிப்பிடுகின்றார். தனது அனுபவத்தில் பல விஞ்ஞானபூர்வமான உண்மைகளை நம்பிக்கைகளின்பால் நம்பிக்கைகொண்ட மக்களின் மனோ நிலைக்கு மாறாக ஆய்வில் நிலைநிறுத்த முடியாத தன்மையையும் அவர் சுட்டிக்காட்டவே செய்கின்றார். இத்தகைய சூழல்களில் வாய்மொழி மூலங்கள் வரலாற்றாய்வுகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. எனவேதான் வாய்மொழி மூலங்களை ஆய்வுத் தேடல்களில் சேகரிக்கப்படும் தரவுகளுக்கு பக்கச் சான்றுகளாகவோ அன்றேல் வாய்மொழி மூலங்களுக்குப் பக்கச் சான்றுகளாகத் தரவுகளையோ இணைத்துக்கொள்வது ஆய்வியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் தமிழக ஆய்வாளர் ஆ.சுப்பிரமணியம் அவர்கள் ‘வாய்மொழி வரலாறானது வரலாற்றின் பிரிவாக இல்லாதபோதும் ஒரு வரலாற்று முறையியல் (Methodology)’  எனக் கூறுகின்றார்.

கண்ணகி வழிபாட்டியலில் இணைவுபெறும் தொன்மங்களும் ஐதீகங்களும் மிகவும் நம்பிக்கைக்குரியன. இன்றைய கேரளம் எனப்படும் சேரநாடு உட்பட்ட பண்டைய தமிழகத்திலும் கன்னடத்தின் சில பகுதிகளிலும் இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடத்திலும் மிக ஆழமாக வேரூன்றிய தன்மையினை கண்ணகி பற்றிய தொன்மங்களும் ஐதீகங்களும் வெளிப்படுத்துவதைப் பார்க்கின்றோம். இலங்கையைப் பொறுத்தவரை தமிழில் எழுந்த கண்ணகி இலக்கியங்களைவிட சிங்களத்தில் எழுந்தவை மிக அனேகமானவை. ராஜாவளி, கஜபாகு கத்தா, பத்தினி கத்தா, சிலம்பு கத்தா, பத்தினி படிம, தலுமுற பூஜாவ, பகம கம்புறா, பத்தினி கெல்ல, பத்தினி சிரசபத, பாண்டி நலவ, பத்தினி மாலாவ, ராவண கத்தா, பலங்க கெல்ல, சலம்ப சந்திய, அம்ப விதிம என அவை தொடர்வதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே நம்பிக்கைமிக்க ஐதீகங்களையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துபவை. இந்த வகையில் கண்ணகி வழிபாட்டினை ஒரு குறுகிய வட்டத்தினுள் கட்டுப்படுத்தாமல் நாடு, மொழி, இனம், சாதி, சமயம் அனைத்துக்கும் அப்பாற்பட்டே நாம் பார்க்கவேண்டும்.

மண்முனைக் கண்ணகி:
எனது முதல் கட்டுரையானது தாளங்குடா கண்ணகி பற்றிய பார்வையாகவேயிருந்தது. அதன்போது ஆரையம்பதி கண்ணகி பற்றிய தேடல் அதில் இணைவுறவேண்டிய தேவை எழவில்லை. ஒருசிலரால் வலிந்து இழுக்கப்பட்ட தன்மையில் அடுத்த கட்டுரையை எழுதவேண்டிய சூழல் உருவாயிற்று. ஆய்வுத் துறையில் நாம் தடம்பதித்த தன்மையில் சம்பந்தப்பட்டவர்களது சந்தேகங்களை தீர்க்கவேண்டிய பாரிய கடமை நமக்குண்டு. அதனால்  நாமிங்கு மண்முனைக் கண்ணகி தொடர்பிலும் மண்முனை அரசி உலக நாச்சி தொடர்பிலும் விளக்கமளிக்கவேண்டியுள்ளது. 

