திரு சு.சந்திரகுமார்
மனித வாழ்வில் அவரவர் செயற்படும் செயற்பாடுகளுக்கேற்ப விருதுகளும் வாழ்த்துக்களும் கௌரவங்களும் பாராட்டுக்களும் வருவது அவர்களது செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றது. பாரம்பரிய அரங்கில் தனது தடத்தைப்பதித்த பா.கமலநாதன் அவர்கள் 'கலாபூஷணம்' அரச விருதினை அண்மையில் பெற்றுக் கொண்டார். இவர் பாலிப்போடிக்கும் தங்கப்பிள்ளைக்கும் மகனாக 1948.10.17 அன்று சந்திவெளியில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் கூத்தரங்கில் தேர்ச்சி பெற்றதால், இவரும் அதில் இளவயது முதல் ஈடுபட்டார். அவரது அம்மப்பா கா.வேலுப்பிள்ளை, அவரது தந்தை வே.பாலிப்போடி ஆகியோர் அண்ணாவியாக இருந்தமையால் அதன் பாதிப்பு இவரில் ஏற்பட்டு தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். தந்தையின் வழிகாட்டலுடன் சுயதேடல், ஆர்வம், விருப்பு, கற்றுக் கொள்ளும் திறன் என்பனவும் இவர் பாரம்பரிய அரங்க மற்றும் கலைச் செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்த வழிவகுத்தது.
கூத்துக் கலைக் குடும்பத்தின் பின்னணியால் கூத்தைக் கற்றுக் கொள்ள வழிகிடைத்தது. கூத்துக் கலைக்குடும்பம் இவரது உற்சாகத்தை உயர்த்தியது. கூத்தரங்கில் இவரது செயற்பாட்டை நோக்கும்போது கூத்தாடுதல், பழக்குதல், கதைகளைச் சுருக்கி எழுதுதல், பிரதிபண்ணுதல் ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவர் ஆடிய கூத்தாக அஸ்வமேதயாகம், பரிமளகாசன், சூரசம்மாரம், பவளக்கொடி ஆகிய வடமோடிக் கூத்துக்களும் கண்டிரசன், வாளவீமன், கறுப்பையாப்போடி ஆகிய தென்மோடிக் கூத்துக்களும் அரிச்சந்திரன் நாடகம் விலாசமும் விளங்குகின்றன. நடித்த நாடகங்களாக ஒள்ளுப்பம் நில்லு, மணமகன் தேவை, உயிர்காக்கும் உத்மன,; கரைகாண ஓடம் என்பன குறிப்பிடத்தக்கன.
இவர் பாடசாலையில் பழக்கியவையாக 13ம்போர், சராசந்தன்போர், கீசகன் போர், சுபத்திரை திருமணம், கண்டியரசன், தவநிலை ஆகியவையும் வந்தாறுமூலையில் பிரளாவதி யுத்தமும் குறிப்பிடத்தக்கன. ஊருக்குள்ளும் பாடசாலைகளிலும் கூத்துக்களைப் பழக்கியுள்ளார். இவர் பங்குகொண்ட கூத்துக்களாக வடமோடி, தென்மோடி, விலாசம், மகிடி என்பன முக்கியமானவை.
மகிடிக் கூத்தினை சமகாலம் வரையும் பங்குபற்றி முன்னெடுத்து வருகின்றார். 2013இல் சந்திவெளியில் அம்மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு மகிடிக் கூத்து நடைபெற்றபோது இதில் தமது பங்களிப்பினைச் செய்திருந்தார். 2015இல் செங்கலடிப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டினால் கொம்மாதுறையில் நிகழ்த்தப்பட்ட மகிடிக் கூத்தானது, இவரது இணைப்பாக்கத்துடனும் பங்குபற்றுதலுடனுமே நடைபெற்றது.
இவர் கூத்தரங்கின் கட்புலத்தில் பிரதான இடம் வகிக்கும் உடுப்புக்கட்டுதல், ஒப்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றார். கூத்து உடுப்புக்களை அவரே தயாரித்து மேஸ்த்திரியாராக செயற்படுகின்றார். இவர் உடுப்புக்கட்டும் தொழிலை, 1967 களில் இருந்து தனது தந்தையுடன் இணைந்து மேடை நாடகத்தினூடே ஆரம்பித்தார். தற்போது, தனியாகச் செய்து வருகின்றார். கூத்து, நாடகம், கரகம், கும்மி, கோலாட்டம், மகிடி ஆகியவற்றிற்கும் உடுப்புக்கட்டி ஒப்பனை செய்யும் திறன் படைத்தவர். மட்டக்களப்பு வேலுப்பிள்ளை மேஸ்த்திரியாரிடம் இருந்தே இதனைக் கற்று பின்னர் தனியாக தனது ஆக்கத்திறனுடன் முன்னெடுக்கின்றார்.
வாத்தியக் கருவிகளையும் வாசிக்கும் திறன்படைத்தவர். தோல்வாத்தியங்களான மத்தளம், உடுக்கை, டோல்கி ஆகியவற்றை வாசிப்பவர். அத்தோடு, வாத்தியங்களை இணக்குவதிலும் தனது திறனை வெளிப்படுத்துகின்றார். அத்தோடு, மர வேலைப்பாடுகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். மரங்களைக் கொண்டு உருவங்களைச் செய்து அலங்கரித்து வர்ணம் தீட்டி விற்பவர். இதில் எருது, எலி, மயில், சூரன், திருவாசி, கெருடன், சப்புரம், காவடி என்பன முக்கியமானவையாகும். சாமி ஊர்வலத்திற்கு சிறுவர் சிறுமியரைக் கொண்டு நடன நிகழ்வுகளைத் தயாரித்துக் கொடுப்பவர்.
பாரம்பரிய அரங்கச் சூழலில் தொழில்முறைக் கலைஞராகச் செயற்படுபவராகக் கமலநாதன் காணப்படுகின்றார். குறிப்பாக, உடுப்புக்கட்டுதல், அண்ணாவியாகச் செயற்படல், வாகனங்கள் செய்து கொடுத்தல், நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுத்தல் மூலம் வருமானம் கிடைக்கின்றது.
கலாபூஷணம் பா.கமலநாதன் சுயமான தேடல், முயற்சி, ஆர்வம் என்பவற்றினால் இன்றுவரையும் சரஸ்வதி கலாமன்றம், லட்சுமி கலாமன்றம், கம்பன் கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து தனது கலைச் செயற்ப்பாட்டை முன்னெடுக்கின்றார். உள்ளக அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டினால் கலாசார திணைக்களங்கள் ஒழுங்கமைப்புச் செய்த அரச விருதில் 'கலாபூஷணம் விருது' முக்கியம் பெறுகின்றது. கலாபூஷணம் பா.கமலநாதனின் பணிக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.