திருப்பொற்சுண்ணம்

   
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். இவற்றை ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமாகப் பாடுவர். அந்தவகையில் அண்மையில் புதுக்குடியிருப்பில் நிகழ்ந்த திருவாசக முற்றோதலில் என் மனதைக் கவரும் வகையில்  இந்தப் பாடலை பாடியிருந்தவர் திருமதி வள்ளிநாயகி தியாகராஜா அவர்கள். அவரை மட்டக்களப்பு முதலியார் வீதியில் அமைந்துள்ள  அன்னாரது இல்லத்தில் சென்று முதுசொம் இணையத்தள வாசகர்களுக்காகவும் எமது ஆவணப்படுத்தலுக்காகவும் சந்தித்து ஒளிப்பதிவு செய்துள்ளோம். இந்தப்பாடல்களிலுள்ள சுவையும் அவரது  குரலில் உள்ள இனிமையும் நிச்சயமாக உங்களையும் மகிழ்ச்சிப் படுத்தும் என்ற நம்பிக்கையில் இதைப் பதிவுசெய்கிறேன். பிடித்திருந்தால் கருத்திடுங்கள் மற்றும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆதரவை நல்குங்கள். அது எமது இன்னுமொரு ஒளிப்பதிவுக்கு எம்மை உற்சாகப்படுத்தும்.

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.