தாளங்குடா மற்றும்  மண்முனை தொடர்பில் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே சிலர் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். எழுத்துத் துறையிலும்; ஆய்வுத் துறையிலும் தடம்பதித்தவராக தன்னை இனம்காட்டும் திரு சபாரெத்தினம் தாளங்குடாவையும் மண்முனையையும் குக்கிராமங்களாக அடையாளப்படுத்துகின்றார். அவற்றிற்கு வரலாறு இல்லையென இவர் கருதுகின்றாரா என்பது நமக்குப் புரியவில்லை. அழிபாடுற்று காடுமேடாக காட்சிதரும் ஆட்சி இருக்கைகளையும் புகழ்பெற்ற நகரங்களையும் காணும்நாம் அவற்றிற்கு வரலாறு இல்லையென்று கூறமுடியுமா? அதேபோல் Arayampathy Net  செயல்பாட்டாளர் நான் ஆரையம்பதிபற்றி குறிப்பிடாத நிலையில் அதனுள் வலிந்து இழுக்க முனைவதையும் எனது நடுநிலைப் போக்கை விமர்சிக்க முற்படுவதையும் பார்க்கின்றேன். எருவில் கண்ணகி தொடர்பிலும் களுவாஞ்சிக்குடி கண்ணகிதொடர்பிலும் நாம் முன்வைத்த கருத்து அவற்றின் இன்றைய வழிபாடு சார்ந்ததல்ல. பண்டைய வழிபாட்டினை அடியொற்றியே. அது தொடர்பில் நிறையவே நான் தகவல்களை சேகரித்துமுள்ளேன். இன்றைய நிலையை மையப்படுத்தி அவர் இதில் குழப்பமடையவேண்டியதில்லை.

 தாளங்குடா மூன்று குறிச்சிகளைக் (Division) கொண்ட கிராமம். இதன் முதல் குறிச்சிக்குள்ளேயே மண்முனை அடங்குகின்றது. அந்த வகையிலே தாளங்குடாவிலிருந்து மண்முனையை வேறுபடுத்தமுடியாது என்பதனை சகலருமே ஏற்றுக்கொள்வர். அப்படியிருக்க தாளங்குடாவில் கோவில்கொண்ட கண்ணகியை மண்முனைக் கண்ணகி அல்ல என வாதிடுவது எந்தவிதத்திலும் நியாயமானது அல்ல என்பதனை ஒரு சாமானியனும் ஏற்றுக்கொள்ளவே செய்வான். அவ்வாலயத்தில் பாடப்படும் காவியம், சிந்து, கும்மி என்பனவும் மண்முனைக் கண்ணகி குறித்தே பாடப்படுகின்றது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்தவராகச் சொல்லப்படும் அம்பட்டப் புலவரால் பாடப்பட்ட கண்ணகி காவியத்தின் பதினைந்தாவது பாடலாக முடிவுறும் வாழ்த்துப் பாடலானது:

மங்கையுமை பூமாதும் நாமாதும் வாழி
மற்றுமுள நவகோண சக்திகளும் வாழி
திங்களணி ஈசர்திரு மாலயனும் வாழி
திகழ்கதிரை முருகரிடம் செய்பதமும் வாழி
வங்கமுறு வணிகர்வே ளாளரும் வாழி
வரிசைபெறு குகன்மர புள்ளோர்களும் வாழி
கங்கைதிகழ் மண்முனைக் கண்ணகித் தாயார்
கமலபொற் பாதமலர் வாழ்க வாழியவே!
                            என முடிவடைவதையும் பார்க்கலாம்.

