புதிர் எடுத்தல் , புதிர் உண்ணுதல்

மட்டக்களப்பு தமிழர்களின் சமூகக் கட்டமைப்பானது சமயம் சார் விடயங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்புடையதாகும். இதனால் இம் மக்களிடையே காணப்படுகின்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி அவற்றில் ஏதோ ஓர் வகையில்  சமயம்சார் நம்பிக்கைகள் இயல்பாகவே தாக்கம் செலுத்திவிடுகின்றன. அதேபோன்று இம்மக்களிடையே காணப்படுகின்ற தொழில் முறைகளும் இதற்க்கு விதிவிலக்கன்று.  பெரும்பாலும் இம் மக்களுடைய ஜீவனோபய தொழிலன விவசயத்திலும் காணமுடிகின்றது.
விவசாய செய்கையில் மிக முக்கியமான விடயமாக "புதிர் எடுத்தல்" நிகழ்வு காணப்படுகின்றது. நெற்செய்கை விளைவு நிலையை எட்டியதுமான கதிர்கள் பொன்நிறமானக அறுவடையை ஒட்டியுள்ள காலத்தின் முன்னதாக ஒரு கை பிடியளவு கதிர்களை கொய்து எடுத்து வீட்டு வேலியின் வெளிப்புறத்தே கொழுவி வைப்பர். பின்னர் சுபநாள்,சுபநேரத்தில் குத்துவிளக்கேற்றி ஓர் தட்டில் கொண்டுவந்த கதிர்களை வைத்து அதனுடன் பூக்களும் வைத்து மிகவும் பக்தி பூர்வமாக வீட்டினுள் எடுத்துசென்று சுவாமியறைக்குள் வைத்து வணங்குவர். வீட்டினுள் லக்க்ஷ்மி வருவதான நம்பிக்கையுடன் சகல மரியாதைகளும் கொடுத்து வழிபடுவர். இதனை புதிர் எடுத்தல் என சிறப்பு பெயர் கொண்டு அழைப்பர். புதிர் எடுத்ததன் பின்னர் அடுத்த கட்டமாக "புதிர் உண்ணும்" சம்பிரதாய நிகழ்வு இடம்பெறும். புதிர் உண்ணுதல் எனும்போது அறுவடை செய்த புதிய நெல்லினை வீட்டிற்கு கொண்டுவந்து குற்றி அரிசியாக்கி பொங்கல் பொங்கி,சோறுசமைத்து பூசையறையில் சுவாமிக்கு படையல் செய்து வணங்கி குடும்பத்துடன் குதுகலமாக உண்டு மகிழ்வர். இதன்போது பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஊட்டி மகிழ்வர்.

- வன்னியசிங்கம் வினோதன் -