பறைமேளக்கூத்து– ஆற்றுகையும் காட்சிப்படுத்தலும்


பறைமேளக்கூத்து ஆற்றுகையும் காட்சிப்படுத்தலும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்றகைகள் நிறுவக வளாகத்தில் 10.05.2016  மாலை 07.00 மணிக்கு இடம்பெற்றது.

விலக்குகள் அகல இலக்குகள் நெருங்க தமிழர்தம் தொன்மைக் கலையாம் பறைமேளக் கூத்துக் கலையை புது முழக்கத்தோடு புது யுகம் நோக்கி ஆற்றுப்படுத்தும் கலைப் பயில்வும் காட்சிப்படுத்தலும் எனும் நோக்கிலும் பொருளிலும் இடம்பெற்ற பறைமேளக்கூத்து ஆற்றுகை நிகழ்வு சுவாமி விபுலானந்த அழகியற் கற்றகைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பிலும் SEVALANKA Foundation, SLT -Mobitel, RIKS KONESRTENE, NORWEGIAN EMBASSY அனுசரணையிலும் நடைபெற்றது

பாரம்பரியபறைமேளக்கூத்துக் கலைஞர்களது ஆற்றுப்படுத்தலில் ஐந்துநாட்களாக இடம்;பெற்றுவரும் பறைமேளக் கூத்து பயிற்சிப் பட்டறையின் தொடர் நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பறைமேளக் கூத்துக் கலைஞர்களது வாத்திய வாசிப்பு மற்றும் பறைமேளக் கூத்து நிகழ்வுகளுடன் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள்,உத்தியோகத்தர்கள் பங்குபற்றி ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.

களப் பயிற்சி நிகழ்வுகளின் ஒருசில பகுதிகளை பயிற்சியின் பொருட்டு ஓவியங்களாக்கியுள்ள நிறுவகத்தின் கட்புல தொழில்நுட்பத்துறை மாணவர்கள் தமது அப் படைப்புக்களை ஆற்றுகை வெளியில் காட்சிப்படுத்தியிருந்தமையும்  சிறப்பம்சமாகும்.

தொன்மையும் செழுமையும் மிக்கதாயிருந்தும் சமூகப் படிநிலைப்படுத்தல்கள்,ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பயில்விலிருந்து விடுபட்டுவரும் பாரம்பரியக் கலையான பறைமேளக் கூத்துக்கலையை அக்கலைஞர்கள் கூடி பயிற்சி செய்யவும்,தொடர்ந்து ஆற்றுகை செய்யவும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அதற்கான களத்தை அமைப்பதில் உயர்கல்வி நிறுவனம் அதிலும் அழகியற் கற்கைகள் சார்நிறுவகம் கரிசனை எடுப்பது அவசியம் (கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை நீண்ட காலமாக இத்தகைய முன்னெடுப்புக்களில் முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளமை தெளிவானது.) எனும் அடிப்படையிலும், எழுத்தளவில் மட்டும் இக்கலை ஆற்றுகைகளை அறிதல்களாக்கி வெளியேறும் மாணவர்கள் அதன் உண்மையான இயக்கத்தை அறிவதும் அதன் தார்ப்பரியங்களுடன் பயில்வதற்கான சூழலை உருவாக்கலுமான நோக்கிலும் இப்பயிற்சிப் பட்டறையும் அதன் தொடர்ச்சியான ஆற்றுகையும் காட்சிப்படுத்தலும் நிகழ்வு இடம்பெறுவது இங்குகுறிப்பிடத்தக்கது.