இந்தநிலையில் என்னால் பெறப்பட்ட போதுமான தகவல்களைக்கொண்டு எனது ஆய்வு முடிவை வெளியிடமுடிந்தது. இதன்படி தாளங்குடாவில் விக்கிரக வழிபாடாகவுள்ள கண்ணகி குறித்த களஆய்வில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எனது மீளாய்வுக் கட்டுரையில் இடம்பெற்ற கருத்தினைப் பார்க்கலாம்.
“மண்முனையில் முதன்முதலில் கண்ணகிக்கு கோவிலெடுத்த தன்மையில் அது மண்முனைக் கண்ணகியாக நிலைநிறுத்தப்பட்டதையும் கூடவே அங்கு பாடப்படுகின்ற காவியம் மற்றும் உடுக்குச் சிந்து என்பவற்றின் மூலம் அங்கு அருள்பாலிக்கும் கண்ணகியே மண்முனைக் கண்ணகி எனவும் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது. அத்தோடு அக்கண்ணகி தொடர்பில் அவர்களால் சொல்லப்பட்ட வாய்மொழித் தகவல்களில் தொடக்கத்தே அழகிய பேழையுடன்கூடிய கண்ணகி விக்கிரகம் அங்குள்ள வீரையடி நிழலில் ஒரு மூதாட்டியால் சிறாம்பியமைத்து வழிபாடு செய்யப்பட்டதாகவும் பின்; அங்கிருந்தபேழை களவாடப்பட்டதாவும் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்த ஒரு முக்கியஸ்தரை வினவியபோது மூதாட்டி தனது வறுமையின் நிமித்தம் ஒரு செல்வந்தருக்கு விற்றுவிட்டதாக தனது முன்னோர்கள் வாயிலாக அறியப்பட்டதாகப் பின்னர் கூறப்பட்டது. அந்தப் பேழை தற்போது எங்குள்ளது என்ற வினாவுக்கு அவர்கள் தங்களுக்கு தெரியவில்லையென்றே கூறினர். இதனடிப்படையிலேதான் தாளங்குடாக் கண்ணகியே மண்முனைக் கண்ணகியாக நிலைநிறுத்தப்பட சில சான்றுகள் தென்படுவதை நம்மால்உணரமுடிந்தது. இதனது காலக் கணிப்பில் ஏற்பட்ட சந்தேகம் இதனை முடிந்தமுடிவாகக் கொள்வதற்குப் போதிய காரணங்கள் இல்லாமையால் மேலும் வலுவான ஆய்வுக்கு உட்படுத்தும் அவசியமும் உணரப்பட்டது.” இதுவே எனது கருத்தாகும்.

ஆரையம்பதிக் .கிராமத்தைப் பொறுத்தவரையில் மண்முனை அரசி உலகநாச்சியின் ஆட்சியிருக்கையில் இணைவுற்ற கிராமம். அவளது வழிபாட்டிலிருந்த கோவில்குளம் ஆலயம் ஆரையம்பதியை அண்டியேயுள்ளது. அக்கிராமத்தின் சமூகக்கட்டமைப்பும் அதன் பழமைவாய்ந்த சிறப்பியல்பை வெளிப்படுத்தும் தன்மைமிக்கது. இங்கே கோவில்கொண்டுள்ள கண்ணகி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மிகுந்த அவதானிப்புக்குரியன. இதன் பின்னணியில் ஆரையம்பதியில் பேழை வழிபாட்டிலிருக்கும் கண்ணகியை மண்முனைக் கண்ணகியாக நிலைநிறுத்த மதிப்பிற்குரிய பெரியார் ஆரையம்பதி மூனாக்கானா ஐயா அவர்கள் முன்வைக்கும் தகவல்களை நோக்குவது பொருத்தமானதாகும். 
“மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதிக் கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும் குயில்வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்றபெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்குமுன் உலகநாச்சியாரின் இராசதானியாகவிருந்த மண்முனையில் சில நூற்றாண்டுகளுக்குமுன் ஏற்பட்ட வைசூரி என்னும் பெருநோய் காரணமாக  அங்கிருந்த மக்கள் பல ஊர்களிலும் குடியேறியனர். காத்தான் குடியிருந்த ஆரைப்பற்றைப் பகுதியில் இந்நோய் இல்லாதிருந்தபடியால் மண்முனையிலிருந்து ஏராளமான மக்கள் இங்கு குடியேறினர். இவர்களே மண்முனைக் கண்ணகியம்மன் கோவிலிலிருந்த புனித சின்னங்களை தாளங்குடாவிலிருந்த ஒரு மூதாட்டியிடம் கையேற்று ஆரைப்பற்றையில் கோயில்கட்டி பிரதிஷ்டைசெய்து வருடாவருடம் விழாவெடுத்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்” இதன் தொடர்ச்சியாக ஐயா அவர்கள் அங்குள்ள வழிபாட்டு முறைகளையும் அவ்வம்மனின் அருளாட்சியினையும் ஆரையம்பதியில் கோவில்கொண்ட மண்முனைக் கண்ணகியாள் மஞ்சந்தொடுவாய் கண்ணகி வழிபாட்டில் தடம் பதிப்பதையும் தகவல்களாகத் தருகின்றார்.

