மட்டக்களப்பின் நடைக்காவடிப் பாடல் "கழுகு மலை தனில் உறையும் முருக வேளே"

மட்டக்களப்பின் இந்து வழிபாட்டு முறைகள் சில தனித்துவமானவை. ஆகம முறைகளுக்குள் அடங்காதவை .இங்குள்ள மக்களின் ஊனோடும் உதிரத்தோடும் கலந்தவை. இதனை நாம் மக்கள் வழிபாட்டு முறைகள் என அழைக்கலாம்.

மட்டக்களப்பில் வைகாசி மாதம் கண்ணகை அம்மன் கோவில் சடங்கு,, ஆனிமாதம் மாரியம்மன் கோவில் சடங்கு, ஆடி மாதம்காளி கோவில் சடங்கு , ஆவணி மாதம் திரோபதை அம்மன் கோவில் சடங்கு, எனப்பெண் தெய்வச் சடங்குகளும் இதனிடையில் வைரவர், நரசிங்க வைரவர், பெரியதம்பிரான், குமாரத்தன், நாகதம்பிரான், என ஆண் தெய்வச் சடங்குகளும் மட்டக்களபப்பு பூராவும் 5 நாள் தொடக்கம் 7 நாள் வரை நடைபெறும் இறுதி நாள் இச் சடங்குகள்  குளுர்த்தி, பள்ளயம் ,பலி, கும்பம் சொரிதல், தீப்பாய்தல்  என்றபெரும் காட்சிகளுடன் நிறைவு பெறும்.

இங்கு பூசை புரிவோர் பிராமணரல்லாதோரே.. இவற்றோடு ஆகம முறையிலமைந்த  சிவன், திருமால், பிள்ளயார், முருகன் வருடாவருடம் தேர்த்திருவிழா நடைபெறும். இங்கு பூசை புரிவோர் பிராமணர்களாவர். இக்கோவில் பெருவிழாக்களுக்கு பக்தர் காவடி எடுத்தல் வழமை .இங்கு பால்காவடி, நடைக்காவடி, ஆட்டாக் காவடி என மூவகையுள்ளன .முதுகில் முள் குத்தி எடுக்காத காவடி பால்காவடி ஆகும். இவற்றுள் நடைக்காவடியின் போது பாடப்படும் பாடல்களின் இசை பிரமாதமானவை,


பாற் காவடி
நடைக் காவடி











ஆட்டக் காவடி


காவடிமுன் செல்லும் பாடகர் ஒருவர் பின்னால் இப்பாடல்களைப் பாடியபடி நடந்து செல்வார். அவருடன் தொடராக காவடிஎடுப்பவரின் உறவினர்,  நண்பர்கள் நடந்துசெல்வர். மடைபெட்டி தலையில் சுமந்தபடி ஒன்று அல்லது இரண்டு பெண்கள் செல்வர், அது கோவில் நோக்கிச் செல்லும் ஒரு வேக நடைப் பயணம். முருகன்மீது பாடிச் செல்லும் பாடல்கள் பொருட்சுவை. சொல்சுவை, ஓசைச் சுவை உடையவை.

ஒவ்வொரு பாடல் முடிவிலும் "அரோஹரா" எனக் கோசம் எழுப்பி உடன் செல்வோர் அனைவரும் அவ்வுணர்வுப் பிரவாகத்துடன் இணைந்தும் கொள்வர். .அந்த அனுபவத்தை அனுபவித்தால் தான் உணரலாம்.

இவ்வூர்வலத்தில் கூட்டத்தோடு வேகமாக நடந்தபடி ஒலி எழுப்பும் உடுக்கு,பறை,மேள ஒலிகள் நாடி நரம்புகளில் ஊருவேற்றும்.


- கலாநிதி.சி.மௌனகுரு -








கலாநிதி.சி.மௌனகுரு