மூனாக்கானா ஐயா அவர்கள் ஆரையம்பதி கண்ணகியின் தோற்றுவாயை  தனது கருத்தாக மட்டும் முன்வைக்காமல் ஆய்வாளர்களின் கருத்தாகவும் வெளிப்படுத்துகின்றார். இதன்படி ஆரையம்பதிக் கண்ணகியின் வழிபாட்டிலுள்ள மண்முனைக் கண்ணகியின் புனித சின்னங்கள் தாளங்குடா மூதாட்டியிடம் பெறப்பட்டது என்பதுவும் இது இற்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது என்பதுவும் ஆய்வுக்கான முக்கிய தகவலாக அமைகின்றது. அத்தோடு இதனை மண்முனைக் கண்ணகியாக அடையாளப்படுத்தும் தன்மைக்கு அங்கு பாடப்படுகின்ற மண்முனைக் கண்ணகிக்கான பக்தி இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. கூடவே அங்கு வாழுகின்ற மக்களில் ஏராளமானவர்கள் மண்முனை சார்ந்து வந்தவர்களாகின்றனர்.

மேலும் பேழை தொடர்பில் ஆரையம்பதி எழுத்தாளர் சபாரெத்தினம் அவர்களது கருத்தினை நோக்குவோம்.
01. போர்த்துக்கேயர் காலமான 1627ல் பல இந்து ஆலயங்கள் அழிவுற்ற தன்மையில் மண்முனைக் கண்ணகியின் வழிபாட்டிலிருந்த பேழை அடியாள் ஒருவரால் மறைத்துவைக்கப்பட்டு தாளங்குடா மூதாட்டியின் கைக்கு மாறியிருக்கலாம்.
02. தாளங்குடா மூதாட்டி சிறாம்பிகட்டி தன் அரவணைப்பில் அன்போடு பூசித்துவந்த தெய்வீக அம்சம்பொருந்திய விக்கிரகத்தை (இது பேழையென இடம்பெறவேண்டும்) வறுமையின் நிமித்தம் காசிக்கு விற்றுவிட்டார் என்பது ஒரு அசாதாரண நடவடிக்கையாகும். அது பொருத்தமான ஒரு ஆன்மீகப் பெரியவரிடம் தேடி ஒப்படைக்கப்பட்டதாகவே கொள்ளவேண்டும்.
03. பேழையைப் பெற்றுக்கொண்டவர் சின்னவாத்தியார் என்றழைக்கப்படும் சின்னத்தமபி கணக்குப்பிள்ளை என்பது மறைமுக உண்மையாகும். இவரது காலம் 1850 -1914 ஆகும்

இதில் பேழை வந்த முறையில் மூனாக்கானா ஐயா அவர்களால் தரப்படும் தகவல்களும் எழுத்தாளர் திரு. சபாரெத்தினம் அவர்களால் முன்வைக்கப்படும் தரவுகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் காணலாம். அத்தோடு காலக்கணிப்பில் மூனாக்கானா ஐயா சில நூற்றாண்டுகள் எனக் குறிப்பிட சபாரெத்தினம் அவர்களது காலக்கணிப்பு சின்னவாத்தியார் காலத்துள் - சுமார் 150 ஆண்டுகளுள் அடங்கிவிடுகின்றது. எனினும் இங்கு சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போதுமான காரணங்களைக்கொண்டு ஆரையம்பதி கண்ணகி வழிபாடு மண்முனைக் கண்ணகியின் தொடர்ச்சியே என்பதுவும் அதுவே மஞ்சந்தொடுவாய்வரையும் வியாபித்துள்ளது என்பதுவும் தாளங்குடாக் கண்ணகி வழிபாடும் மண்முனைக் கண்ணகியின் வழிபாடாகவே கொள்ளப்படும் என்பதுவும் நமது ஆய்;வின் வெளிப்பாடாகவே அமையும்.

மண்முனை அரசி உலகநாச்சி:
மட்டக்களப்புத்தேச வரலாற்றில் உலகநாச்சி தொடர்பான கணிப்பீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவன. அனுராதபுர ஆட்சியாளன் மேகவர்ணன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 296- 324) கலிங்கநாட்டின் அரசன் குகசேனனின் புதல்வியான இளவரசி உலகநாச்சியின் இலங்கைவரவு பேசப்படுகின்றது. மட்டக்களப்பின் இரண்டு பூர்வீக வரலாற்று ஏடுகளைக் கொண்டு மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி நடராசா ஐயாவால் தொகுக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்திலும் நான்கு பூர்வீக வரலாற்று ஏடுகளை ஆய்வாளர் சிவராம் அவர்களது துணைகொண்டு இலக்கிய கலாநிதி கமலநாதன் ஐயாவும் அவரது பாரியார் கமலா அம்மணியும் ஆய்வுப்படுத்தி தொகுத்த மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்திலும் இவற்றினை அடியொற்றிவந்த இன்னும் பல வரலாற்று நூல்களிலும் இது இடம்பெறவே செய்கின்றது. 

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் மண்முனை இராச்சியத்தின் உதயத்தை கி.பி 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக்கொள்ள ஏற்புடைய காரணங்கள் தென்படுகின்றன. கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவை முன்வைத்தே இதன் தோற்றம் அமைகின்றது. மட்டக்களப்புத் தேச வரலாற்றில் கலிங்க இளவரசி உலக நாச்சியின் வரவானது முதன்மையும்  மிகுந்த முக்கியத்துவமும் பெற்றதாகும். கலிங்கத்தில் குகசேனனின் ஆட்சிக்காலத்தே அவனது புத்திரி இளவரசி உலகநாச்சியும் தம்பி உலகநாதனும் இலங்கை வந்தமை பற்றியும் அவர்கள் அன்றைய அனுராதபுர ஆட்சியாளனாகவிருந்த கீர்த்திசிறி மேகவர்ணனை  (கி.பி 296 - 324) சந்தித்து புத்தரின் தசனத்தைக் கையளித்த பின்னர்  அவர்கள் இருவரையும்  மட்டக்களப்பின் ஆட்சியாளனாகவிருந்த  குணசிங்கனிடம் மேகவர்ணன்  அனுப்பியதாகவும்  மட்டக்களப்பு வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் ஒருசேர இயம்புகின்றன. இலங்கை வரலாறு மற்றும் சிங்கள – பௌத்த வரலாறுகளும் மேகவர்ணனின் ஆட்சிக் காலத்தில் கலிங்கத்திலிருந்து கலிங்க அரசன் குகசீவனின் மகள்  இளவரசி ஹேமமாலாவும் இளவரசன் நந்தாவும் புத்தரின் தசனத்துடன் இலங்கை வந்து மேகவர்ணனைச் சந்தித்து அதனைக் கையளித்தமை பற்றிக் குறிப்பிடுகின்றன. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘இலங்கையின் உலக மரபுரிமைகள்’ ( World Heritage Sites Of SriLanka) எனும் சுற்றுலாப் பயணிகள் கையேடு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. During the reign of king Kithsri Mevan the Tooth Relic was brought to Sri Lanka by Princess Hemamala, Daughter of King Ghuhaseeva and Prince Dantha

பண்டைய மட்டக்களப்பானது வரலாற்றில் இன்றுள்ள சம்மாந்துறையைக் குறிப்பிடுவதாகும். எனினும் குணசிங்கனின் ஆட்சியிருக்கை பாணமையிலிருந்ததாகவே அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. குணசிங்கனிடம் அனுப்பப்பட்ட உலகநாச்சி கலிங்க இளவரசி என்பதால் சந்ததி உரிமைகொண்டாடி மட்டக்களப்புக்கு (சம்மாந்துறை) வடபால் அம்பிலாந்துறைக்கப்பால் மண்முனைக்கு அவள் அனுப்பப்படுகின்றாள். இதுவே இதுவரையான வரலாற்றுப் பதிவாகும்.

எழுத்தாளர் சபாரெத்தினம் எனது கட்டுரையில் குற்றம் காணவேண்டி மட்டக்களப்பு மான்மியத்தில் இருப்பதாக - இல்லாத ஒன்றை உலகநாச்சியின் வரவாக Batty News ல் இவ்வாறு பதிவுசெய்கின்றார்.
 “ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில் ஆய்வினைத் திசைதிருப்பி பக்கச் சார்பான தீர்மானங்களை எடுக்கத் துணிந்தால் உண்மைநிலை என்றுமே உணரப்படாமல் மறைந்தே கிடக்கும். கட்டுரையாளர் சிற்சில இடங்களில் தனது நிச்சயமற்ற நெகிழ்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவது உண்மைநிலைக்கு உயிரூட்டுவதாக அமைகின்றது. மண்முனைக் குறுநிலத்தை அங்கு அரசியற்றிய இளவரசி உலகநாச்சியாரை ஓரளவு எடுத்தியம்பும் நூல் மட்டக்களப்பு மான்மியம் மட்டுமே. இந்நூலில் அவரது வருகை குறித்துப் பேசுகையில் தாளங்குடாக் கடற்கரையில் பாய்மரக் கப்பல் மூலம் திசைமாறி வந்து கரைதட்டிய பின்னர் அவ்வழியே கொக்கட்டி மரங்கள் சோலையாக வளர்ந்திருந்த மண்திட்டுமுனையை நோக்கி நடந்து சேர்ந்து அங்கே ஒரு குடீயேற்றத்தை நிறுவி ஆட்சிசெய்துவந்தாள் என்றே கூறப்பட்டுள்ளது”

கல்விமான்களும் அறிஞர்களும் நிரம்பப்பெற்ற ஆரையம்பதிப் பேரூரை தனது பெயருக்கு முன்னால் சூட்டிக்கொண்ட எழுத்தாளர் சபாரெத்தினம் எனது ஆய்வில் குறைகாணமுற்பட்டு தனது மேதாவித் தன்மைக்கு இழுக்கைத் தேடிக்கொள்வதையே இதைப்படிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எனினும் அவரறியாத விடையமாக இதனைக்கருதி அவர் குறிப்பிடுகின்ற மட்டக்களப்பு மான்மியம் உலக நாச்சியின் வரவுபற்றி எவ்வாறு கூறுகின்றதெனப்; பார்ப்போம்.

“குணசிங்கன் மட்டக்களப்பைக் கலிபிறந்து மூவாயிரத்து ஐநூறாம் வருஷம் பரிபாலித்து வருங்காலம் கலிங்க ஒரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதம புத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங் கூந்தலுக்குள் மறைவாய் வைத்து கைலயங்கிரியில் குகவம்சத்தார் முற்காலத்தில் எடுத்துக்கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விஜயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக் கண்டு குலகோத்திரமெல்லாம் விளங்கப்படுத்தி புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும் புத்த மதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோசம்கொண்டு உலகநாச்சியைநோக்கி உனக்குவேண்டியதைக்கேளுமென உலக நாச்சியும் அரசனே இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சினேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதியொன்று இந்த உலகநாச்சிக்கு கைலஞ்சமாயீந்து கொடுக்கும்படிவேண்டி உலகநாச்சிக்கு கொடுக்கும் உபகாரங்களையும் இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்குகாசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தை குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மண்ணேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்ந்து மாளிகையுண்டாக்கி உலகநாச்சிக்கு ஈய………” எனத்தொடர்கின்றது. மட்டக்களப்பு மான்மியத்தில் இடம்பெறும் இத்தகவல்களே மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்திலும் இடம்பெறுகின்றது. இதுவிடயத்தில் எழுத்தாளர் சபாரெத்தினம் தானும் குழம்பி வாசகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முற்படுவது தெரிகின்றது.

இனி அவரது முரண்பாட்டுக் கருத்து 02 தொடர்பாக பார்ப்போம்

“இன்றைய தாழங்குடாவில் ‘பெரிய வளவு’ என்ற இடமே உலக நாச்சியாரின் மாளிகை அமைந்த இடம் என்று கற்பிக்கப்படுவதற்கும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஒரு பெரும் நிலப்பரப்பு தொடர்ந்தும் வெறுமையாக வைக்கப்பட்டிருப்பதும் அதனைப் புனித இடமாக நோக்குவதும் அத்துடன் அப்பகுதியில் உள்ள வீதி மாளிகையடித்தெரு எனப் பதிவுசெய்யப்பட்டிருப்பதும் மட்டுமே முழுமையாக அந்த அர்த்தத்தை வெளிக்கொணரும் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள இயலாது. மாறாக அதனை மாளிகையடிக்கு கொண்டுசெல்லும் பாதை என்ற புரிதலையும் ஏற்படுத்தும் அல்லவா? திருகோணமலை வீதி என்று மட்டக்களப்பில் உள்ள பாதைப் பெயரால் அவ்விடம் திருகோணமலை ஆகிவிடுமா என்ன?”

இங்கே எனது முதல் கட்டுரையில் இடம்பெற்ற தகவல்களைப் பார்ப்போம். 
‘தாழங்குடாவின் தொடக்க வரலாறு மண்முனைத் தேசத்தின் தோற்றுவாயை மையப்படுத்தியதாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது. கி.பி 4ஆம் நூற்றாண்டில் மட்டக்களப்புத் தேசத்தில் கலிங்க இளவரசி உலகநாச்சியின் வரவு இடம்பெற்றதைத் தொடர்ந்ததாகவும் இது அமைகின்றது. 2005ல் நாம் இக்கிராமத்தில் ‘மட்டக்களப்பு வரலாறு’ நூலுக்காக மேற்கொண்ட களஆய்வில் உலகநாச்சியின் ஆட்சி இருக்கையானது இக்கிராமத்தில் அமைந்திருந்தமையும் அக்காலம்முதல் இக்கிராமம் மண்முனை என அழைக்கப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டது. கூடவே எருவில், பெரியநீலாவணை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை போன்ற பகுதிகளில் வாழும் தொழில்கூற்றுச் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளிலும் அவர்களில் பெரும்பாலோர் தங்களை தாழங்குடா வயிற்றுவாரெனவும் உலகநாச்சி காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தாங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் படுத்தியுள்ளனர். உலகநாச்சியின் ஆட்சி இருக்கையானது அமைந்த இடம் இன்றும் ‘பெரிய வளவு’ என அழைக்கப்படுவதையும் அதனை அண்டிய வீதி ‘மாளிகையடித் தெரு’ எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியுள்ளது.’

இதில் எழுத்தாளர் சபாரெத்தினத்தின் முரண்பாட்டுக்கு விளக்கமளிக்க முன்னர் 2005ல் வெளிவந்த எனது மட்டக்களப்பு வரலாறு நூலில் (பக்: 32) உள்ள பதிவை குறிப்பிடவேண்டியுள்ளது.   
 ‘உலகநாச்சியால் எடுத்துவரப்பட்ட காசிலிங்கம் கோவில்குளத்தில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இளவரசியின் அரண்மனை தாழங்குடாவில் அமைக்கப்பட்டதாகவும் களஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அங்குள்ள மாளிகையடித்தெரு இதற்கு சான்றாகச் சொல்லப்படுகின்றது. அத்தோடு இன்று இப்பிரதேசத்தே வாழுகின்ற தொழில் பிரிவுச் சமூகத்தினர் வரலாற்று ரீதியாக தங்களை வெளிப்படுத்தும்போது தாழங்குடாவை மையப்படுத்தியே தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.’ 
(இந்த நூல் தொடராக மூன்று பதிப்புகளாக வந்ததுடன்  இரண்டாயிரம் பிரதிகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. ஆரையம்பதியின் முக்கிய கல்விமான்களிடமும் அங்குள்ள நூலகத்திலும் இந்நூலுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் குறித்த தகவலை பிழையான தகவலாக முன்வைக்கும் சபாரெத்தினம் சில வேளை இந்நூலை படிக்காமலும் விட்டிருக்கலாம். )
இத்தகவலை எனது நூலுக்கு முன்னரும் பின்னரும் ஆய்வாளர்களும் கல்விமான்களும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களும் வெளிப்படுத்தியுமுள்ளனர். எது எவ்வாறு அமையினும் ஆய்வுத்துறை சார்ந்த நான் அவரது முரண்பாட்டுக்கு தீர்வு காண்பது அவசியமென்றே கருதுகின்றேன்.

இதில் மாளிகை அமைந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டதல்ல என்பது உண்மையாயினும் கள ஆய்வில் பெறப்படும் தகவல்களை ஆய்வாளனால் புறந்தள்ளமுடியாது. மேலும் இங்கு சொல்லப்படும் மாளிகையடித்தெரு தொடர்பில் அவர் எழுப்பும் கேள்வி இத்தெரு மாளிகையை நோக்கிச் செல்வதாக ஏன் பொருள்கொள்ளக்கூடாது என்பதுவும் மட்டக்களப்பிலுள்ள திருகோணமலை வீதியைக்கொண்டு இங்கு திருகோணமலையுள்ளது எனப் பொருள்கொள்முடியுமா? என்பதாகும் இக்கேள்வியின்மூலம் அவருக்குள் அவரே முரண்பட்டுநிற்பதை என்னால் உணரமுடிகின்றது. பாதைகளைப் பொறுத்தமட்டில் அவை நெடுஞ்சாலைகள், குறுஞ்சாலைகள், கிராம வீதிகள், தெருக்கள், ஒழுங்கைகள் என வேறுபடுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் நீண் தூரத்தைக் கொண்டனவாகவும் இருபெரும் நகரங்களையோ பிரதேசங்களையோ இணைப்பனவாகவும் அமையும். அத்தகைய ஒரு வீதியே திருகோணமலை வீதி. கிராம வீதிகள் அல்லது தெருக்கள் அத்தன்மை வாய்ந்தவையல்ல. அவை அக் கிராமத்துக்குள்ளேயே எல்லைப்படுத்தப்படுபவை. தாளங்குடாவின் மாளிகையடித்தெரு கிறிஸ்தவ ஆலயத்திற்குப் பின்னால் மட்டக்களப்பு – கல்முனை வீதியில் தொடங்கி ஓரு குறுகிய தூரம்வரை செல்கின்றது. அதனைத் தொடர்ந்து போடியார் தெரு அமைகின்றது. அத்தோடு இத்தெரு மாளிகைத்தெரு என்றில்லாமல் மாளிகையடித்தெரு என்றே இடத்தை சுட்டிநிற்கின்றது. இதன்மூலம் இம்முரண்பாடு தீர்க்கப்பட்டிருக்குமென நம்புகின்றேன்.

இக்கட்டுரையை நிறைவுசெய்யுமுன்னர் எனது ஆய்வில் குற்றம்காண முனைபவர்களுக்கு-  குறிப்பாக ஆரையம்பதி எழுத்தாளர் திரு சபாரெத்தினம் மற்றும் ஆரையம்பதிநெற் செயற்பாட்டாளர் இருவருக்கும் ஒரு தயவான வேண்டுகோளினையும் முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் இருவரும் நாமறிந்தவரையில் எழுத்துத்துறை சார்ந்தவர்களாகவும் ஆய்வுத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களாகவும் என்போன்ற  ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் ஆற்றல்மிக்கவர்களாகவும் உங்களை இனம்காட்டும் தன்மையில் ஏன் நீங்களே முன்வந்து நான் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஒரு மீளுருவாக்கத்தை செய்யமுடியாது? வரலாற்றில் மீளுருவாக்கம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால் இது உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையுமல்லவா? அத்தோடு உங்கள் வசதிக்காக மீளுருவாக்கம் குறித்த ஒரு கோட்பாட்டினை மட்டும் உங்களுக்கு முன்மொழிகின்றேன். “மீளுருவாக்கம் என்பது இருப்பதைக்கொண்டு நிலைநிறுத்தப்படவேண்டியதேயன்றி இல்லாததைக்கொண்டு நிரப்புவதாகாது”. 
நன்றி. 













குறிப்பு: இக்கட்டுரைக்கு முன்னதாகவும் பின்னதாகவும் மண்முனைக் கண்ணகி  தொடர்பாக மட்டக்களப்பை இயங்குதளமாகக் கொண்டு இயங்கும் சில இணையத் தளங்களில் மாற்றுக் கருத்துக்களும் வெளியாகி இருந்தன. இருந்தும் இக் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையை மட்டுமே முதுசொம் இணையத்தளத்திற்குாக அனுப்பியிருந்தார். வாசகர்களின் நன்மைகருதியும் கட்டுரையின் முழுமை கருதியும் அக்கட்டுரைகளை வெளி இணைப்பாக கீழே தருகின்றோம். (ஆசிரியர் - முதுசொம்)


கட்டுரை - 1
குடமுழுக்குக் காணும் மண்முனைக்கண்ணகி
கவிக்கோ.வெல்லவூர்க்கோபால்

கட்டுரை - 2
கவிக்கோ.வெல்லவூர்க்கோபால்

கட்டுரை -3
ஆரையம்பதி க.சபாரெத்தினம்

கட்டுரை -4
கவிக்கோ.வெல்லவூர்க்கோபால்

கட்டுரை -5
ஆரையம்பதி க.சபாரெத்தினம்